தப்பட்



ஒரு அறையில் என்ன இருக்கிறது? அதற்கு விவாகரத்துவரை போக வேண்டுமா என்ற கேள்விக்கு..?
அந்த ஒரு அறையில் தான் பெண்களின் சுயமரியாதையே இருக்கிறது எனச் சொல்லி மனைவிகளை கை நீட்டி அடிக்கும் கணவன்களின் கன்னத்தில் ஓங்கி விழுந்த அறைதான் ‘தப்பட்’.

படம் பெண்களின் எல்லா நிலையில் இருந்தும் அவர்களின் உணர்வுகளை வலிமையோடு வெளிப்படுத்தி இருப்பதுடன், படத்தின் வசனங்கள் அத்தனையும் பொட்டில் அறைந்தார் போல் நச்சென்று இருக்கிறது. மனைவி அம்ருதாவாக டாப்சி படத்திற்கு சிறப்புச் சேர்த்திருக்கிறார். தன் உணர்வுகளை உளவியலாய் முகத்தில் வெளிப்படுத்தி படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு வாழும் அம்ரிதாவின் அம்மா. தன் குடும்ப வாழ்க்கையில் பிரச்னை இருந்தாலும் மருமகளைத் தனது மகள் போல் பார்த்துக்கொள்ளும் மாமியார்.  தினமும் கணவனின் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அம்ரிதா வீட்டு வேலைக்காரப் பெண்,  கணவனை இழந்த பிறகு யாரையும் ஏற்க விரும்பாமல் துணிச்சலோடு வாழும் அம்ரிதாவின் பக்கத்து வீட்டுப் பெண், முதலில் கணவனுக்கு அடங்கி, பிறகு பொதுப் புத்தியிலிருந்து விடுபட்டு, தனக்கு சரியெனப்பட்டதைச் செய்யும் அம்ரிதாவின் வழக்கறிஞர், அம்ரிதா எடுக்கும் முடிவு சரியெனத் துணை நிற்கும் தம்பியின் காதலி என்று எல்லா அடுக்குகளிலும் பெண்களின் நிலையையும், அவர்களின் உணர்வுகளையும் வெளிக்காட்டி படத்தை இயக்குநர் நகர்த்தி இருப்பது சிறப்பு.

உயர் அதிகாரி மேல் இருக்கும் கோபத்தில், எந்தத்  தவறும் செய்யாத தன் மனைவியிடம் தனது கோபத்தைத் தீர்த்துக்கொள்ள கணவன் விடும் ஒரு அறை, பிறகு தொடர்ந்து வரும் காட்சிகளில தான் செய்த தவறுக்காக ஒருமுறை கூட வருத்தப்பட்டு மன்னிப்புக் கேட்காதது, எதுவுமே நடக்காதது போல் நடந்துகொள்வது, தனது தவறை நியாயப்படுத்துவது என அடுத்தடுத்து வரும் காட்சிகளின் மூலம் குடும்பங்களில் ஆண் களின் வளர்ப்பு குறித்து இதில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. என் முன்னேற்றத்திற்காக அலுவலகத்தில் மூன்று வருடம் கடுமையாக உழைத்தேன்.

அதற்கான பலன் கிடைக்காமல் போய்விட்ட கோபத்தில் அறைந்து விட்டேன் என கணவன் சொல்லும் போது, அவனின் மேலதிகாரி, உன் கோபம் எங்கள் மேல் தானே அதற்காக எங்களை அடிப்பாயா எனக் கேட்கிறார். அடிப்பதல்ல இங்கு கேள்வி. அவள் அவனுக்கு யாராக இருக்கிறாள் என்பதே இங்கு கேள்வியாகப் பார்க்கப்படுகிறது. மனைவியாக இருந்தால் அடிக்கலாம் என்பது குடும்பங்களில் ஆண்களின் மனதில் பதிய வைக்கப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு கணவனுக்குப் பின்னாலும் தன் சுயமிழந்த மனைவிமார்கள் இங்கே அதிகம். சமூகமும் நமது குடும்பங்களும் பெண்களுக்கு சொல்வதெல்லாம், விட்டுக் கொடுத்துப் போ, வளைந்து கொடு, குடும்பம் உடையாமல் பார்த்துக்கொள் என்பதே.

அதற்காக பெண்களின் உணர்வும் சுயமரியாதையும் உடைந்தாலும் பரவாயில்லை என பெண்களுக்கு வலியுறுத்தி திணிக்கப்படுகிறது. இன்னும் கூடுதலாய் பெண்கள் இதை மௌனமாய் ஏற்று மிகவும் சகஜமாய் குடும்பத்திற்காக வாழ வேண்டுமென கற்றுக்கொடுப்பது குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் படம் கூடுதலாய் பேசிச் செல்கிறது.

என் கணவர் என்னை அடிப்பார், மிதிப்பார். அதற்கு உரிமை அவருக்கு உள்ளது. அதை கேட்க நீ யார் என பார்த்துப் பழகிய படங்களுக்கு மத்தியில்.. ‘எனக்கு உன் மேல் அன்பில்லை என்றான பிறகு எதற்காக நாம் சேர்ந்து போலியாக வாழ வேண்டும்.

அது எப்படி நேர்மையான வாழ்க்கையாக இருக்கும்? அதில் என்ன சந்தோஷம் நமக்கு கிடைக்கப் போகிறது? அப்படி ஒரு வாழ்க்கை தேவையா? இதுவே அம்ரிதாவின் மனதில் எழும் நியாயமான கேள்வியாக படத்தில் வைக்கப்படுகிறது.

“நான் சரியான முடிவு எடுத்து இருக்கேனா அப்பா?” என அப்பாவிடம் அம்ரிதா கேட்கும் போதும், “எல்லா முடிவுகளுமே சந்தோஷம் தரவேண்டும் என்பதில்லை. உனக்கு சரியெனப்பட்டதை தயங்காமல்  செய்” என்று மகள் எடுக்கும் முடிவின் நியாயம் உணர்ந்து நடப்பதும், காதலியாக இருக்கும் தனது வருங்கால மனைவியை தன் மகன் திட்டும்போது அவளிடத்தில் மன்னிப்பு கேட்க கண்டிப்பு காட்டும் அப்பாவாகவும், தனது மனைவிக்கு பாடும் ஆசையுண்டு என்பதை அறிந்து அதற்கு வழி ஏற்படுத்தித் தருவது என பாசிட்டிவான ஆண் கேரக்டரும் படத்தில் இருக்கிறது. பெண்களின் உலகை வெளியில் பார்த்து, பொருட்களால் அவர்களை திருப்திப்படுத்த நினைக்கும் ஆண்களுக்கு இப்படம் எச்சரிக்கை. இருபாலரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

மகேஸ்வரி நாகராஜன்