லாக்டவுனில் சிங்கப்பூர் நகைகள் செய்யலாம்!



தற்போது கல்லூரி பெண்கள் முதல் இல்லத்தரசிகள் வரை உடைகளுக்கு மேட்சிங்கான நகைகளையே அணிய விரும்புகின்றனர். கிரிஸ்டல், டெரெக்கோட்டா, குவில்லிங் போன்ற பொருட்களைக் கொண்டு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு தங்களின் விருப்பத்திற்கேற்ப நகைகளைத்தான் அணிகின்றனர். அந்த வரிசையில் சிங்கப்பூர் பாலிமர் க்ளே நகைகள் தற்போது இந்தியாவிலும் அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது.

சிங்கப்பூர், கொரியா, சீனா போன்ற நாடுகளில் பிரபலமாகி, தற்போது இந்தியாவிலும் பாலிமர் க்ளே நகைகள் ட்ரெண்டிங்கில் உள்ளன. இதற்கு முக்கிய காரணம், இந்த நகைகள் பெண்களுக்கு அழகும் ஜொலிஜொலிப்பும் சேர்ப்பதுடன், அணியும் போது எடை குறைவாக இருப்பதால் பல பெண்கள் இதை விரும்புகிறார்கள். பாலிமர் க்ளேவில் செய்யப்படும் பெரிய பிரமாண்ட நகைகளும் கூட குறைந்த எடையில், பெண்கள் அதிக நேரம் அணியும் விதத்தில் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கும் இது கச்சிதமாக பொருந்துகிறது.

இந்த சிங்கப்பூர் நகைகளைச் சென்னையில் அறிமுகம் செய்து விற்பனையும் செய்து வருகிறார் சங்கீதா அருள்மொழி. இவர் சிங்கப்பூரில் வசித்து வந்த போது, பாலிமர் க்ளேவில் நகைகளும் பொம்மைகளும் செய்ய பிரத்யேகமான பயிற்சி எடுத்துக்கொண்டார். கணவர் வேலை மாற்றலாகி சென்னைக்கே வந்ததும், குழந்தைகளும் வளர்ந்து பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

அப்போது வீட்டில் தனக்கென்று அதிக நேரம் கிடைத்ததால் ஆன்லைனில் தொழில் தொடங்கிவிட்டார். பாலிமர் க்ளே நகைகளுடன், டெரெக்கோட்டா, குவில்லிங் எனப் பல வகையான ஆபரணங்களை வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் உடைகளுக்கு ஏற்ப விற்பனை செய்து வருகிறார். விரும்பியவர்களுக்கு இதற்கான பயிற்சியும் அளித்து வருகிறார்.

‘Golden Fish Creations’ என்ற பெயரில் இதனை ஆன்லைன் முறையில் பயிற்சி அளித்து வருகிறார். இதில்  கம்மல்கள், வளையல்கள், செயின்கள் போன்ற நகைகளை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கிறார். இதற்காகவே பிரத்யேகமான பாலிமர் க்ளேவை ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைக்கிறார். பாலிமர் நகைகள் பல நாட்கள் நீடிக்கும் என்பதால் இதன் விலை கொஞ்சம் அதிகம்தான். ஆனால் இதனை தயாரிப்பது எளிது.

பாலிமர் க்ளேவில் நமக்கு தேவையான டிசைனில் நகைகள் அல்லது பொருட்கள் செய்து, அதை மைக்ரோ அவன் அடுப்பில் (oven) குறிப்பிட்ட நேரம் சூடாக்கி எடுக்க வேண்டும். அவ்வளவு தான் நமக்கு விருப்பமான நகைகள் தயாராகிடும். இவை பல வண்ணங்களில் வருவதால், நாம் தனியாக பெயின்டிங் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. விரும்பிய நிறங்களைக் கொண்டு நகைகளை நாமே தயாரிக்கலாம்.

கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து தன் தொழிலில் முழு கவனமும் செலுத்தி வரும் சங்கீதாவிற்கு, இந்த கொரோனா ஊரடங்கு அவரின் தொழிலில் சிறிய தடையை ஏற்படுத்தியது. லாக்டவுன் சமயத்தில் பெரிய அளவு தொழில்கள் மட்டுமல்ல பல சிறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கொரியர் சேவை தடைப்பட்டுள்ளதால் பல பொருட்கள் தயாராகியும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப முடியாமல் இருக்கின்றன.

ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் தனக்கான ஒரு வாய்ப்பாக மாற்றியுள்ளார் சங்கீதா. பொருட்கள் விற்பனை செய்ய முடியாவிட்டாலும், பயிற்சி அளிப்பதில் இருக்கும் தடையைத் தொழில்நுட்பம் மூலம் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார். லாக்டவுன் சமயம், பல பெண்கள் வீட்டில் பொழுதுபோகாமல் அடைந்திருக்கும் நேரம், உபயோகமாக ஒரு கலையை கற்க, ஆன்லைனில் வாட்ஸப் வீடியோ கால் மூலம் பயிற்சியளிக்கிறார் சங்கீதா.

தினமும் காலை இரண்டு மணி நேரமும், மாலை இரண்டு மணி நேரமும் ஒருவருக்கென ஒதுக்கி ஒரு வாரத்திற்கு பயிற்சியளிக்கிறார். ஏற்கனவே பாலிமர் க்ளே வாங்கி வைத்திருப்பவர்களுக்கு இப்பயிற்சிக்கு முழு பணமும்,  பாலிமர் க்ளே இல்லாதவர்களிடம் பாதி பணம் மட்டுமே பெற்றுக்கொண்டு பயிற்சி அளிக்கிறார். இதில் பல பிரிவுகள் இருப்பதால், அதற்கேற்ற வகையில் பயிற்சிக்கான கட்டணமும் நிர்ணயித்துள்ளார்.

ஒரு சமயத்தில் ஒருவருக்கு மட்டும் பயிற்சியளிப்பதால், சந்தேகங்களைத் தெளிவாக பூர்த்திசெய்து, முழு கவனத்துடன் பயிற்சி அளிக்க வசதியாக உள்ளது. பயிற்சி காலம் முடிந்த பிறகும் இவர் சந்தேகங்களைத் தீர்த்து வைத்து உதவுவதால், பலரும் விரும்பி இவரையே மறுபடியும் தேர்ந்தெடுத்து பயிற்சி பெற்றுக்கொள்கின்றனர். பாலிமர் க்ளே இல்லாதவர்கள், பொருட்கள் வாங்கிய பிறகு அதை செய்யும் போது சந்தேகம் ஏற்பட்டால், அதையும் நிவர்த்தி செய்து வைக்கிறார்.

ஆன்லைனில் இருக்கும் சில பயிற்சி வீடியோக்கள் பார்க்கும்போது, இதைச் செய்வது கடினமாகத் தெரியும். அதனால் பாலிமர் க்ளேவில் பொருட்கள் நகைகள் செய்வது கடினம் எனப் பலர் அதை கற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் சங்கீதா சொல்லித்தரும் சின்ன டிப்ஸ் மூலம், இதைச் சுலபமாக கற்றுக்கொள்ளலாம். முதல் இரண்டு வகுப்புகளிலேயே இதன் அடிப்படைகளை கற்றுக் கொள்ளலாம். புதிய டிசைன்கள், சிக்கலான வடிவமைப்புகள் பற்றித் தெரிந்து கொள்ளக் கூடுதல் வகுப்புகள் உண்டு.  

சங்கீதாவிடம், சென்னையில் வசிக்கும் பெண்களைத்தாண்டி, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண்களும் பாலிமர் க்ளே கலைப்பொருட்கள் செய்யக் கற்றுக்கொள்கின்றனர். அந்த நாடுகளில் பாலிமர் க்ளே சுலபமாக கிடைப்பதால், அங்கும் இதற்கு நல்ல தேவை இருக்கிறது.

சங்கீதாவின் வகுப்புகள் ஏற்கனவே சுயதொழில் செய்பவர்களுக்கும் அல்லது இந்த சமயம் சுயதொழில் ஆரம்பிக்க நினைக்கும் பெண்களுக்கும் வீட்டிலிருந்தே பயிற்சியும் எடுத்து தொழிலும் தொடங்க நல்ல வாய்ப்பாகவும், இந்த ஊரடங்கு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றவும் உதவியாய் இருக்கும்.

செய்தி: ஸ்வேதா கண்ணன் 
படங்கள்:  சிவக்குமார்