கற்பித்தல் என்னும் கலைபிள்ளைகளுக்கு புத்தகத்தில் இருப்பது மட்டுமல்லாது, புத்தகத்தில் இல்லாத, வாழ்க்கைக் கல்விக்குத் தேவையானவற்றை அறிய வைப்பதும், மனதில் பதிய வைப்பதும் ஒரு முக்கியமான அம்சமாக அமைகிறது. ‘‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’’ என்பது நாம் அறிந்ததே. வாழ்க்கைக் கல்வி என்பது அவர்கள் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான நல்ல குணங்களை, நல்ல செயல்களை கதைகள் மூலமும், தேசத்தலைவர்களின் வாழ்க்கைக் கட்டுரைகள் மூலமும் எடுத்துரைத்தலேயாகும்.

இதை ஒரு முறை கற்பிப்பதோடு நின்றுவிடாமல், நீதி தரும் விஷயங்களை எடுத்து விளக்கிக் கொண்டேயிருந்தால், பிற்காலத்தில் அவர்கள் நாட்டின் நல்ல குடிமகனாக வளருவதற்கு வழி வகுக்கும். ஒரு சில விஷயங்களை அதன் பொருள் விளங்காமலே பிள்ளைகள் செய்வதுண்டு. ஒரு பையன், ஏதாவது புதிய பேனாவோ, புதுவிதமான பென்சில் டப்பாவோ பிறரிடம் பார்த்தால் அதை தன்னுடையதாக்க முயற்சி செய்வான்.

அவன் வேண்டுமென்று அப்படியொரு செயலைச் செய்வதில்லை. பிறர் பொருளை எடுக்க நினைப்பது தவறு என்பதுகூட அவனுக்குப் புரிவதில்லை. அதன் அர்த்தமும் அவனுக்குத் தெரியாது. ஏதோ ஒரு சூழல், மனதில் ஏற்படும் ஒரு ஆர்வக்கோளாறு அவனை செய்யத் தூண்டுகிறது. அது ‘ஏன்’ என்பதை அலசினால், அவனை மாற்ற முடியும்.

மிகவும் ஏழ்மையில் காணப்பட்ட ஒரு சிறுவன், இதுபோன்ற ஒரு பழக்கத்தில் இருந்திருக்கிறான். வகுப்பில் யாருடைய எந்தப் பொருள் காணாவிட்டாலும், அனைத்துப் பிள்ளைகளும் ஒன்று சேர்ந்து அவன் பெயரைக் கூறிவிடுவார்கள். அவன் எடுக்கவே இல்லை என்றுதான் சண்டையிடுவான். அவன் பெற்றோரை அழைத்து விசாரித்ததில் சில விஷயங்கள் புரிய வந்தன. அப்பா இஸ்திரி செய்யும் தொழில் செய்கிறார். அம்மா வீட்டு வேலை செய்பவர். அவர்கள் இருப்பிடமும் ஒதுக்குப்புறமான பகுதியில் இருந்தது.

அவன் விளையாடச்செல்லும் இடங்களிலெல்லாம், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளைப் பார்த்திருக்கிறான். அவர்கள் பயன்படுத்தும் விலையுயர்ந்தப் பொருட்களைக் கண்டிருக்கிறான். தானும் அதுபோன்ற பொருட்களை உபயோகிக்க நினைத்ததன் பலன், மற்றவர் பொருட்களை எடுக்க முயற்சித்துள்ளான்.

இது தெரிந்தால், பெற்றோர்கள் கண்டிப்பார்கள் என பயந்து, பரிசாகக் கிடைத்ததாக ஒவ்வொன்றையும் காட்டியிருக்கிறான். அவன் பெற்றோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேரில் பேசிய பிறகுதான் எங்களுக்கு அத்தனை விஷயங்களும் புரிய வந்தன. ஒரு வழியாக, அவன் பிறர் பொருளை எடுக்க நினைக்கும் விஷயத்தைக்கூறி புரிய வைத்தோம். மிகவும் வருத்தப்பட்ட பெற்றோருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தோம். மறுநாள் அவனை அழைத்து, ஆலோசனைகள் வழங்கி, ஏதேனும் தேவைப்பட்டால் ஆசிரியர்களை அணுகச் சொன்னோம்.

