வாழ்வென்பது பெருங்கனவு-கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!ரோபோட்டிக் கல்வி பயிற்றுநர் எபனேசர் எலிசபெத்

மரியாதைக்குரிய டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு மதுரை காமராஜர் யுனிவர்சிட்டியில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவிருந்த வேளையில் அங்கு வருகைத் தருவதற்கு முன்பு சிறுவயதில் தான் படித்த பள்ளிக்குச் சென்று பார்வையிட்ட அவர், மாணவர்களிடம் பேசுகையில், ‘மாணவர்கள் கனவு காண வேண்டும், அவை பலிக்கும்.

அப்படிப் பலிக்கும்போது அவற்றை செயல்படுத்தி வெற்றி பெற வேண்டும். மாணவர்களே, நெஞ்சிலே துணிவிருந்தால் நிலவிலும் கால் வைக்கலாம். கனவுகள் காணுங்கள். அந்த எண்ணங்கள் செயல்களாக மாறி, வெற்றி பெறச் செய்யும்’ என்றார் என்ற சம்பவத்தை நினைவுகூர்ந்தவராக தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ரோபோட்டிக் கல்வி பயிற்றுநர் எபனேசர் எலிசபெத்.

‘‘ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் அது. அன்று கணித பாடத்திற்கான மாதத் தேர்வு. பொதுவாக ஒன்பதாம் வகுப்பிற்கு பரீட்சைகள் மதியம் தான் நடக்கும். பரீட்சைக்கு பேப்பர் வாங்க வேண்டும். 50 பைசா இருந்தால் வீட்டில் வாங்கி செல்வோம் என்று வீட்டிற்கு வந்தேன். அப்போது எங்க வீட்டின் நிலை... தரித்திரத்தின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஐம்பது பைசாவிற்கு கூட வழி இல்லாத நிலை. அழுது கொண்டே பள்ளிக்கு சென்றது இன்றும் நினைவில் இருக்கிறது. பாதி தூரம் சென்றதும் நடு ரோட்டில் நின்று ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்துவிட்டேன். நானும் படிப்பேன் சமூகத்தில் எனக்கும் ஒரு இடம் கிடைக்கும் பெரிய ஆளா வருவேன் என்ற என் கனவுகள் அத்தனையும் சில்லு சில்லாய் நொறுங்கியது. நமக்கு எல்லாம் படிப்பு தேவைதானா? திரும்பி வீட்டிற்கே ஓடிவிடலாம் என்று திரும்புகையில் காலின் அடியில் மின்னியது ஒரு ஐம்பது பைசா. சரி இன்னைக்கு இந்த பரீட்சை எழுத இந்த 50 பைசா போதும்னு திரும்பி பள்ளிக்கூடத்திற்கே ஓடினேன்.

அன்றைக்கு மனதிற்குள் ஒரு விதை விழுந்தது. கல்வியை என்னால் முடிந்த அளவிற்கு பிறருக்கு கொடுக்க வேண்டும் என்று. பொறியியல் படிப்பை முடித்தேன் பல துறைகளில் வேலை பார்த்தாலும் என்னுள் விழுந்த விதை மறுபடியும் என்னை பள்ளிக்கூடத்திற்குள் அழைத்து வந்தது. நான் வேலைப் பார்த்த நிறுவனம் என்னை பள்ளிகளுக்கு ரோபோட்டிக்ஸ் கற்றுத் தரும் பணிக்கு அனுப்பியது. இன்று ரொம்ப மகிழ்ச்சியுடன் பிடித்த பணியில் தினமும் ஆயிரம் குழந்தைகளுடன் என் வாழ்க்கை நான் ஆசைப்பட்டதைவிட  மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருக்கிறது.அன்றைக்கு திரும்பி வீட்டிற்கே வந்திருந்தால் என் கனவுகள் கல்லறையில் உறங்கியிருக்கக் கூடும்.

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைபுகினும் கற்கை நன்றே என்பது ஆயிரம் உண்மைகள் அடங்கிய சான்றோர் கூற்று. சூழ்நிலை எதுவாயினும் அதைக் கண்டு பின் வாங்காமல் அடுத்த அடி முன் எடுத்து வைத்துக் கொண்டே இருங்கள். கல்வி ஒரு மனிதனை சிந்திக்க வைக்கும், வாழ்வின் வெற்றிற்கு கல்வி உதவும் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியேனும் கல்வியை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். செல்லும் வழிகள் எல்லாம் வலிகள் மட்டுமே நிறைந்ததாக தான் எனக்கும் இருந்தது. தடையாக நின்ற கற்களை தூக்கி போட்டும் பலன் இல்லாத நாட்கள் அவை.

