நியூஸ் பைட்ஸ்
லாக்டவுனில் கிணறு வெட்டிய குடும்பம்
கேரளாவில் கண்ணூர் என்ற இடத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று லாக்டவுன் நேரத்தில் பொழுதுபோக்க என்ன செய்யலாம் என்று யோசித்த போது, நீண்ட நாட்களாகக் கிணறு வெட்ட ஆட்களும் நேரமும் இல்லாததை நினைத்து, இப்போது இருக்கும் நேரத்தில் கிணறு தோண்டிவிடலாம் என்று, உண்மையிலேயே ஒரு கிணற்றை உருவாக்கியுள்ளனர். ஷாஜி என்பவர் தன் மனைவி, தம்பியுடன் இணைந்து தனது மகனும் மகளும் உதவ ஐவருமாக இணைந்து 15 நாட்களில் கிணறு தோண்டியுள்ளனர்.
 தற்போது ஆட்டோ டிரைவராக இருக்கும் ஷாஜி இதற்கு முன் கிணறுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் இதைச் சுலபமாக செய்து முடித்திருக்கிறார். இதன் மூலம் ஷாஜி குடும்பத்தினர் 1.5 லட்சம் பணத்தை சேமித்துள்ளனர். இவர்களை போன்றே கேரளாவில் பலரும் புதிய கிணறுகள் வெட்டியும், பழைய கிணறுகளைச் சுத்தம் செய்து புதுப்பித்தும் தங்கள் லாக்டவுன் நேரத்தை பயனுள்ளதாக மாற்றியுள்ளனர்.
கோயில் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்த ஆசிரியை
திருப்பத்தூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை கற்பகவல்லி. திருப்பதி கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக நாற்பது ஆயிரம் ரூபாயை சேர்த்து வைத்திருந்தார். ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி கோயில் மூடியிருப்பதாலும், தன் பள்ளியில் பயிலும் மாணவர்களும் அவர்களின் குடும்பமும் வேலையை இழந்து வறுமையில் வாழ்வதால், கோயிலுக்கு செலுத்தவிருந்த காணிக்கையை மாணவர்களின் குடும்பத்திற்கு அளித்துள்ளார். ஒருவருக்கு ஆயிரம் என மாணவர்களின் குடும்பம், தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 40 பேருக்குத் தான் சேமித்து வைத்திருந்த நாற்பது ஆயிரத்தை வழங்கி உதவியுள்ளார்.
மருத்துவ தந்தை-மகளுக்கு அஞ்சலி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யேந்தர் தேவ் கண்ணா (78), அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். அவரது மகள் ப்ரியா கண்ணாவும் (43) அதே மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களைப் பலிவாங்கும் நிலையில், பல மக்களை போராடி காப்பாற்றிய இருவரும், கடைசியில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மருத்துவர் சத்யேந்தர், அமெரிக்காவின் நியூஜர்சியில் புகழ்பெற்ற சிறந்த மருத்துவராக பணியாற்றியுள்ளார். இவரின் மூன்று மகள்களும் கூட மருத்துவர்கள்தான். தன்னையும் தன் குடும்பத்தையும் மருத்துவத்துறையில் ஈடுபடுத்தி பலரின் உயிரைக் காப்பாற்றிய தந்தை-மகள் இருவருக்கும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இத்தாலியில் கோவிட்-19 ஆலோசனைக் குழுவில் பெண்களுக்கு அழைப்பு
இத்தாலி பிரதமர் கியூசெப் காண்டே, கொரோனா பாதிப்பிற்கு பின் எடுக்கப்படும் முக்கிய மீட்பு திட்டங்களுக்கான குழுவில் அதிக பெண் உறுப்பினர்களை ஈடுபடுத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பிற துறைகளிலும் ஆண்-பெண் சமத்துவத்தை கடைப்பிடிக்கும் விதத்தில் பெண்களுக்கும் அவர்களுக்குரிய இடத்தை ஒதுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு அடுத்து பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க, அந்த துறைகளில் சிறந்து விளங்கும் பெண் களும் நிச்சயம் ஆலோசனைக் குழுக்களில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார்.
பெண் உறுப்பு சிதைவை, சட்டப்படி குற்றமாக்கியது சூடான்
சூடானில் பத்தில் ஒன்பது பெண்களுக்குப் பிறப்புறுப்பு சிதைவு நடைபெறுகிறது. 5 வயதிலிருந்து 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்த வலி மிகுந்த சடங்கை சூடான் கடைப்பிடித்து வருகிறது. இதனால் பெண்கள் உடலளவில் மட்டுமின்றி உளவியல் ரீதியாகவும் பல வலிகளையும் பாதிப்புகளையும் சந்திக்கின்றனர். இச்சடங்கைப் பல ஆண்டுகளின் போராட்டத்திற்கு பின்னர் தற்போது சட்டப்படி குற்றமாக்கியுள்ளது சூடான் அரசு. இதை மீறுவோருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உதவி ஆட்சியராகப் பொறுப்பேற்கும் முதல் பழங்குடி பெண்
2018 ஆம் ஆண்டில் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்ற முதல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண் என்ற பெருமையை தண்யா சுரேஷ் பெற்றிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த 26 வயதான தண்யா, தற்போது கோழிக்கோட்டில் உதவி கலெக்டராக (பயிற்சியில்) சேர உள்ளார். அவரது பெற்றோர்கள் தினசரி கூலித் தொழிலாளர்களாக பணியாற்றிக்கொண்டே இவரைப் படிக்க வைத்துள்ளனர்.
தண்யா, தனது மூன்றாவது முயற்சியில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். இதுகுறித்து பாராட்டிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “தண்யாவின் வெற்றி, இவரைப் போன்ற பல பெண்களுக்கும், குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி பெருமையளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்வேதா கண்ணன்
|