கோவிட்-19 வைரஸ் எதிர்ப்புக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு



கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க நமது அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் அரசு ஊட்டச்சத்து  நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு நோய் தொற்று உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த வகை உணவினை நாமும் நமது உணவோடு சேர்த்து எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்து உடல் ஆரோக்கியத்தைக் காப்போம்.

கற்பூரவள்ளி கசாயம்

தேவையான பொருட்கள்
பெரிய நெல்லி - 3
தேன் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை    
தண்ணீர் - 300 மி.லி
இஞ்சி சாறு - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்.

செய்முறை

கொட்டையை நீக்கிச் சிறுத் துண்டுகளாக நெல்லியை நறுக்கி மிக்ஸியில் நன்கு மைய அரைக்கவும். அதனுடன் சீரகத்தூள், உப்பு, தேன், இஞ்சி சாறு, மிளகுத்தூள், தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான நெல்லி சீரக ஜூஸ் தயார். வெறும் வயிற்றில் காலை மற்றும் மாலை குடிக்கவும்.

குறிப்பு

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலுக்குத் தேவையான மினரல்கள், வைட்டமின் ஏ மற்றும் சி  நெல்லியில் உள்ளன. கொரோனா நோயை எதிர்த்துக் கட்டுப்படுத்தும்.

*நெல்லி ஜூஸ்  வயிற்றிலுள்ள கழிவுகளை அகற்றும்.

*வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த காய்கள், பழவகைகளை உண்பதால் உடலின்  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வெஜ் மிக்ஸ் சப்பாத்தி

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு  - 300 கிராம்
அரைப்பதம் வேக வைத்த முட்டைக்கோஸ் - 50 கிராம்        
மிளகுத்தூள் - தேவையான அளவு  
பீன்ஸ் - 50 கிராம்        
உப்பு - தேவையான அளவு
கேரட் - 1
புரொக்கலி - 50 கிராம்
பச்சை பட்டாணி - 2 மேஜைக்கரண்டி         
எண்ணெய் - தேவையான அளவு  
           
செய்முறை

அரைப்பதம் வேக வைத்த காய்களை மிக்ஸியில் அரைக்கவும். கூடவே உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து அரைக்கவும். இதனுடன் கோதுமை மாவு, 1 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து தண்ணீர் கொண்டு மாவை மிருதுவாக சப்பாத்தி மாவு பதம் போல் பிசைந்து கொள்ளவும். சிறு சிறு உருண்டைகளாக செய்து, சப்பாத்தி போல் திரட்டி சூடானத் தோசைக் கல்லில் சேர்த்து சப்பாத்தியைச் சுட்டு எடுக்கவும். தக்காளி சட்னி (அ) இஞ்சி சட்னியுடன் சுவைக்கவும்.

குறிப்பு

*பாக்கெட்டில் விற்கும் பச்சை கலர் கலந்த பட்டாணியைப் பயன்படுத்த வேண்டாம்.

*புரதச் சத்து நிறைந்த பருப்பு வகைகள், காய்கறிகள், பழவகைகளை உண்பதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.

*புரோக்கலி, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பச்சை பட்டாணி, குடைமிளகாய், புரூஸீல்ஸ், உருளைக்கிழங்கு,  அஸ்பாரகஸ், ஆர்ட்டிசோக் (Arti Choke) ஆகியவைகளில் புரதச்சத்து அதிகம் உள்ளது.

*அதிக வைட்டமின்கள் மினரல்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.

*மட்டன், கோழி, மீன் போன்ற இறைச்சிகளில் புரதச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் நோயுற்ற போது மாமிசத்தைச் சாப்பிட்டால் எளிதில் சீரணமாகாது. ஆனால் சைவ புரதச் சத்து உணவு அப்படியல்ல.

*கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக புரதம், வைட்டமின் டி நிறைந்த முட்டையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தக்காளி முருங்கைக்கீரை மிக்ஸ் மசியல்

தேவையான பொருட்கள்

பெங்களுர் தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 1     
எண்ணெய் - ½ மேஜைகரண்டி
உப்பு - தேவையான அளவு    
முருங்கைக்கீரை - 1 கப்
காய்ந்தமிளகாய் - 2    
சீரகம் - 1 டீஸ்பூன்
பாசிப்பயறு - 50 கிராம்      
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்    
கறிவேப்பிலை - சிறிதளவு     
பூண்டு - 3 பல்  
மல்லித்தழை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை

முருங்கைக்கீரையைச் சுத்தம் செய்து காம்பிலிருந்து உருவிக் கொள்ளவும்.  கடாயில் எண்ணெயைச் ேசர்த்து சீரகம், தட்டிய பூண்டு, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள்,
நறுக்கிய வரமிளகாயைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் முருங்கைக்கீரை, பாசிப்பயரைச் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, தக்காளியைச் சேர்த்து போதுமானத் தண்ணீரைச் சேர்த்து கீரை, பாசிப்பயரை வேக வைத்து இறக்கவும். வேக வைத்த மிக்ஸை ப்ளெண்டரில் அரைத்துக் கொண்டு சப்பாத்தி (அ) சாதத்துடன் சுவைக்கவும்.

