பசியை போக்கும் பிரேசில் பெண்கள்!



உலகில் கொரோனா தாக்குதலுக்கு முன்பே, பிரேசிலில் ஃபெவெல்லா என்று அழைக்கப்படும் பகுதிகள் கடும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டிருந்தது.  பிரேசிலில் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வேலை தேடி வந்த மக்கள், புறநகரங்களுக்கு தள்ளப்பட்டனர். நகரத்தில் வசிக்க முடியாமல் பலர் புறநகரங்களில் காலியான இடங்களில் இருப்பிடம் அமைத்து குடியேறி ஃபெவெல்லா எனப்படும் குடியேற்றங்களை உருவாக்கிக்கொண்டனர். அதில் சாவோ பாலோ என்ற ஃபெவெல்லா பகுதியில் பல ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில், கொரோனா பாதிப்பிற்கு முன்பே குடிநீர், எரிவாயு, உணவு என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் போராடி மக்கள் பசியைப்போக்கி வாழ்ந்து வந்துள்ளனர். வீட்டுவசதி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற வசதிகள் இவர்களுக்கு எட்டாக்கனிகள்தான். இந்த நிலையில், கொரோனாவிற்கு எதிரான பெரும் போராட்டத்தில், இம்மக்கள் நிராயுதபாணியாகவே நின்றனர். மேலும் தனிமைப்படுத்துதல் ஊரடங்கு அறிவிப்பினாலும், இருக்கும் வேலையும் பறிபோனதில் ஒரு வேளை உணவிற்கே திண்டாட்டமாகியது.     

இதைப்போக்க தாமாக முன்வந்து, பாராய்சோபோலிஸ் மகளிர் சங்க தன்னார்வலர்கள் ஒரு நாளைக்கு 6,000 இலவச உணவைத் தயாரித்து, சாவோ பாலோ ஃபெவெல்லா பகுதி குடும்பங்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த சங்கத்தின் பெண்கள் முன்வந்து உதவாமல் போனால், பலர் கொரோனா நோயில் இறப்பதைவிட, பசியால் அதிகம் இறந்துபோயிருப்பார்கள். பாராய்சோபோலிஸ் மகளிர் சங்கம், 2006ஆம் ஆண்டு, பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவாக இயங்க நிறுவப்பட்டது.

பிரேசிலில் சுமார் அறுபது லட்சம் பேர், முறையான வீட்டுவசதியில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வசிக்கும் நிலைமையில் கொரோனா பாதிப்பில் தனிமைப் படுத்துதல் சாத்தியமில்லாமல் போகிறது. அங்கு மார்ச் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், ஒரு மாதம் சம்பளம் இல்லாமல் போனால் 50 லட்சம் மக்கள் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் பசியில் பாதிக்கப்படுவர் என்று கூறப்பட்டது.

ஒரு சிறிய அறையில் பத்து பேர் உறங்கி, ஒரே கழிப்பறையை ஐம்பது பேர் உபயோகிக்கும் சூழலில் ஒருவருக்கு கொரோனா பாதித்தாலும், உடனே அனைவருக்கும் கொரோனா தொற்று பரவுதல் தொடங்கிவிடும். அடிக்கடி கைகளை ஹாண்ட் சானிடைசர், சோப் போட்டுக் குறைந்தது இருபது வினாடிகள் கழுவ வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறிவரும் நிலையில், சாவோ பாலோ பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதே அரிதாகவுள்ளது.

சாவோ பாலோ  பகுதி மக்களுக்கு தொற்று நோய்கள் ஒன்றும் புதிதல்ல. ஜிகா, டெங்கு, அம்மை போன்ற பல தொற்று நோய்கள் இங்கு வந்து போவது வழக்கம்தான். மேலும், திறந்தவெளி கழிப்பறைகளுடன், ஃபெவெல்லா பகுதி மக்கள் கொரொனாவால் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். ஆனால் அரசாங்கம், ஃபெவெல்லா  பகுதிகளுக்கென சிறப்பு திட்டங்கள் எதுவுமே அறிமுகப்படுத்தவில்லை.

ஆனால், பாராய்சோபோலிஸ் மகளிர் சங்க தன்னார்வலர்கள், மியோஸ் டி மரியா (மரியாவின் கைகள்) என்ற பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம், அப்பகுதி பெண்களைக்கொண்டே உணவு தயாரித்து, அவர்களுக்கு வருமானத்துடன் இலவச உணவும் அளித்து வருகின்றனர். 2017ல் இந்த அமைப்பு “Stop Hunger” என்ற திட்டத்தின் மூலம் சாவோ பாலோவில் வசிக்கும் பெண்களுக்கு காய்கறிகள் தோட்டம் அமைக்கும் பயிற்சியும் அதற்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தங்கள் குடும்பத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை தாங்களே உற்பத்தி செய்கின்றனர். மேலும் உணவுப் பொருட்களின் ஒரு பகுதியை சமூக சமையலறைக்கு எடுத்துச் சென்று இலவசமாக உணவு திட்டத்திற்கு அளிக்கின்றனர். மீதமிருக்கும் உணவுப் பொருட்களை விற்று, தங்கள் வருமானத்தை ஈட்டுகின்றனர். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே, பசியை ஒழிக்க வேண்டும் என்பது தான்.

பல நூறு கிலோ உணவுப் பொருட்களை கூட்டு நிதியுதவி திட்டத்தின் மூலம் ஆன்லைனில் தினமும் சேகரித்து, ஒரு நாளைக்கு 6000 உணவுகளை தயாரித்து இலவசமாக வழங்கி வருகின்றனர். விரைவில் பெரிய அளவில் ஒரு நாளில், பத்தாயிரம் உணவுகள் தயாரிக்கும் திட்டத்தில் செயல்பட்டு வருகிறது.

பசியுடன் நாட்களை கடக்கும் ஒரு லட்சம் மக்கள் வாழும் இப்பகுதியில் பத்தாயிரம் என்பது மிகவும் குறைந்தபட்ச உதவிதான். இச்சமயத்தில் வீட்டை தாண்டி வருவதே பெரும் ஆபத்தாக இருக்கும்பட்சத்தில், பசியில் தவிக்கும் மக்களுக்கு உதவ தைரியமாக முன்வந்து ஒரு நாள் முழுக்க சமைத்து, உணவை வீடு வீடாக சென்று அளிக்கும் பெண்களின் துணிவு பாராட்டத்தக்கது.

ஸ்வேதா கண்ணன்