லாக்டவுனில் சருமப் பராமரிப்புபரபரப்பு, வேலைப்பளு. நேரமின்மை போன்ற காரணங்களால் பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று தங்களை அழகுபடுத்திக் கொள்கின்றனர். கோவிட்-19 வைரஸ் தொற்றால் உலகமே முடங்கிக் கிடக்க, சில அவசியமான மற்றும் அத்தியாவசியத் தேவைகளும் இணைந்தே முடங்கிப் போனது. இதில் பெண்களின் அதீத பயன்பாட்டில் இருந்த அழகு நிலையங்களும் முடங்கி விட்டன.

பெண்கள் வீட்டுக்குள் முடங்கி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் இந்த நேரத்தில் எல்லோருக்கும் நிறையவே நேரம் இருக்கிறது. தொலைக் காட்சிகளிலும், கைபேசியிலும் நேரத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். அத்துடன் இப்போதைய சூழலில் பெண்கள் அழகு நிலையங்களுக்குச் செல்வது அத்தனை பாதுகாப்பானதாகவும் இல்லை.

கோடை வெயில் வாட்டி எடுக்கும் இந்த நேரத்தில், வீட்டில் நமக்கு அருகாமையில் கிடைக்கும் பொருட்களை வைத்து என்னவெல்லாம் செய்து நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து, சருமப் பொலிவையும், கூந்தல் பளபளப்பையும் மீட்டெடுக்கலாம் என்பதை அழகுக் கலை நிபுணர் ஹேமலதா நமக்கு இங்கே விளக்குகிறார்.

குடும்பத் தலைவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி பள்ளி மாணவிகள் என அனைவருமே இப்போது வீட்டில் இருக்கின்றனர். இந்த நேரத்தில் பெண்கள் தங்கள் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாக்க நிறையவே நேரம் இருக்கிறது. கிடைத்த இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி, வீடுகளில் இருக்கும் பொருட்களை கொண்டே நமது ஆரோக்கியத்தையும், அழகையும் மீட்டெடுக்கலாம்.

முகப் பொலிவிற்குவிட்டமின் சத்து நிறைந்த உணவுப் பொருட்களான ஆரஞ்சு, தயிர் இவை இரண்டுமே முகத்திற்கு மிகவும் நல்லது. ஆரஞ்சு பழத்தை உண்டபிறகு அதில் நீக்கப்பட்ட தோலை எடுத்து வெயிலில் காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் கெட்டியான தயிர் இரண்டு டீஸ்பூன் கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போட்டு ஒரு 20 நிமிடம் கழித்து கழுவி விடவும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இதைச் செய்யலாம்.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் (antioxidant) நிறைந்திருப்பதால் சருமத்திற்கு மிகவும் நல்லது.  இத்துடன் தயிரையும் இணைக்கும்போது சருமம் சுத்தமாவதுடன், சருமத்தில் நெகிழ்ச்சி தன்மை (elasticity) அதிகரித்து, கரும்புள்ளிகள் நீங்கும். மேலும் முகத்தில் உள்ள சுருக்கம், கோடுகள் நீங்கி சருமத்துக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும். கண்கள் மற்றும் வாயைச் சுற்றி விழும் கருப்பு தழும்புகள் மற்றும் கோடுகளை நீக்கி சருமம் பளிச்சென தெரியும்.

தயிர் சருமத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுத்து (moisturizer) தோலை மென்மையாக்கும். சென்ஸிட்டிவான சருமம் உள்ளவர்கள் ஆரஞ்சிற்குப் பதில் கெட்டியான பால், தேன், எலுமிச்சை இவற்றை சம அளவு இணைத்து இரவு நேரத்தில் முகத்தில் தடவினால் சருமம் தொடுவதற்கு
மென்மையாகவும், பார்க்க பளபளப்பாகவும் (soft and smooth) மாறும்.