குறிப்பு

*சிறுகீரை, செங்கீரை, தண்டுக்கீரை, பசலைக்கீரை, பாலக்கீரையிலும் மசியல் செய்யலாம். கீரையில் உடலுக்குப் போதுமான நார்ச்சத்து, மினரல்கள், வைட்டமின்கள் உள்ளன.

*முருங்கைக்கீரையில் வைட்டமின் ஏ,பிசி,டி,இ.  கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளது. ஊட்டச்சத்துக்களின் ‘One Man Army’  முருங்கைக்கீரை எனலாம். முருங்கைக்கீரையில் தயிரை விட இரண்டு மடங்கு புரதமும்,  ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் சியும், பாலைவிட 4 மடங்கு கால்சியமும், கேரட்டை விட 4 மடங்கு வைட்டமின் A யும்,  பாதாமைவிட 3 மடங்கு இரும்புச்சத்தும்,  வாழைப்பழத்தை விட 3 மடங்கு
பொட்டாசியமும் உள்ளது.

ஃப்ரூட் மிக்ஸ் சாலட்

தேவையான பொருட்கள்

ஆப்பிள் - 1     
திராட்சை   - 100 கிராம்      
மாதுளை   - ½ கப்
கிவி பழம்  - 1    
தேன்  - 1 மேஜைக்கரண்டி
வாழைப்பழம்  -1 (கனிந்தது)    
எலுமிச்சைசாறு  - ½ டீஸ்பூன்     
       
செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் கிவி, வாழைப்பழத்தின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், மாதுளை முத்துக்கள், திராட்சையைச் ேசர்த்து ஒன்றாக மிக்ஸ் செய்யவும். இவையுடன் எலுமிச்சை சாறு, தேனைச் ேசர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். சுவையான சாலட் ரெடி.

குறிப்பு

* சர்க்கரை நோயாளிகள் கூடுமானவரைப் பழவகையை ஜூஸாகக் குடிக்காமல் சாலட் செய்து சாப்பிடலாம்.

* சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. உடலிலுள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

சோயா பீன்ஸ் ஃப்ரை

தேவையான பொருட்கள்

தக்காளி - 3  
சின்ன வெங்காயம் - 1      
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி     
உப்பு - தேவையான அளவு    
சோயா பீன்ஸ் - 200 கிராம்      
நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு   
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு    
பட்டை, கிராம்புத்தூள் - சிறிதளவு     
மிளகுத்தூள் -  ½ டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்.     

செய்முறை

கழுவி சுத்தம் செய்த சோயா பீன்ஸை உப்புச் சேர்த்து தண்ணீரில் நன்கு வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைச் சேர்த்து நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகுத்தூள், சோம்பு, பட்டை, கிராம்புத்தூளைச் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின்பு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியவுடன் வேக வைத்த சோயா பீன்ஸைச் ேசர்த்து மிக்ஸ் செய்து நன்கு பிரட்டி வதக்கி இறக்கவும். சுவையான சோயா பீன்ஸ் ஃப்ரை ரெடி.

குறிப்பு

*புரதச்சத்து நிறைந்த பீன்ஸ், காராமணி, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, ஸ்வீட்கார்ன், பட்டாணி, சுண்டலிலும் ஃப்ரை செய்யலாம். உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

*பூண்டு உடலில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா தொற்றைச் சரி செய்யும் தன்மைக் கொண்டது.

*சின்ன வெங்காயத்திலுள்ள செலீனியம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மற்றும்  அலீசின் உடலிலுள்ள வைரஸ், பாக்டீரியாக் கிருமிகளை அழித்து உடலில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

புரோக்கலி ஃப்ரைடு ரைஸ்

தேவையான பொருட்கள்

புரோக்கலி - 150 கிராம்    
பெரிய வெங்காயம் - 2    
அரிசி - 250 கிராம்   
உப்பு - தேவையான அளவு    
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி  
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்     
கிராம்பு - 2  
மிளகுத்தூள் - தேவையான அளவு    
பட்டை - சிறிதளவு
புதினா - சிறிதளவு     
நறுக்கிய மல்லித் தழை - சிறிதளவு.