அவன் வகுப்பில் இல்லாத சமயம் மற்ற மாணவர்களிடமும், ‘‘யாரையும் பழிக்கக் கூடாது, கண்ணால் பார்க்காமல் பேசக்
கூடாது, அந்தப் பையனையும் நண்பனாக ஏற்றுக்கொண்டு, பரிசுப்பொருட்களை பகிர்ந்து கொள்ளலாம்’’ என்றெல்லாம் அறிவுரை வழங்கினோம். இத்தகைய சம்பவத்தில் மாணவனின் தவறு இருக்கவில்லை.

அவன் முதிர்ச்சியடையா மனநிலையும், ஏழ்மையும், மற்ற மாணவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டதும் காரணமாக இருந்தன. அன்று முதல் அவனை அதிகம் ஊக்கப்படுத்தியதில், மற்றவர்களுடன் சமமாக நடந்துகொள்ள ஆரம்பித்தான். பெற்றோரிடம் அவன் ஆசைப்பட்டதை கேட்க முடியாமலும், அதே சமயம் குடும்ப நிலையை ஆசிரியர்களிடம் மனம் திறந்து சொல்ல முடியாமலும், ஆடம்பரமாகத் தன்னையும் காட்டிக்கொள்ள நினைத்தும் அப்படிப்பட்ட செயல்களை சிறுபிள்ளைத்தனமாக செய்திருக்கிறான்.

எப்பொழுது அவன் புரிந்துகொண்டானோ, அவன் திருந்திவிட்டான். பிள்ளைகள் நிலை ‘இருதலைக்கொள்ளியாக இல்லாமல், அவர்கள் நிலையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இருபக்கமும் கண்டிப்பு அதிகமானால், அவன் உண்மையை மறைக்க ஆரம்பித்து விடுகிறான். அதனால்தான் சிறுசிறு தவறுகள் கண்டுகொள்ளாமல் விடும்பொழுது, பிற்காலத்தில் பெரிய தவறுகளாக மாறிவிட சந்தர்ப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன.

அனைவருமே சிறுவயதில் தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ தவறுகள் செய்திருப்போம். இதை நினைத்துப்பார்த்து, பிள்ளைகள் நிலைமையையும் உணர்ந்து, ரொம்பவும் திட்டாமல், தீர்வு சொல்வது முக்கியம். இதுபோல், ஒரு சிறுவன் அதிகம் பொய் பேசி, அதனால் வந்த பிரச்னைகளையும் நடைமுறையில் கண்டோம்.

கணிதத்தில் மிகக்குறைந்த மதிப்பெண் வாங்கியிருக்கிறான். தெரிந்தால், வீட்டில் திட்டுவார்கள் என்ற பயத்தில், தனக்கு மட்டும் இன்னும் விடைத்தாள் வரவில்லைஎன்றும், அது எங்கோ காணாமற் போனதாகவும் சொல்லியிருக்கிறான். உண்மையில், மிகக்குறைந்த மதிப்பெண் பெற்ற பிள்ளைகளின் விடைத்தாளை ஆசிரியர்கள் வைத்துக்கொண்டு, பின் நேரிடையாக பெற்றோரை அழைத்துப்பேசித் தருவார்கள்.

ஆனால் குறிப்பிட்ட மாணவனிடம் தந்துவிட்டு, பின்னர் பெற்றுக்கொள்வார்கள். அத்தகைய விதத்தில், பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்திற்கு அவன் பெற்றோரும் அழைக்கப்பட்டனர். தலைமை ஆசிரியை பெற்றோரிடம் விடைத்தாளைத் தந்து, அவன் மேலும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறினார்.

