என் மகள் நான் பெற்றெடுத்த ஓவியம்!



பழைய பாடல்களுக்கு டிக்-டாக்கில் அசத்தும் கல்லூரி மாணவி லலிதாம்பிகை

நீங்கள் ஒரு டிக்டாக் பாலோவர் என்றால் ‘பழைய பாடல் லலிதாம்பிகையை’ கண்டிப்பாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். டிக்டாக்கில் இவர் ரொம்பவே பிரபலம். பழம்பெரும் நடிகைகளில் சாவித்திரி, சரோஜா தேவி, பானுமதி, பத்மினி, வைஜயந்தி மாலா என யாராக இருந்தாலும் அவர்களின் முக பாவனைகள் இவர் முகத்தில் அப்படியே வருகிறது. பாவனைகளை சட்சட்டென மாற்றுவதோடு, பழைய பாடலுக்கேற்ற மேக்கப், நடை உடை, நடனம் என அச்சு அசல் நடிப்பில் அசத்துகிறார் இந்த கல்லூரி மாணவி.

பராசக்தி படத்தில் நடிகை குமாரி கமலா நடனத்தில் வரும் ‘ஓ ரசிக்கும் சீமானே’ என்ற பாடலை, கொரோனா வைரஸ் தொற்றுக்கான விழிப்புணர்வுப் பாடலாய் மாற்றி, இவர் நடித்து வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளம், செய்திச் சேனல்களில் வைரல். இந்த ஆர்வம் குறித்து அவரிடம் பேசியபோது…

‘‘இதுவரை 110க்கும் மேற்பட்ட பழைய பாடல் காணொளிகளை நடித்து பதிவேற்றியுள்ளேன். ரசிகர்கள் மத்தியில் இதற்கு நல்லாவே ரீச்சிருக்கு. துவக்கத்தில் ஒரு சில லைக்கில் தொடங்கி இன்று இரண்டு மில்லியன் லைக்குகள்வரை வருகிறது.
ஒன்றரை லட்சம் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். இதுவரை ஒரு நெகட்டிவ் கமென்ட் கூட எனக்கு வரவில்லை. இது  ரொம்பவே மகிழ்ச்சியாகவே இருக்கு’’ என பேசிக்கொண்டே சென்ற இந்த நாட்டியப் பெண்ணின் வயது 21 என்றால் ஆச்சரியம். குரலில் குழந்தைத்தனம் அப்படியே வழிகிறது.

‘‘முகத்தில் எக்ஸ்பிரஷன் கொண்டு வருவது குழந்தையில் இருந்தே எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கதை கேட்டால் அப்படியே அதற்குள் டிராவல் பண்ணத் தொடங்கி, சந்திரமுகியாகவே மாறிடுவேன்’’ எனச் சிரித்தவர், ‘‘பிளாக் அன்ட் வொயிட் லவ்வர் நான். பழைய பாடல்களை ரொம்பவே ரசித்து, பேக்ரவுண்ட் மேக்கப் என எல்லாவற்றையும் கவனித்துப் பார்ப்பேன்.

நான் டிக்டாக் பண்ணத் தொடங்கியபோது துவக்கத்தில் எல்லோரையும்போல் சின்னச் சின்ன வீடியோவாகத்தான் போட்டு வந்தேன். அப்போது இந்த செயலியை மிஸ்யூஸ் பண்றாங்க, தடை செய்யனும் போன்ற பிரச்சனைகள் நிறையவே வந்துகொண்டிருந்தது. எல்லோரும் செய்வதையே ஏன் நாமும் செய்யனும், அதிலிருந்து மாறுபட்டு பழைய பாடல்களுக்கு, பழைய நடிகைகள் மாதிரி வீடியோ செய்து பதிவேற்றேன் என என் அம்மா ஐடியா கொடுத்தார். என் அம்மாதான் எனக்கு எப்பவுமே பேக் போன். சின்ன வயதிலிருந்தே வீட்டில் அம்மாவுடன் பழைய படங்களாகப் பார்ப்பேன்.

