அழகுக்கு அழகு சேர்க்கும் சேலை!



பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது அவர்கள் அணியும் உடை, அதில் முக்கியமானது சேலை. ஒரு சிலர் நேர்த்தியாக சேலையை கட்டுவார்கள். சிலருக்கு சரியாக அதை உடுத்த தெரியாது. புடவை அணியும்போது சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் அந்த உடை மிகவும் அழகான தோற்றத்தைத் தரும். அதற்கு சில  டிப்ஸ்...

*உயரமாக இருக்கும் பெண்கள் சேலையைத் தரையில் புரளுமாறு தழையத் தழைய அணிய வேண்டும். சோளியைக்கூடியவரை முழங்கையைத் தொடும் அளவு அணிந்தால் அழகாக இருக்கும்.

*கருப்பு நிறம் கொண்ட பெண்கள் வெண்மை நிறமுடைய உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். வெண்மை ஆடைகள் கருப்பு நிறத்தை அதிகப்
படுத்திக் காண்பிக்கும்.

*மாநிறம் கொண்ட பெண்கள் தூய வெள்ளை ஆடைகளை அணிந்தால் எடுப்பாகவும், எழிலாகவும் இருக்கும்.

*நல்ல சிவப்பு நிறம் கொண்டவர்கள் அழுத்தமான வண்ணத்தில் சேலை அணிந்தால் மிக அழகாக இருக்கும்.

*மிகவும் உயரமான தோற்றமுடைய பெண்கள் அகலக்கரையும், படுக்கைக்கோடுகளும் கொண்ட அழுத்தமான வண்ணமுடைய சேலைகளை அணிந்தால் நேர்த்தியான தோற்றம் அளிக்கும்.

*பெண்கள் அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தை மாற்றியமைக்கும் தன்மையுடையதாகும். புடவையில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் இருந்தால் உயரமானவர்களும் குள்ளமான தோற்றத்தைப் பெறுவார்கள். கோடு நேர்வாக்கில் இருந்தால் குள்ளமான பெண்களும் உயரமான தோற்றத்தைப் பெறலாம்.

*ஒரே வண்ணத்தில் புடவையும், சோளியும் அணிந்தால் அவ்வளவு கவர்ச்சியாக இராது. அணியும் புடவைகள் லேசான வண்ணத்தில் இருந்தால் சோளி அதே வண்ணத்தில் கனமான வண்ணமாகப் பார்த்து அணிந்தால் எடுப்பாகவும், கவர்ச்சியாகவும் தோற்றமளிக்கும்.

*கல்யாணம் ேபான்ற குடும்ப விழாக்களுக்குச் செல்லும்போது ஜிகினா வேலை செய்த பகட்டான உடைகளை அணிந்தால் எடுப்பாக இருக்கும். வயதை குறைத்துக் காண்பிக்கும். உடல் முழுவதும் கொடி, கொடியான சித்திர வேலைப்பாடுகளும், அகலமான ஜரிகையும் அமைந்த பட்டுப்புடவைகள் குடும்ப விழாக்களுக்கு அணிந்து சென்றால் மிகவும் உயர்வான, பெருந்தன்மையான தோற்றத்தைத் தரும்.

*பகற்பொழுது நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக இருந்தால் அவசியம் பருத்தி நூலால் ஆன சோளியை அணிந்தால் அழகாகவும் இருக்கும்.

*அணியக்கூடிய புடவையின் அமைப்பே தோற்றத்தை மாற்றியமைக்கும் தன்மை கொண்டது என்பதை மனதில் கொண்டு தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.

அட்டைப்படம்:  வாணி போஜன்

- அ.திவ்யா, காஞ்சிபுரம்