வாழ்க்கையில் சில நேரம் சில கடினமான பாதைகளை கடந்து செல்ல வேண்டி இருக்கும். அந்த பாதை மனவலிமையையும் தைரியத்தையும் பரிசளிக்கும். நான் கடந்து வந்த பாதையும் அப்படித்தான். பல முட்கள் நிறைந்து இருந்தது. என்னுடைய சூழ்நிலை தெரியாமல், ஆசிரியர் என்னை திட்டியும் உள்ளனர். அந்த சமயத்தில், பல நேரங்களில் பள்ளிக்கூடத்திற்குள் செல்லும் தகுதி எனக்கெல்லாம் இல்லையோ என்றே
தோன்றும்.

ஆசிரியர்களே, உங்கள் மாணவர்கள் எந்த சூழ்நிலையிலிருந்து பள்ளிக்கு வருகிறார்கள் என்பதை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. வகுப்பில் இருக்கும் நாற்பது மாணவனையும் ஒன்று போல் பாருங்கள். குழந்தைகளை விசாரியுங்கள். வெளியே மகிழ்ச்சியாக ஓடி விளையாடும் அவர்களுக்குள் ஆயிரம் மன அழுத்தங்கள் உண்டு. கட்டி அணைத்துக் கொள்ளுங்கள். இந்த பூமியில் அனைவரும் நேசிக்கப்பட வேண்டியவர்கள்தான்.  
அந்த வலிகள் வாழ்க்கை என்றால் என்ன என்பதை கற்றுக் கொடுத்தது. தற்போது, மாணவர்கள் மத்தியில் என்னையும் ஒரு ஆசிரியையாக நிறுத்தியுள்ளது.

உங்களுக்கும் ஒரு கனவு இருக்கும். அது பெரியதோ, சிரியதோ அதை பற்றி கவலைப்பட தேவையில்லை. இங்கே தட்டினால்தான் கதவுகள் திறக்கும். தட்டிக்கொண்டே இருங்கள் உங்களுக்கான கதவு திறக்கும் வரை. கனவு நிஜமாகுமா? என்ற சந்தேகத்தை விட முக்கியம் உங்களிடம் கனவு என்னும் விதை இருக்கிறதா என்பதே?  விதை இன்றி மரம் என்பது சாத்தியமே இல்லை. உங்கள் விதையை கையில் எடுங்கள். தினமும் கண்ணாடி முன் நின்று உங்களை பார்க்கும் அந்த தருணத்தில் அந்த விதையை நினைத்துக் கொள்ளுங்கள். கையிலிருக்கும் அந்த விதையை ஒரு நல்ல நிலத்தில் விதையுங்கள்.

தினம் தினம் போராடினால் தான் வாழ முடியும் என்றால் இன்னும் நன்றாக வாழ இன்னும் போராடுங்கள். என் வாழ்க்கையும் அனுதின போராட்டத்தின் நடுவில் தான் இருந்தது. பல்பொடி வாங்க அன்று வழி இல்லை. அடிப்படையில் இருந்த கரிக்கட்டைக் கொண்டு பல்துலக்கி பள்ளிக்கு சென்றேன். எண்ணெய்கும் வழி இல்லை. தினம் தினம் தலைக்கு குளித்து செல்வேன். மாணவர்களுக்கு நான் சொல்வது
இதுதான்.

படிங்க, இன்னும் அதிகம் வாசியுங்கள். உங்கள் புத்தகத்தை கொண்டாடுங்க. அது உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும். புத்தகத்தில் இருப்பதை உங்கள் மனதிற்குள் விதைத்துக் கொண்டே இருங்கள். முயற்சி என்னும் நீரை ஊற்றிக் கொண்டே இருங்கள். ஆயிரம் முறை தோற்பது, குற்ற செயல் அல்ல. விலை கொடுத்து வாங்க முடியாத சிறந்த அனுபவம்.

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அந்த வெள்ளை மாளிகை முன் தினம் ஒருவர் வந்து நிற்பாராம். மற்ற பார்வையாளர்கள் வருவார்கள் சற்று நேரம் நின்று ரசித்துவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் இவரோ தினம் தினம் அந்த வெள்ளை மாளிகை முன் நின்று அதன் அழகை ரசிப்பாராம்.

ரோட்டில் தினமும் விளையாடும் ஆபிரகாம் லிங்கனின் மகன் இதை பல நாட்களாக கவனித்திருக்கிறார். அன்றும் வழக்கம் போல் அந்த பார்வையாளர் வந்து வெள்ளை மாளிகை முன் நின்று அந்த மாளிகையை ரசித்துக் கொண்டிருக்க ஓடி வந்த ஆபிரகாம் லிங்கனின் மகன் அவர் கையை பிடித்து வெள்ளை மாளிகைக்குள் இழுத்துச் சென்றாராம். இதுவரை இவரை தடுத்த காவலாளிகளால் இன்று ஒன்றும் கூற இயலவில்லை.

ஆம். திறக்கும் வரை தட்டுங்கள் அந்த பார்வையாளர் போல். முயற்சித்துக்கொண்டே இருங்கள் நீங்கள் வெற்றி அடையும் வரை’’ என்ற தத்துவார்த்த வார்த்தைகளுடன் முடித்தார் எபனேசர் எலிசபெத்.