கொரோனா நிதி திரட்டிய மகளிர் ஹாக்கி அணி..!



உலகமே கொரோனா வைரஸால் முடங்கி கிடக்கும் இவ்வேளையில், பலர் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பல்வேறு விதமான சேலஞ்சுகளை பரிமாறி வருகின்றனர். பொழுது போக்கிற்காக சிலர் செய்து வந்தாலும், இதன் மூலம் மற்றவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த சேலஞ்சினை பயன்படுத்தியுள்ளனர் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர். அதன்படி 18 நாட்கள் நடத்தப்பட்ட சேலஞ்சில் ரூ. 20,01,130 நிதி  திரட்டியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலி வேலை செய்பவர்கள், வெளிமாநிலங்களில் பணிபுரியும் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட நிறைய பேர் உணவின்றி தவிக்கின்றனர்.

இவர்களுக்கு உதவி செய்ய இந்திய ஹாக்கி வீராங்கனைகள் முடிவு செய்து, ஏப்ரல் 17ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட ஃபிட்னஸ் சேலஞ்சில், ஒவ்வொரு வீராங் கனையும் 10 நபர்களுக்கு டேக் செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் ரூ.100 நன்கொடையாக அளித்துள்ளனர். இந்த கிரவுட்ஃபண்டிங் மூலம் (crowdfunding) திரட்டப்பட்ட நிதியினை, ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு அளித்துள்ளனர்.

“இந்த சவாலை நாங்கள் அறிவித்த உடன் உலகெங்கிலும் உள்ள இந்திய ஹாக்கி பிரியர்கள் பங்கேற்று அதற்கான பங்களிப்பை வழங்கியது, உண்மையில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். ஏழைகளுக்கு உதவ இந்த முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இந்திய ஹாக்கி மகளிர் குழு சார்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியாவில் உள்ள பல ஹாக்கி குழுக்கள், முன்னாள் வீரர்கள், லெஜண்ட்ஸ்… போன்றோரின் ஆதரவை காணும் போது மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தெரிவித்துள்ளார்.

துணை கேப்டன் சவிதா கூறுகையில், “ஆரம்பத்தில் நாங்கள் இந்த சவாலை ஏற்க எங்கள் தலைமை பயிற்சியாளருடன் கலந்துரையாடினோம். ஆன்லைன் மூலமாக எவ்வாறு நிதி திரட்டுவது என்பதை ஆலோசித்தோம். இதற்கு மக்களின் ஆதரவு இவ்வளவு தூரம் இருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்கவில்லை. நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு வளர்ந்து வருவதை கண்டோம். பலர், நாங்கள் செய்யும் வேலைகளுக்காக தோளில் தட்டி கொடுப்பதுப் போல், மெசேஜ்கள் அனுப்பியது எங்களை மேலும் ஊக்குவித்தது.

அணியில் பெரும்பாலோர் ஏழ்மை நிலையில் இருந்து வந்தவர்கள் என்பதால், அதன் வலி எங்களுக்கு தெரியும். அதனால் தீவிரமாக வேலை செய்தோம். இதற்கு உறுதுணையாக இருந்த இந்திய ஹாக்கி அணியினர், பயிற்சியாளர் Sjoerd Marijne ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க கடமை பட்டுள்ளோம்” என்றார்.

இந்திய மகளிர் ஹாக்கி அணியினரால் திரட்டப்பட்ட நிதியினை, டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் “உதய்” அறக்கட்டளைக்கு வழங்கினர்.  இந்த நிதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உணவின்றி தவிப்பவர்கள், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளனர். இது தவிர சோப்புகள், சானடைசர்கள் போன்ற சுகாதார செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

அன்னம் அரசு