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி பூண்டு விழுதைச் ேசர்த்து வதக்கவும். அதனுடன் பொடித்த பட்டை, கிராம்பு, புதினாவைச் சேர்த்து வதக்கவும். உடன் உப்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய புரோக்கலியைச் ேசர்த்து வதக்கவும். அதனுடன் தண்ணீரில் ஊற வைத்த அரிசியின் தண்ணீர் வடித்து வதக்கவும். போதுமான மிளகுத்தூள், தண்ணீர் சேர்த்து வதக்கிய கலவையை குக்கருக்கு மாற்றி 2 விசில் விட்டு குழையாமல் வேக விடவும். நறுக்கிய மல்லித் தழையைச் சேர்த்துப் பிரட்டவும். தயாரான புரோக்கலி ஃப்ரைடு ரைஸை தயிர் பச்சடியுடன் சுவைக்கவும்.  

குறிப்பு

*வரமிளகாய், பச்சைமிளகாய்க்குப் பதில் ஆன்டி வைரல் எனப்படும் மிளகைப் பயன்படுத்துவதால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். சளி, இருமல், நெஞ்சுச் சளி காய்ச்சல் மேலும் சில நோய்க் கிருமிகளை எதிர்த்து அழிக்கும் சக்தி மிளகிற்கு உள்ளது.

*சமையலுக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெயைப் பயன்படுத்தவும்.

கேரட் தக்காளி சூப்

தேவையான பொருட்கள்

கேரட் - 1   
மிளகுத்தூள்- தேவையான அளவு    
தக்காளி - 3 (கனிந்தது)    
உப்பு - தேவையான அளவு    
பெரிய வெங்காயம் - 1/2     
கிராம்பு - 2    
மல்லித்தழை - சிறிதளவு    
பூண்டு - 2 பல்    
தண்ணீர் - 750 மி.லி    
பட்டை -  ½ இன்ச் அளவு.    

செய்முறை

குக்கரில் தண்ணீர் சேர்த்து, நறுக்கிய தக்காளி, வெங்காயம். கேரட், பூண்டு, பட்டை, கிராம்பு, மிளகுத்தூளைச் ேசர்த்து, மிதமான சூட்டில் சுமார் 2 விசில் விட்டு, தக்காளியை வேக வைக்கவும். சூடு ஆறியதும், வெந்த கேரட், தக்காளி கலவையை நன்கு மசித்து வடித்துக் கொள்ளவும். குறைவான சூட்டில் சுமார் 400 மி.லி. வரும் வரை சூப்பைச் சூடு செய்யவும். போதுமான உப்பைச் ேசர்த்து மிக்ஸ் செய்யவும். சூப்பை நறுக்கிய மல்லித்தழையைச் சேர்த்து அலங்கரித்து சூடாகக் குடிக்கவும். தேவையெனில் காரத்துக்கு மிளகுத்தூளைச் ேசர்க்கலாம்.

குறிப்பு

* சூப்பைக் கொதிக்க வைத்தால் அதிலுள்ள சத்துக்கள் வீணாகிவிடும். ஆகவே பாத்திரத்தை மூடியோ (அ) குக்கரில் வைத்தோ சூப்பைச் செய்யலாம்.

* கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், பைபர், குளோரின், நார்ச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ,சி,பி மற்றும் மாவுச்சத்து தக்காளியில் உள்ளன. மேலும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் நோய் எதிர்க்கும் சக்தி அதிகம் கொண்டுள்ளது.

* கேரட்டில் வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி8, சி மற்றும் புரதச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் பொட்டாசியம், சோடியம், மங்கனீஷியம், நார்சத்து, ஸ்டார்ச் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. பல மருத்துவப் பயன்கள் கொண்ட கேரட் உடலின் நோய் எதிர்க்கும் சக்தியைக் கொண்டது.

பனங்கற்கண்டு பால்

தேவையான பொருட்கள்

பால் - 500 மிலி            
மிளகுத்தூள் - ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்        
சுக்குத் தூள் -  1 டீஸ்பூன்              
பனங்கற்கண்டு - 1 மேஜைக்கரண்டி

செய்முறை

பாத்திரத்தில் பாலைச் சேர்த்துக் கொதிக்க விடவும். அதனுள் மஞ்சள் தூள் பனங்கற்கண்டு மிளகுத்தூள் சுக்குத்தூளைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். சுமார் 100 மி.லி அளவு பாலைச் சுண்ட  வைத்துச் சூடாகக் குடிக்கவும்.

குறிப்பு

*பனங்கற்கண்டு மார்புச்சளி, தொண்டைப்புண், தொண்டைவலி, உடல் உஷ்ணத்தை சரி செய்யும். நோய் எதிர்ப்புச் சக்தியை
அதிகரிக்கும் தன்மை கொண்டது.

*உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், கால்சியம், இரும்புச்சத்து, ஜின்க் பொட்டாசியம் பனங்கற்கண்டில் உள்ளன. வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12  பனங்கற்கண்டில் நிறைந்துள்ளது. இரத்த சோகை நோயை சரிசெய்யும் சக்தி கொண்டது.

ப்ரியா பாஸ்கர்
சமையல் கலைஞர்