வீட்டில் எப்போதும் பழைய பாடல்களாகவே ஓடும்.  அதனால் பாடல்களின் காட்சிகள் மனதில் அப்படியே பதிந்துவிட்டது. பாடல்களை அம்மா எனக்குத் தேர்ந்தெடுத்துத் தருவதோடு, பாட்டின் பின்னணியை கதையாக அழகா விளக்குவார். சொல்லும் விஷயங்களை அப்படியே அப்சர்வ் செய்துகொள்வேன். இந்த பாட்டில் சரோஜா தேவி எம்.ஜி.ஆரிடத்தில் கோவிச்சுக்கிட்டு நிற்பார் என்றால், நான் சரோஜா தேவியின் குழந்தைத் தனமான கோவத்தை அப்படியே மனதிற்குள் ஓட விடுவேன். நடிக்கும்போது இயல்பாய் அந்த பாவனைகள் என்
முகத்தினில் வந்துவிடும்.

பானுமதி என்றால் நடிப்பில் ஒரு திமிர் இருக்கும். சரோஜா தேவி என்றால் குழந்தைத்தனம் தெரியும். வைஜயந்தி மாலா என்றால் அலட்சியமான ஒரு ஸ்டைல் இருக்கும்’’.. எனத் தன் விழிகள் இரண்டையும் அகல விரித்து கண்களை உருட்டி நவரசம் காட்டுகிறார் இந்தக் குட்டிப் பெண்.
‘‘நமது பழம் பெரும் நடிகைகளின் திறமையினை, பழைய பாடல்களின் மகத்துவத்தை எனது அம்மாவோ என் பாட்டியோ டிக்டாக் செய்தால் இத்தனை ரீச் இருக்காது. இளைஞர்கள் உலகமும் அத்தனை எளிதில் திரும்பிப் பார்க்காது. கல்லூரி மாணவியான நான் இதைக் கையில் எடுத்து செய்வதால்தான் இளைஞர்களின் அட்டென்ஷனும் சேர்ந்து எனக்குக் கிடைக்கிறது.

டிக்டாக் செய்து பதிவேற்றும் விசயத்தை எந்த வீட்டிலும் ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் என் அம்மாவோ, டிக்டாக்கை நீ ஏன் சரியான பாதையில், சரியான முறையில் கொண்டுபோய் மக்களிடம் சேர்க்கக் கூடாது என்று ஊக்கப்படுத்தினார். எந்தவொரு டெக்னாலஜியும் பயன்படுத்தும் முறையில்தான் அதன் நல்லதும் கெட்டதும் உள்ளது.’’

‘‘எனக்கு வயது 21. பி.ஏ. கிளாசிக்கல் டான்ஸ் மற்றும் பி.ஏ. இங்கிலீஸ் லிட் படிக்கிறேன். சின்ன வயது முதல் கிளாசிக்கல் நடனம் கற்று வருகிறேன். அதனால்தான் எனக்கு பழைய நடிகைகளின் முக பாவனைகள் நன்றாக வருகிறது. நமது பழம்பெரும் நடிகைகளின் திறமைக்கு கிடைக்கும் மரியாதையாகவே இதை நான் பார்க்கிறேன். திறமை எங்கு இருந்தாலும் அதற்கான அங்கீகாரமும் மரியாதையும் இருக்கும்தானே’’ என்றவர் இதுவரை 18க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி இருப்பதாக தெரிவிக்கிறார்.

