நான் தோட்டத்தின் தோழி!



ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்தினால் எங்கிருந்தோ வரும் உணவு நிறுத்தப்படலாம். வாகனங்கள் ஓடுவதும், கப்பல்கள் மிதப்பதும், விமானங்கள் பறப்பதும் கூட நிறுத்தப்படலாம்.
ஆனால் உனக்கான உணவை, நீ உற்பத்தி செய்ய பழகியிருந்தால், இதையெல்லாம் எண்ணி நீ அஞ்ச வேண்டியதில்லை என்று வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியது தற்போதைய சூழ்நிலைக்கு சரியாக பொருந்துகிறது. அவர் சொன்னதை தனக்காக மாற்றி அமைத்துள்ளார் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த 72 வயது நிரம்பிய அம்ருதா குமாரி.

பொதுவாக நாம் மொட்டை மாடியினை துணிகளை காயப் போடுவதற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அம்ருதா குமாரியோ அந்த இடத்தையும் மிகவும் பயனுள்ளதாக மாற்றி ஒரு மினி தோட்டத்தையே அங்கு பராமரித்து வருகிறார்.அவரின் மொட்டைமாடிக்கு சென்றால், அங்கு வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கி இருப்பதை பார்க்கும் போதே நம் விழித்திரைக்குள் ஒரு குளிர்ந்த காற்று வீசியது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக வித்தியாசமான வண்ணங்களில் அல்லி மலர்களை பார்க்கும் போது, இது மொட்டை மாடியிலும் வளர்க்கலாமா என்ற ஆச்சரியம் நம்மைக் கவ்விக் கொள்கிறது. இதை ரசித்துக் கொண்டு இருக்கிற நேரத்தில் அம்ருதா... தன் உதவியாளரிடம்... தக்காளிச் செடிக்கு ஜீவாமிர்தம் போடு... அல்லி மலர் பூத்து இருக்கிறதா என்று வினவிக் கொண்டு இருந்தார்.

ஒரு புறம் பூக்கள் கண்களை பறிக்க, மறுபக்கம் கத்தரிக்காய், தக்காளி, ஆந்திரா போன்ற இடங்களில் மட்டுமே காணப்படும் க்ளைவ் பீன்ஸ், தம்பக்கா, கீரை வகைகள், முட்டைக்கோஸ், ஸ்ட்ராபெரி... என ஒரு மினி விவசாய நிலத்தை பராமரித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் ஆடாதொடை, சித்தரத்தை, துளசி, கற்பூரவல்லி போன்ற மூலிகை வகைகளையும் வளர்த்து வருகிறார்.

‘‘கடந்த முப்பத்திரண்டு வருடங்களாய் இந்த தோட்டத்தைப் பராமரித்து வருகிறேன்’’ என்று பேச ஆரம்பித்தார் அம்ருதா. ‘‘ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்தாலும், என்னுடைய தோழி லட்சுமி ராம் அவரின் தோட்டத்தைப் பார்த்த பிறகு, நாமும் ஏன் ஒரு தோட்டம் அமைக்க கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அதன் பிறகு  காய்கறிகள், பூச்செடிகள், மருத்துவ செடிகன்னு... முழுமூச்சில் தோட்டக் கலையில் இறங்கி விட்டேன்.

என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து என்னுடைய உறவினர்கள் எங்கு சென்றாலும் அரிய வகை செடிகளை வாங்கி வருவார்கள். பரிசு கொடுத்தால் கூட அம்மாவுக்கு பச்சை நிறத்தில் தான் பரிசு தரணும்னு என் மகன் கிண்டல் செய்வான். ஆரம்பத்தில் நான் மட்டுமே தான் இந்ததோட்டத்தை பராமரித்து வந்தேன். இப்போது எனக்கு வயசாகிவிட்டது என்றாலும், உடல் ரீதியாக சில பிரச்னைகளை சந்தித்தேன்.