சருமத்திற்கு பால் மிகவும் நல்லது. பாலில் மினரல்ஸ், கால்சியம், மெக்னீஷியம், புரோட்டீன் என எல்லாமும் நிறைந்திருப்பதால் இந்தக் கலவை சருமத்தை டைட் செய்து பொலிவைத் தருகிறது.

பயன்படுத்த வேண்டிய காய் மற்றும் பழங்கள்

மாம்பழம், வாழைப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, கிவி பழங்கள் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. மாம்பழத்தில் வைட்டமின் ஏ, வாழையில் வைட்டமின் ஏ மற்றும் பி நிறைந்திருக்கிறது. இந்தப் பழங்களை உணவாக எடுப்பது மிகவும் நல்லது. இவை சருமத்தை இளமைப் பொலிவோடு எப்போதும் வைத்திருக்கும்.

ஆரஞ்சு மற்றும் கிவி பழத்தில் கொலாஜின் அளவு அதிகமாக இருப்பதால் சருமத்தை தொங்கவிடாமல் இழுத்துப் பிடித்து டைட் செய்கிறது. பப்பாளிப் பழம் சருமத்தை பளிச்செனக் வைக்கிறது. பழங்களை உணவாக எடுத்தபின் அதிலிருந்து நீக்கப்பட்ட பழத் தோலை சேமித்து குளிப்பதற்கு முன்பு சருமத்தில் தேய்த்து குளித்தால் சருமம் பளபளப்புடன் பொலிவு பெறும்.

சருமத்திற்கு ஸ்கரப்பராக ஓட்ஸ்

ஓட்ஸ் பாடிக்கு நல்ல ஸ்க்ரப். இதை உடலில் தேய்க்கும் போது தோலில் உள்ள டெட் செல்கள் உதிர்ந்துவிடும். ஓட்ஸை  மிக்ஸியில் ஒரு அடி அடித்து பவுடராக்கி அத்துடன் கொஞ்சம் சர்க்கரை, ஆலிவ் ஆயில் 2 முதல் 3 டிராப் இணைத்து கொஞ்சம் தண்ணீர் இணைத்து பேஸ்டாக்கி உடலில் தேய்த்து குளித்தால் உடல் மினுமினுப்பாக மாறும். கால் மற்றும் கை முட்டிப் பகுதிகளில் உள்ள கருமை நிறமும் நீங்கும். செருப்பு அணிவதால் பாதங்களில் வரும் கருமையும் நீங்கத் தொடங்கும். கீரையில் வைட்டமின் ஏ, இ, பி, சி என அனைத்து சத்தும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு வகை கீரையுடன், கேரட்டையும் சாப்பிடுவதால் தோலிற்கு பளபளப்பும், நிறமும் கூடுதலாய் கிடைப்பதோடு, சருமப் பிரச்சனைகள் எதுவும் வராது.

கூந்தல் பராமரிப்புக்கு

சீயக்காயில் தொடங்கி, ஷாம்பு, கண்டிஷனர், ஹென்னா என நிறைய உள்ளது. முடி மென்மை மற்றும் பளபளப்புக்கு முட்டையின் வெள்ளைக் கரு, பேபி ஆயில், சர்க்கரை, தேன், அவகேடா, அவகேடா இல்லையெனில் பட்டர் இவற்றுடன் டீ டிக்காஷனை இணைத்து மிக்ஸியில் இந்தக் கலவையை நன்றாக அடித்து கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து தண்ணீரால் சுத்தம் செய்தல் வேண்டும். கூந்தலில் மினுமினுப்பு ஏறுவதுடன் கூந்தல் பார்க்க சாஃப்ட் அண்ட் ஸ்மூத்தாக இருக்கும்.

கொரோனா நோய் தொற்றை பரவாமல் தடுக்க அனைவரும் வீட்டில் இருப்பதால் இவற்றைச் செய்ய உங்களுக்கு நிறையவே நேரம் உள்ளது. ரிலாக்ஸ்டா இருங்க…சரும ஆரோக்கியத்தையும் மீட்டெடுங்கள் என விடைகொடுத்தார்.

மகேஸ்வரி நாகராஜன்