பெற்றோரோ, ‘விடைத்தாள் கிடைத்துவிட்டதா’ என்று கேட்க, மாணவன் ‘திருதிரு’வென முழித்துக்கொண்டிருக்க, பொய்க்கதை அம்பலமானது. வெட்கத்தால் கூனிக்குறுக, அவன் கை-கால்கள் உதற ஆரம்பித்தன. பாவம் என்ன செய்வான் அச்சிறுவன்? குறிப்பிட்ட வயதில் மற்றவர் எதிரே, தான் அவமானப்படுவதை அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பின் என்னவெல்லாமோ நடந்துவிட்டன.

நல்ல பிள்ளை, வீட்டில் உள்ள கண்டிப்பு அவனை பயத்தில் தள்ளி, ஒரு சிறிய பொய் சொல்ல வைத்தது. பொய்யை மறைக்க முடியாததால் அவனுக்கே அவமானம் ஏற்பட்டது. எனவே, மதிப்பெண்ணிற்காக கோபப்படாமல், முன்கூட்டியே ‘இதுபற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்,’ ஒரு தடவை குறைந்தால் போகட்டும், மறுமுறை நன்கு படிக்கலாம் என்ற ஆறுதல் வார்த்தைகள் கிடைத்திருந்தால், அவன் பொய் பேசியிருக்க மாட்டான்.
மிக மோசமான கண்டிப்புக்கூட, ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தி தவறு செய்யத் தூண்டலாம். இதற்குக் காரணம், நாம் எதையும் ஒப்பிட்டுப் பார்ப்பதேயாகும்.

பிறரோடு நம் அன்புச்செல்வங்களை ஒப்பிடாமல், சுயமாக சுதந்திரமாக அவனை இயங்க விட்டால் போதும். சமூகத்தில் எப்படியிருந்தால் நமக்கு மதிப்பு என்பதை எடுத்துச்சொல்லி, ‘இதையெல்லாம் செய்தால் நீ முன்னேறுவாய்,’ ‘பிடித்த விஷயங்களில் சாதிக்கத்துடி’ போன்றவாறான கருத்துக்களை மனதில் பதிய வைத்தாலே போதும்.

பத்து மதிப்பெண்ணிற்காக நிர்ப்பந்திப்பதைவிட, பல்வேறு விஷயங்களில் அவன் சாதிக்க விரும்புவதை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருக்கலாம். எத்தனையோ தலைவர்கள், ஆன்றோர்கள் இளம் வயதில் சாதிக்க முடியாதவற்றை குறிப்பிட்ட பருவத்தில் சாதித்திருக்கிறார்கள். சாதிக்க வயது ஒரு தடையே கிடையாது.

முன்னேறிய நாடுகளில் ஒரு பார்வை செலுத்தினால், நமக்குப் பல விஷயங்கள் புரிய வரும். எப்படிப்பட்ட திறமைக்கும் வேலையுண்டு, சம்பளமுண்டு. எந்த வேலையும் கௌரவம் குறையாததுதான்.

அப்படியிருக்கையில், சில மதிப்பெண்களுக்காக, பிள்ளைகள் ஏன் பயப்பட வேண்டும்? உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், நாம் வெளியூர் செல்லும் நேரங்களில் நம் செல்லப்பிராணிகளை பார்த்துக்கொள்வதுகூட ஒரு வேலையாகக் கருதப்படுகிறது. அதற்கான சம்பளமும் நிர்ணயிக்கப்படுகிறது. தினசரி நாம் செய்யும் வேலைகளுக்குத்தான் அதிகப்படியான சம்பளம். வேலைக்கு ஆட்கள் வைத்துக்கொள்வது என்பது மிகவும் சிரமமான காரியம்.

இப்படியிருக்கையில், ஒருசில மதிப்பெண்களுக்காக பிள்ளைகள் துன்பப்பட வேண்டாம். ஒப்பிட்டுத் தங்களைத் துன்பப்படுத்திக் கொள்ளவும் வேண்டாம். அதனால், இப்பொழுதெல்லாம் மதிப்பெண் அட்டைகளில் பெரும்பாலும் ‘கிரேடு’ (Grade) என்று சொல்லக்கூடிய மதிப்பீடுதான் குறிப்பிடப்படுகிறது.
பெற்றோராகட்டும், கற்பிப்பவர் ஆகட்டும் நிறைய பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிந்தித்து அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எந்தக் காரணத்தாலும், நம் சொற்களில் மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.

