கொரோனாவிற்கு எதிரான கேரளாவின் வெற்றி! சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஷைலஜாகொரோனாவிற்கு எதிரான போராட்டத்தை உலகம் முழுவதும் எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில், சில  நாடுகள் அதை வென்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றன. அவர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், பல சர்வதேச ஊடகங்களின் நன்மதிப்பையும் பெற்றிருக்கும் கேரள மாநிலம் எவ்வாறு அதைச் சாத்தியப்படுத்தினர் என்பதை விளக்கியிருக்கிறார் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஷைலஜா.

‘‘இது அவ்வளவு சுலபமல்ல. வெளியிலிருந்து மாநிலத்திற்குள் வருகை தரும் அனைவரையும் கண்டுபிடிப்பதற்கே சிரமமாக இருந்தது. அவர்களைத் தனிமைப்படுத்தலில் வைப்பதும் ஒரு கடினமான பணி. இவ்வேளைகள் எளிமையானதாகத் தோன்றலாம், ஆனால் அதற்கான ஏற்பாடுகள் எளிதானதல்ல.

தொடர்புள்ளவர்களைக் கண்காணித்தல், தனிமைப்படுத்துதல், பொருட்கள் கொண்டு வருவதற்கு, நோயாளிகளின் மன ஆரோக்கியம், போக்குவரத்து, நிதி… என இதற்காக பதினெட்டு நிபுணர் குழுக்கள் அமைத்து வேலை செய்தோம். இதில் ஒரு குழுவினரது வேலை கொரோனாவால் இறந்தவர்களது உடலை எவ்வாறு அடக்கம் செய்வது போன்ற நெறிமுறைகளைக் கற்பிப்பது” என்று கூறும் ஷைலஜா, இந்த வைரஸ் குறித்த அறிமுகம் பற்றிக் கூறினார்.

“இந்த வைரஸ் பரவல் குறித்தான, வுஹான் பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல்களைப் படித்தேன். இந்த வைரஸ் SARS , MERS குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் என்றும், பின் அதற்கு கொரோனா என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரஸ் ரொம்ப ஆபத்தானது. மனிதர்களைத் தாக்கும் என்பதையும் தெரிந்து கொண்டேன். இதெல்லாம் படிக்கும் போது என் மனதிற்கு முதலில் வந்தது வுஹானில் படிக்கும் கேரள
மாணவர்கள்தான்.

உடனே சுகாதார செயலாளர் ராஜன் கோப்ராகடேவை தொடர்பு கொண்டேன். ராஜனும், ‘இதற்கு உடனடியாக நாம் தயாராகுவோம்’ என்று சொன்னார். ஜனவரி 24ஆம் தேதி இதற்கென தனி கண்ட்ரோல் ரூம் ஆரம்பித்தோம். மாவட்டத்தில் உள்ள மருத்துவ அதிகாரிகளுக்கு இந்த வைரஸ் குறித்த ரிப்போர்ட்டுகள் அனுப்பினோம். ஜனவரி 27ஆம் தேதி வுஹானிலிருந்து ஒரு விமானம் கேரளாவிற்கு வந்தது. அதில் பயணித்த எந்த பயணிக்கும் நோய் அறிகுறி இல்லை. அவர்களை வீட்டிற்கு அனுப்பித் தனிமைப்படுத்தப்பட்டு, ஏதாவது அறிகுறி தெரிந்தால் தகவல் கொடுக்க
அறிவுறுத்தினோம்.

அதன்படி, ஜனவரி 30ஆம் தேதி, ஒரு மாணவிக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக திருச்சூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரோடு அவரது பெற்றோரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 2ஆம் தேதி, ஆலப்புழாவை சேர்ந்த ஒரு மாணவரும், 3ஆம் தேதி காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் மூவருக்கும் ரிசல்ட் பாசிட்டிவாக வந்தது. ஆனால், அவர்கள் மூலம் யாருக்கும் பரவவில்லை.  

