எல்லா ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள்!



பலதார மணம் ஒழிப்பு என்பது பற்றி வரலாற்றில் படித்திருக்கிறோம். ஆனால் இன்னும் ஒரு கிராமத்தில் இரு பெண்களை ஆண்கள் திருமணம் செய்யும் பழக்கம் அமலில் உள்ளது. இந்த வழக்கம் பல ஆண்டுகளாக தங்கள் கிராமத்தில் பின்பற்றப்படுவதாகவும், மூதாதையர் காலம் தொட்டு தொடர்ந்து வருவதாகவும் அந்த கிராம ஆண்கள் கூறுகின்றனர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ளது தேரசர் என்ற கிராமம். சுமார் 600 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக ஒரு விநோத பழக்கம் நடைமுறையில் உள்ளது.  இந்த கிராமத்தில் உள்ள திருமணமான அத்தனை ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள்.

இதை மத சடங்கு  அடிப்படையில் அவர்கள் செய்யவில்லை. இந்த பகுதி மக்களின் கலாச்சாரமாகவே பல ஆண்டுகளாக இதனை பின்பற்றி வருகிறார்கள். எந்த மதத்தினராக இருந்தாலும் அந்த ஆணுக்கு இரண்டு மனைவி என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. இங்கு 70 முஸ்லீம் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த ஊர் ஆண்கள் திருமணம் செய்ய விரும்பினால் முதல் மனைவியை திருமணம் செய்த பிறகு கட்டாயம் இரண்டாவது மனைவியையும் திருமணம் செய்ய வேண்டுமாம். ஏன் என்றால் அந்த கிராமத்தில் ஆண் திருமணம் செய்து கொள்ளும் முதல் மனைவிக்கு குழந்தையே பிறக்காது என கூறப்படுகிறது. பலர் தனது முதல் மனைவியின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தும் அது முடியாமல் போனது. அதனாலேயே தங்களுக்கு வாரிசு வேண்டும் என்று விரும்பும் ஆண்கள் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அந்த பெண் மூலமே குழந்தையை பெற்றுக் கொள்கின்றனர்.

கிராமத்தில் நிறைய பேர் தங்கள் முதல் மனைவியுடன் ஒரு குழந்தையைப் பெறுவதற்காக தங்கள் வாழ்க்கையின் கிட்டத்தட்ட பாதி வரை காத்திருக்கிறார்கள். அத்தகைய ஆண்கள், மீண்டும் திருமணம் செய்துகொண்ட போது, அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. ஒருவர் இரண்டு முறை திருமணம் செய்து கொள்ள ஒரே காரணம் இதுதான். இங்கு இரண்டு மனைவிகளும் எந்த வித சச்சரவு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

பெண்கள் குடிநீருக்காக தினமும் 5 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும். ஒரு மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, கர்ப்பமாகி விட்டாலோ அவருக்கு பதில் மற்றொரு மனைவி வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வார். ஆண்கள் 2 திருமணம் செய்து கொள்ளும் இந்த வினோத வழக்கத்திற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

கோமதி பாஸ்கரன்