ஒரு பையன், பள்ளியில் விட்ட சில நிமிடங்களில் திரும்பி வந்துவிடுவான். அந்த ஊரில், அவன் வீட்டினருகே இருந்த பள்ளி என்று கொள்ளலாம். சிரமப்பட்டு அவனுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தந்து, பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்கள் முதல் மாலை வீட்டிற்குத் திரும்பும் வரை சாப்பிடத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வகை வகையாகப் பிரித்து புத்தகங்கள் ஒரு பக்கம் போக, மற்றொரு பையில் வைத்து, அழகுற அலங்கரித்து பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

அவனோ, அத்தனையும் சுமந்துகொண்டு பத்து நிமிடங்களில் வீட்டிற்குத் திரும்பி விடுவான். இது பல நாட்களுக்கு நடந்தது. தந்தை வகுப்பாசிரியரிடம் சென்று வெளியில் அனுப்பாமல் வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். வகுப்பாசிரியரும், ‘கேட்’ வெளியே நிற்கும் காவலாளியிடம் இதுபற்றி எச்சரித்து வைத்திருந்தார். ஓரிரண்டு நாட்கள் சிரமத்துடன் ஓடின. பின் திடீரென ஒருநாள் ‘பாத்ரூம்’ செல்வதாகக் கூறி, பின்பக்கச் சுவற்றில் ஏறி குதித்து வீட்டிற்கு ஓடிவிட்டான். செய்வதறியாது பெற்றோர் தலைமையாசிரியரிடம் கலந்து பேசினர்.

தலைமையாசிரியர் அவனை வேறு பள்ளியில் சேர்க்கும்படி கூறினார். வேறு பள்ளிக்கு போகப்போகிறோம் என்று தெரிந்தவுடன் அவனுக்கு அத்தனை உற்சாகம். காரணம், அவனுக்கு முன்பிருந்த இடத்தின் சூழல் பிடிக்காமல் இருந்திருக்கிறது. நண்பர்கள் அமையாமல் தனித்துவிடப்பட்டிருக்கிறான்.

தனக்கென அக்கறை செலுத்த யாருமில்லையென்று நினைத்திருக்கிறான். எத்தனையோ பாசத்துடன், வேண்டியதெல்லாம் பெற்றோர் செய்து தந்தும், அவன் மனம் அதில் லயிக்காததால், அத்தகைய சூழலிலிருந்து தப்பிக்க நினைத்து திரும்பி வந்திருக்கிறான். சிறிது தூரத்தில் வேறு பள்ளியிருந்தாலும், அவன் போக விரும்ப ஆரம்பித்தான். தானே சைக்கிளில் செல்ல ஆயத்தமானான்.

நமக்கென்று சில ஆசைகள், விருப்பங்கள் இருந்தாலும், பிள்ளைகள் மனம் எதை நாடுகிறது, ஏன் என்பதை யோசித்து செயல்படுத்தும்போது அது முழுவதும் பூர்த்தியாகிறது. இச்சிறுவனின் செயல் ஆரம்பத்திலேயே, புரிந்துவிட்டதால் சுலபமாக சரி செய்ய முடிந்தது.

இதுபோன்று பலப்பல நிகழ்வுகள் தினம் தினம் கற்பிப்பவர் வாழ்க்கையில் நிகழ்வதுண்டு. ஒவ்வொரு மாணவரையும் போக்கறிந்து நடைப்படுத்துவதில் பெற்றோர் சரியான பங்கு வகிக்கிறார்கள். அவற்றையெல்லாம் வழிப்படுத்துவது என்பதும் அற்புதமான ‘கலை.’

சரஸ்வதி ஸ்ரீநிவாஸன்