அதன் பின்னரும் விமான நிலையத்தைக் கண்காணிப்பது நிறுத்தவில்லை. சுகாதார பணியாளர்கள் தர்மா மீட்டர் வைத்து பரிசோதனை  செய்யும் போது சிலர், ‘இது பதட்டத்தை ஏற்படுத்துகிறது. அதிகபிரசிங்கி தனமாக இருக்கிறது…’ என்று கேட்டனர். இதை எதிர் கொண்ட போதும், யாரையும்  கொரோனா வைரஸால் இழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

நாங்கள் யாரையும் பின் பற்றவில்லை. நிறையப் பாடங்களை கற்றுக் கொண்டோம். உலக சுகாதார நிறுவனம் கூறும் வழிமுறைகளை கடைப்பிடித்தாலும், மாநிலத்திற்கென்று உருவாக்கப்பட்ட சில நெறிமுறைகளையும் பின்பற்றினோம். அந்த சமயத்தில் தான் கொரோனா தொற்று நோயாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இது ஒரு தொற்று நோயாக மாறும் என்று முன்கூட்டியே நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கி இருந்தோம்” என்கிறார் ஷைலஜா.

‘‘திட்டங்கள் எப்போதும் அடிக்கடி மாற்றப்பட வேண்டியது. ஆனால், இது மாறவில்லை” என்று கூறும் ஷைலஜா, ‘‘இந்நோய் குறித்தான தகவல் கிடைத்த போது திட்டம் A,B,C என்று வகைப்படுத்தினோம். திட்டம் A என்பது கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்க அதிக இடங்களைக் கொண்ட மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளை அடையாளம் காணுதல்.

அதாவது 300 படுக்கைகளுக்கு அதிகமுள்ள இடங்கள். திட்டம் B,  தாலுக்காவில் உள்ள மருத்துவமனைகள், சரியாக இயங்காத தனியார் மருத்துவமனைகள் இணைத்தல். திட்டம் C அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கொரோனா வைரஸ் மருத்துவ மையங்களாக மாற்றுதல். ஒருவேளை சமூக பரவல் ஏற்படும் பட்சத்தில் பள்ளிகள், அரங்குகளை… கொரோனா மருத்துவமனைகளாக மாற்றும் திட்டமும் கூட எங்களிடம் இருந்தது.

மருத்துவ சேவையில் ஈடுபடும் மனித வளங்கள் பற்றாக்குறைகள் ஏற்படலாம். அதனால், மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பட்டியலைச் சேகரித்தோம். ஆரம்பத்தில் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் நோயாளிக்குப் பெரிய சுமைதான். தற்போது அந்த நாட்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஒரு சிலர் 14 நாட்களிலேயே குணமாகின்றனர். ஆனால், சில கடின வழக்குகளுக்கு இதை மாற்ற முடியாது” என்று கூறும் ஷைலஜா, தங்களது பணிகளில் உள்ள நிறை குறைகளைக் குறிப்பிடுகிறார்.

“இது வரை குறைபாடுகள் என்று சுட்டிக்காட்டப்படவில்லை. நாங்களே இதைவிடச் சிறப்பானது ஒன்றைக் கண்டுபிடிக்கும் போது அதில் உள்ள குறைகள் தெரியும். சிறப்பான பல வகையான சாரத்திலிருந்தே திட்டங்கள் உருவாக்கியிருக்கிறோம். அதனால், சிறந்ததைப் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை.

அறிகுறியற்ற நபர்களை நாங்கள் சோதிக்கவில்லை. ஏனெனில் அது சாத்தியமற்றது. மூன்று, நான்கு நாட்களுக்கு முன் தொற்று ஏற்பட்டிருந்தால் ரிசல்ட் நெகட்டிவ் என்றுதான் வரும். இதன் விளைவு எதிர்மறையாக இருக்கும். மருத்துவ ஆலோசகர்களைப் பின்பற்ற மாட்டார்கள். தவிரப் பலருடன் பழக வாய்ப்பை உருவாக்கும். அதனால் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்த பிறகுதான் பரிசோதனை செய்து அவர்களைத் தனிமைப்படுத்துகிறோம்.