அதனால் என்னால் மட்டுமே தனியாக இதனை பராமரிக்க முடியவில்லை. அதே சமயத்தில் விடவும் முடியவில்லை. என் குழந்தைகளை என்னால் எப்படி அப்படியே விட்டுவிட முடியும். அதனால் இப்போது என் மேற்பார்வையில் பராமரிக்க ஆட்களை நியமித்து இருக்கேன்’’ என்றவர் ஆரஞ்சு, கொய்யா, பப்பாளி, மாதுளை, ஸ்ட்ராபெரி  என பழங்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்து சென்றார்.

பழங்களை கூட மாடியில் பயிரிடமுடியுமா? என்றதற்கு ‘‘ஒவ்வொரு செடியையும் நம் குழந்தை போல் நினைத்தால், எந்த செடியையும் எங்கு வேண்டும் என்றாலும் வளர்க்க முடியும். அன்பும், அர்ப்பணிப்பு மற்றும் பொறுமை இந்த மூன்றையும் எல்லா விஷயத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். இதில் ஆத்மார்த்தமாக இறங்கி செய்யும்போது, அந்த பூக்களும், செடிகளும் நம் தோட்டத்தில் மட்டுமல்ல, நம் வீட்டிலும் ஒரு நபராகிவிடும்’’ என்றவர் அதனை பராமரிக்கும் முறையினை பகிர்ந்து கொண்டார்.

‘‘நான் எந்தவித ரசாயனமும் கலப்பதில்லை. இயற்கை உரங்கள் தான் பயன்படுத்துகிறேன். அதனை நானே தயார் செய்கிறேன். இங்கு விளையும் பழங்கள், காய்கறிகளை எனது குடும்பத் தேவைக்குப் போக மற்றவற்றை எனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுப்பேன். என்னை பார்த்து என் மகளும் அவர் புகுந்த வீட்டில் மாடித் தோட்டம் போட்டு அவர் குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிட்டுக் கொள்கிறார். என் மருமகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கும் கூட தோட்டக்கலையில் ஆர்வம் அதிகம்.

நான் உடல் நிலை சரியில்லாத போது அவர்கள் தான் அதனை பராமரித்து வந்தார்கள். எல்லாரையும் விட என்னுடைய இந்த தோட்டப் பணிக்கு அன் கணவர் என்றுமே தடை போட்டதில்லை’’ என்றவர் தோட்டக்கலை மட்டுமல்லாது, சமையல்கலை, கேக் டெக்கரேஷன், அழகிய மெழுகுவர்த்திகள் தயாரித்தல் என பல கலைகளை தன் கைவசம் வைத்துள்ளார்.

‘‘நமக்குத் தேவையான காய்கறிகளை பயிரிட பெரிய வயல் வரப்பு வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருக்கும் இடத்தில் கூட பயிரிடலாம். சென்னை போன்ற நகர்ப்புறங்களில் அடுக்கு மாடிக் கட்டிடங்களும், அதன் கீழ்த் தளம் முழுவதும் கார் நிறுத்தங்களுக்கும் மட்டுமே இடம் ஒதுக்கப்படுகிறது. அதில் ஒரு சிறு பகுதி இடம் கூட மரம் வைக்கவோ, செடி கொடிகள் வைக்கவோ ஒதுக்கப்படுவதில்லை. நாம் அதைப் பற்றி கவலைப்படுவதுமில்லை. இது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

இருக்கும் வளத்தை எல்லாம் அழித்துவிட்டோம். அப்புறம் ஏன் தண்ணீர் பிரச்னை ஏற்படாது. காற்று மாசடையாது. அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும், அங்கு எல்லாரும் இணைந்து சிறிய அளவில் தோட்டம் அமைக்கலாம். தனி வீடாக இருப்பின் அவர்கள் தங்கள் மொட்டை மாடியிலோ அல்லது வீட்டைச் சுற்றி விளைவிக்கலாம். இதனால் நம்முடைய வீடு என்றும் குளுமையாக இருக்கும். மேலும் இது போன்ற இக்கட்டான சூழலில் காய்கறியின் விலைவாசி கண்டு அஞ்சாமல் இருக்கலாம்’’ என்றார் ‘அம்ருத் கார்டனின்’ சொந்தக்காரரான அம்ருதா குமாரி.

கலைச்செல்வி சரவணன்