உயிருடன் எரிக்கப்பட்ட விழுப்புரம் சிறுமிவிழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீயின் வாக்குமூல வீடியோவைப் பார்ப்பவர்களின் மனம் பதைபதைத்துதான் போகிறது.  முகமும் உடலும் எரிந்த நிலையில் அந்த காணொளியை இளகிய மனம் கொண்ட எவரும் முழுமையாகப் பார்க்க முடியாது.

பேசுவதற்குத் திராணியற்று சன்னமான குரலில், தண்ணீர் வேண்டி இரஞ்சும் அச்சிறு பெண்  “கவுன்சிலர் முருகனும், யாசகனும்தான் (கலியபெருமாள்) என் மீது பெட்ரோலை ஊத்திக் கொளுத்திட்டாங்க.  என் அப்பா எங்க?  நான் தனியா வீட்டில் இருந்தேன்.. அவங்க 2 பேரும் வந்து என் வாயில துணி வெச்சு அடைச்சு, கை, காலை கட்டிப்போட்டுட்டு தீ வெச்சு கொளுத் திட்டாங்க” என்று சிறுமி கொடுத்த வாக்குமூலம் விழுப்புரம் மாவட்டத்தை மட்டுமல்ல தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொன்னூறு சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சிறுமி ஜெய சிகிச்சை பலனின்றி பரிதாபமாய் உயிரிழந்தார்.

தீக்காயங்கள் அதிகமாக இருந்ததால் உயிரிழந்துவிட்டார் என விழுப்புரம் மருத்துவக் கல்லூரியின் டீன் குந்தவி தேவியும், சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அதிமுக கவுன்சிலர் முருகன் மற்றும் கிளைச் செயலாளர் கலியபெருமாள் இருவரையும் கைது செய்து  விசாரணை
செய்துவருகிறோம் என விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரும் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர்கள் ஜெயபால்-ராஜி தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். விவசாயக் கூலியான ஜெயபால் தனது வீட்டின் முன் பகுதியில், சிறிய பெட்டிக்கடை ஒன்றும் நடத்தி வருகிறார்.

ஜெயஸ்ரீ தந்தை ஜெயபால் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, கலியபெருமாள் உள்ளிட்ட 6 பேர், வேலை செய்ததற்கான கூலி கேட்டதற்காக எனது தம்பி குமாரின் கையை வெட்டிவிட்டார்கள். அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை 9-ம் தேதி இரவு, எனது பெட்டிக்கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்த எனது மகனை எங்கள் ஊரைச் சேர்ந்த சிலர் அடித்துவிட்டனர்.

அதற்காக அன்று இரவு முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவிட்டு அதிகாலையில் வீடு திரும்பினோம். அந்தச் சம்பவம் தொடர்பாய் புகார் கொடுக்க நானும், எனது மகன் ஜெயராஜும் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்துக்குச் சென்றுவிட்டோம். அப்போது எனது மனைவி ராஜி எனது சின்ன மகளை அழைத்துக்கொண்டு ஆடு மேய்ப்பதற்காக வெளியில் சென்றுள்ளார்.

எனது மூத்த மகளான ஜெயஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாள். அப்போது முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும் எனது பெட்டிக் கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த என் மூத்த மகள் ஜெயஸ்ரீ வாயில் துணியை வைத்து அழுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டி, கை மற்றும் கால்களை கட்டி அவளைத் தாக்கியதுடன், அங்கிருந்த பெட்ரோலை எடுத்து என் மகள் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அவளை வீட்டிற்குள் போட்டு பூட்டி விட்டுச் சென்றுவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

காலை சுமார் 11 மணியளவில் வீட்டிற்குள் இருந்து புகைமூட்டமும் அலறல் சத்தமும் வருவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து ஜெயபால் வீட்டிற்குள் சென்றபோது அங்கே உடல் முழுதும் எரிந்து கருகிய நிலையில் ஜெயஸ்ரீ உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜெயஸ்ரீ வாக்குமூலம் அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெற்றோரின் முன்பகை ஒரு சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கும் அளவுக்குச் சென்றுள்ளதும், அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது எனும் மமதையில், சிறுமியைக் கதறகதற இரக்கமற்ற முறையில் எரித்த செய்தியும், சிறுமியின் வாக்குமூலமும் செய்தி ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் காணொளி காட்சியாக பரவியது.

சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், காவல்துறை விரைந்து செயல்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதுடன், நீதி மன்றத்திலும் ஒப்படைத்து மிக விரைவாக இந்த வழக்கை நடத்தி குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனையினை வழங்கினால் மட்டுமே, மக்களுக்கு காவல் துறை மீதும் நீதி மன்றங்கள் மீதும் நம்பிக்கை உண்டாகும். இல்லையெனில் பெண்கள் மீதும் சிறுமிகள் மீதும் நடைபெறும் இத்தகைய தொடர் சம்பவங்கள் அடுத்தடுத்து தொடர்கதையாக மாறி நிற்கும்.

மகேஸ்வரி நாகராஜன்