எனக்கான சுதந்திரத்தை யாராலும் தரமுடியாது! ரோஜா ஆதித்யாகொண்டாட்டமாக இருந்தாலும் சரி, பிரச்சினையாக இருந்தாலும் சரி அல்லது இன்னும் வேறு ஏதாவதாக இருந்தாலும் சரி… சொல்லப்படும் நபர்களுக்குப் புரியும் படி சொன்னால்தான் அதில் அர்த்தம் இருக்கிறது. இவ்வாறாகச் சொல்வதற்குக் கலையின் பங்கு மிகப்பெரிய அளவில் துணை புரிகிறது. அதிலும் பாடல்கள் மூலம் தொன்று தொட்டு சொல்லப்பட்டு வருவது  நம் வரலாறு. அந்த வரலாற்றில் தனது பெயரைப் பதிக்க போராடி வருகிறார் “மக்கள் பாட்டு” ரோஜா ஆதித்யா.

“எல்லோரும் எப்படி வேலைக்காகச் சென்னைக்கு வருவார்களோ அதேபோல் நானும் என் சொந்த ஊரான சேலத்தை விட்டு வந்தேன். ஐடி-நிறுவனத்தில் மூன்றரை ஆண்டுக் காலம் வேலை. அங்குச் சரியாக வராததால், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரியாலிட்டி ஷோக்களில் பேக் வோக்கல்ஸாக கொஞ்சக் காலம் இருந்தேன். தற்போது தனியாகப் பாடல்கள் எழுதிப் பாடி வருகிறேன்” என்று தன்னை சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்ட ரோஜா, தனக்குப் பாடல் மீது ஏற்பட்ட ஆர்வம் பற்றிக் கூறினார்.

‘‘சின்ன வயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் அதிகம். அதனாலயே பாடல் கம்போஸ் செய்வது இயல்பிலேயே இருந்திருக்கிறது. அதை வெளியே  கொண்டு வருவதற்கான சரியான வழிகாட்டுதல் என் சூழலில் இல்லை. பாட்டில் ஆர்வம் இருக்கிறது என்று சொன்னாலும் கூட, அதை வைத்து பாட்டு டீச்சரா போ அல்லது வேறு வேலைக்கு போ என்று சொல்லக்கூடிய நிலையில்தான் என் பின்னணி. ஆனால், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது நமக்குதானே தெரியும். அதனால்தான் அங்கிருந்து நகர்ந்து வெளியே வந்தேன்.

பாட்டுக் கற்க வேண்டுமென்று அப்பாவிடம் சொன்னேன். ஊரிலேயே ஒருத்தரிடம் சேர்த்துவிட்டாங்க. அங்க ஆடலும், பாடலும் கற்றேன். தெரியாத நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வது என் இயல்பு. அதனால் தான் ஒவ்வொரு சூழலில் நான் கேட்ட, பார்த்த பாடல்கள் என்னுள் பல மாறுதல்கள், தாக்கங்களை ஏற்படுத்தின. தேடல்களையும் அதிகப்படுத்தின. ஆனால், இதுதான் வாழ்க்கை என்று தீர்மானித்தது கிடையாது. பிடித்த ஓர் விஷயம் வாழ்வின் அங்கமாக மாறுவது இயல்புதானே” என்று கூறும் ரோஜா, தனது முதல் பேண்டு அனுபவத்தை கூறினார்.

“ஐடி வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, இசையால் பலர் இணைந்து ஒரு பேண்டு உருவாக்கினோம். அதன் மூலம் சில நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த போது ஒரு பாடகியாக பலரிடம் அறிமுகமானேன். தொடர்ந்து பல பாடல்கள் பாடி வந்த போது, குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு நாட்டுப்புறப் பாடல்கள் மீது தீராத காதல் உருவானது. அந்த சமயத்தில்தான் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமானது. அதை மையமாக வைத்துப் பல பாடல்கள் எழுதிப் பாடினேன்.

இயற்கை சார்ந்த வேலைகளில் அதிக ஈடுபாடு காட்டினேன். பனை மரம் பற்றிய விழிப்புணர்வை என் பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டு சென்றேன். நாம் காசு கொடுத்து வாங்கும் பொருட்களில் நல்லது, கெட்டது இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ளவேண்டும். அதேபோல் இடைத்தரகர்கள் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் கீரை விற்றிருக்கிறேன். அந்த சமயத்தில்தான் விவசாயம் என்றால் என்ன என்பதும் தெரிந்து கொண்டேன். இயற்கை விவசாயம் பற்றிப் பல பாடல்கள் எழுதிப் பாடியிருக்கிறேன்.

ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளாமல் அல்லது முழுமையாக அதைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் பலர் பாடல்கள் எழுதுகிறார்கள், பாடுகிறார்கள். ஆரம்பத்தில் நானுமே அப்படிதான் இருந்தேன். ஆனால், அது சரியானதா, முழுமையடைந்ததா என்று பார்த்தால் அவ்வாறு இருப்பதில்லை என்பதை ஒவ்வொரு அனுபவத்திலும் கிடைத்தது” என்கிறார் ரோஜா.

“எந்த ஒரு பொருளாதாரம் சார்ந்து வேலையில்லாத போது, யூ டியூப் மூலமாகப் பலர் தங்களை நிரூபித்து வருவதைப் பார்த்த நான், ஏன் நாமும் நமது திறமையை இந்த தளத்தில் நிரூபிக்கக் கூடாது என்று, “மக்கள் பாட்டு” என்ற பக்கத்தை ஆரம்பித்தேன்” என்று கூறுகிறார் ரோஜா.