பழைய பாடல்களில் நடிகைகள் பயன்படுத்தியது  போன்ற அதே ஆடைகளை எப்படி அணிகிறீர்கள் என்ற நம் வியப்பு மிகுந்த கேள்விக்கு, ‘‘என் குடும்பம் மொத்தமும் ஆர்ட் லவ்வர்ஸ். நான் எப்படி கிளாசிக்கல் டான்ஸரோ அதுமாதிரி என் அம்மா மாலதி ஒரு சிறந்த ஓவியர். பாண்டிச்சேரி அரசின் கலைமாமணி விருது உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார். அம்மா அவரின் சின்ன வயதில் இருந்தே எந்தப் படம் பார்த்தாலும் படத்தின் காட்சிகளை அப்படியே ஓவியமாக வரைந்துவிடுவார்.

பழைய நடிகைகள் அணிந்திருப்பது மாதிரியான அணிகலன்களை எங்கு பார்த்தாலும், அப்படியே வாங்கிக் கொண்டுவந்து சேர்த்து வைப்பார். அம்மா சேர்த்து வைத்த காஸ்ட்யூம்ஸ் எப்படியும் எனக்கு மேட்சாகிவிடும். இதற்கென்று நான் மெனக்கெடுவதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அம்மா ரசித்த விசயங்களை. என் மேக்கப்பில், என் உடை அலங்காரத்தில் கொண்டு வந்துவிடுவோம். என்னிடம் இருப்பதைக் கொண்டே என் திறமையை வெளிப்படுத்துகிறேன்.

பழைய நடிகைகளில் வைஜயந்தி மாலா, சரோஜா தேவி, தேவிகா எனக்கு ரொம்பவும் பிடித்தமானவர்கள்’’ என்றவர், பத்ம விருதை வாங்க வேண்டும் என்பதே என் கனவு இலட்சியம் என்றவரைத் தொடர்ந்து பேசினார் அவரின் அம்மா மாலதி..‘‘நான் பெற்றெடுத்த ஓவியம் எனது மகள். கலை என்கிற விசயத்தை கலைஞர்களே ஊக்குவிக்கவில்லை என்றால் யார் ஊக்குவிப்பார்கள் என்றவர், அவளுக்கு படிப்பும் நன்றாகவே வந்தது. இருந்தாலும் நான் அவளை டாக்டருக்கு படி இஞ்சினியரிங் படி என்றெல்லாம் வற்புறுத்தவில்லை. நீ எதை வேண்டுமானாலும் செய். ஆனால் அதில் தனித்துவத்தோடு இரு என்றேன். அவளுக்கு நடனம்தான் பிடித்தது.

கிளாசிக்கல் நடனம் ஆடினாலும் ஃபோக் நடனம் ஆடினாலும் அதில் ஆழ்ந்த ஆர்வம் காட்டுவாள். காளியாட்டம் ஆடினால் காளியாகவே மாறி நிற்பாள். அசுரர்களாக உடன் ஆடுபவர்கள் இவள் அருகே நெருங்க  பயப்படுவார்கள். அந்த அளவு ஆக்ரோஷமாய் மாறி சூலத்தையே உடைத்து விடுவாள்.  கலைத்தாகம் கொண்டவர்கள் அந்த ஃபீலுக்குள் போக வேண்டும். அப்போதுதான் அது இயல்பாய் வரும். என் மகள் லலிதா நடிப்பில் பாவங்களை ரொம்பவே ரசித்து, அதாகவே மாறுகிறாள். இயல்பிலே அந்தத் திறமை அவளிடம் இருக்கிறது.

அதனால்தான் பாடலின் பாவங்களை டிக்டாக்கில் அப்படியே கொண்டு வருகிறாள்.இவளின் திறமையைப் பார்த்து படத்தில் நடிக்க அழைக்கிறார்கள். குறும்படங்கள், வெப் சீரிஸ், யு டியூப் சேனல், திரைப்பட வாய்ப்புகள் என எல்லாமும் வருகிறது. ஆனால் இதுவரை நாங்கள் எதையும் ஏற்கவில்லை’’ என சிரித்தவாறே விடை கொடுத்தனர் இருவரும்.

மகேஸ்வரி நாகராஜன்