ஆரம்பக் கட்டத்தில் பரிசோதனைகள் செய்வதற்குச் சவாலாக இருந்தது. போதுமான பரிசோதனைக் கருவிகள் இல்லை. குறிப்பாக ஆர்.என்.ஏ வை பிரித்தெடுக்கும் கருவி. மற்ற நாடுகள், இந்தியாவில் தயாரிக்கும் இடங்களில் தொடர்பு கொண்டு வாங்கினோம். அதை நுணுக்கமான முறையில் கையாண்டோம். இவருக்கு உறுதியாக இருக்குமென்று கருதும் நபருக்கே முன்னுரிமை அளித்தோம்.

தொற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களைச் சோதிக்கக் கிடைக்கக் கூடிய அனைத்து கருவிகளையும் பயன்படுத்தாமல், புத்திசாலித்தனமாகக் கையாண்டோம். இல்லையெனில் அதிக ஆபத்து உள்ளவர்கள் சோதிக்கப்பட வேண்டியிருக்கும் போது நாங்கள் கருவிகளை விட்டு வெளியேறியிருப்போம்” என்று கூறும் ஷைலஜா, “மத்திய அரசிடமிருந்து அதிக அளவில் நிதி உதவி எதிர்பார்க்கிறோம். வாங்கிய நிதியெல்லாம் காலியாகிவிட்டது. பணம் இல்லாமல் எதையும் எதிர்கொள்ள முடியாத நிலையில்தான் இருக்கிறோம்” என்கிறார்.

மேலும், “பொதுச் சுகாதாரத் துறையில் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானது. நான் சுகாதார அமைச்சராக ஆனதிலிருந்து திரும்பத் திரும்பச் சொன்ன ஒன்று, சுகாதாரத் துறையில் மத்திய அரசின் முதலீட்டை அதிகரிப்பதாகும். தற்போது சுகாதார அமைப்பில் நாட்டின் முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GTP) 1% மட்டுமே. அதில் கேரளாவுக்குக் கிடைப்பது ஒரு சிறிய சதவீதமே. சிறிய பங்கை வைத்துக் கொண்டு சுகாதாரத்துறையில் மாநிலத்தால் ஏதும் செய்ய முடியவில்லை. மக்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை வலிமைப்
படுத்துவது எங்கள் முக்கிய கொள்கை. இதற்கு அதிக முதலீடு அவசியம்.

அதிக அளவில் சுகாதாரத் துறையில் முதலீடு செய்த நாடுகளே கொள்ளை நோய்களை எதிர் கொள்ளாமல் தோற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். உதாரணத்திற்கு நார்வே, ஸ்வீடன். நான் எப்போதும் இந்த நாடுகளைச் சுகாதாரத் துறையில் முன் மாதிரியாக முதலீடு செய்வதற்கு மேற்கோள் காட்டுவேன். ஏனெனில் அவர்கள் 30%  சுகாதாரத் துறைக்காக  ஒதுக்குகிறார்கள்.

மக்களை மையமாக வைத்துத் தீட்டப்படும் திட்டமே முக்கியமானது. அந்த வகையில் கேரளா முன்மாதிரியாக உள்ளது. 1957ஆம் ஆண்டிலிருந்தே மக்களை மையமாக வைத்துத்தான் கேரளா இயங்கிக் கொண்டிருக்கிறது. நம்மிடம் எவ்வளவு வளங்கள் இருக்கிறது என்பது முக்கியமல்ல. இருக்கும் வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதுதான் முக்கியம்” என்பதை சுட்டிக்காட்டும் ஷைலஜா, கேரளா எதிர்கொண்ட நிபா வைரஸ் அனுபவம் தற்போது கொரோனாவை எதிர்கொள்ள எவ்வாறு உதவியுள்ளது என்பதைக் கூறினார்.

‘‘டீம் ஒர்க் படிதான் இதை எல்லாம் செய்தோம். மகிழ்ச்சி போலவே சுமைகளைப் பகிர்ந்து கொள்கிறோம். அலுவலகத்தை ஒரு குடும்பத்தை போல்தான் பார்க்கிறேன். சரியாகச் செய்யவில்லை என்றால் திட்டுகிறேன், கடினமாக உழைப்பவர்களைப் பாராட்டுகிறேன். பாராட்டு ஊழியர்களை மிகவும் நேர்மையாக ஆக்குகிறது” என்றார்.

அன்னம் அரசு