“ஒரு சில விஷயங்களில் ஓரளவுதான் தெளிவாக முடியும். கால சூழல் என்று ஒன்றிருக்கிறது. ஒரு பிரச்சினை வருகிறது என்றால் உடனடியாக ஆக்‌ஷன் எடுப்பதைத் தாண்டி, களத்திலிருந்து பாடல்கள் எழுதிப் பாடும் போது முழுமையடைகிறதாக நம்புகிறேன். அப்படிதான் சமீபத்தில் சிஏஏ போராட்டத்தின் போது பாடிய பாடல்கள். மக்கள் பாட்டு என்பது என் வாழ்வின் லட்சியம் கிடையாது. என்னுடைய திட்டம் தனிப்பாடல்கள் நிறைய பாடனும், லைவ் ஸ்டேஜ் நிகழ்ச்சிகள் பண்ணனும்.

தற்போது பல குழுக்களுடன் இணைந்து வேலை செய்து வருகிறேன். அங்கு நிறையப் பாடல் எழுதக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து எனது எழுத்துகளும் கொஞ்சம் பட்டை தீட்டப்பட்டிருக்கிறது. தற்போது திரைப்படங்களிலும் பாடி வருகிறேன்.

பெண்ணியம் சார்ந்த கருத்துக்கள் பேசினால் கூட நாம் முதலில் பெண்ணியமாக இருக்கிறோமா என்கிற கேள்வி கேட்பது அவசியம். நிறைய விஷயங்களை அனுபவித்தால், படித்தால் தான் அது பற்றிப் பேச முடியும். பெண்ணியம் என்பது என்ன என்று என்னிடம் கேட்டால் அதை உணர்ந்து தான் சொன்னால் சரியாக இருக்கும். எந்த விஷயமுமே அப்படிதான். சுதந்திரம் என்று எனக்கு யாரும் வாங்கி தரமுடியாது, கொடுக்க முடியாது. நானாகப் போராடி வாங்கிக் கொண்டால்தான். அந்த சுதந்திரமுமே யாரையும் பாதிக்காத வகையிலிருந்தால் நல்லது.     

வெளியில் போகக் கூடாது என்று சொல்லும் கூட்டத்திடமிருந்து வெளியே போக ஆரம்பித்திருக்கிறோம். அப்படி வெளியே போனால் என்ன சிக்கல் இருக்கிறது என்பது நமக்குத்தான் தெரியுமே தவிர நமக்குப் பின் இருப்பவர்களுக்குத் தெரியாது. எந்த ஒரு சூழலையும் எதிர் கொண்டு கற்பது முக்கியம். அப்படி எதிர் கொள்ளாமல் எதைப் பற்றியும் பேசக் கூடாது. அது அர்த்தமற்றது.

எந்த மாதிரி சூழலில் நான் இருக்கிறேன் என்பதைப் பேசினாலும், எதிர்காலத்தில் அது எப்படிவேண்டுமானாலும் மாறலாம். அதனால் வெளியே எங்க வேணா போலாம் என்று எல்லா பெண்களையும் சொல்ல முடியாது. அது அவர் அவர்களின் அனுபவம், சூழல் பொறுத்தது. அப்படியே உங்களுக்குப் பிரச்சினை என்றால், அதை உங்கள் தோழியிடமோ, பெற்றோரிடமோ தயங்காமல் உரையாடும் சூழலை உருவாக்குங்கள். ஏன் என்றால் நாம் தான் சூழலை உருவாக்குபவர்கள்” என்று தன்னம்பிக்கை வார்த்தைகளை வெளிப்படுத்தும் ரோஜா, தனது பாடல்கள் யாருக்கானது என்று கூறினார்.

“நாம் அடுத்த கட்டம் போவதற்கு மக்களின் ஆதரவு முக்கியமாகத் தேவைப்படுகிறது. கலை ஒரு கருவி. படிக்காத மக்களுக்கும் எளிமையான பாடல்கள் மூலமாகச் சொல்லும் போது அவர்கள் பிரச்சினைகளைப் புரிந்து கொள்கிறார்கள். இங்கு என்ன பேசுகிறோம் என்பது சிலருக்குப் புரியாது. அதனால் அவர்களுக்குப் புரியும்படியான வார்த்தைகள் போட்டுப் பல பாடல்கள் பாடியிருக்கிறேன். அதற்கு நாட்டுப்புறப் பாடல்தான் சிறந்த கருவியாக இருக்கிறது. அதற்காக மற்ற கலைகளைக் குறைத்து சொல்லவில்லை.

சமீபத்தில் கொரோனா குறித்து பலர் பாடியிருந்தார்கள். ஆனால், எந்த மருந்து எவ்வளவு அளவு சாப்பிட வேண்டுமென்பது அந்த துறை சார்ந்தவர்களுக்கும், மருத்துவர்களுக்கு மட்டுமே தெரிந்தது. உதாரணமாக, பாடிய பலருமே இந்த சாப்பாடு சாப்பிடுங்க, அந்த சாப்பாடு சாப்பிடுங்க என்று பாடுகின்றனர்.

அது ஆபத்தாக முடிவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே எந்த ஒரு சூழலிலும் அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு பாடல் எழுதிப் பாடினால் நன்றாக இருக்கும்.எந்த ஒரு விஷயத்திற்கும் பயிற்சி ரொம்ப முக்கியம். அதைத்தான் நம்புகிறேன். நிறையப் பாடல்கள் வரும் காலங்களில் இயற்றி பாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார் ரோஜா ஆதித்யா.

அன்னம் அரசு