மதங்களை கடந்து மனிதம்!



கடந்த வாரங்களில் சமூக வலைத்தளங்களில் நடிகை ஜோதிகா ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய பேச்சு வைரலாக பரவி வந்தது. அதற்கு பலர் எதிர்ப்புகளையும் ஆதரவுகளையும் தெரிவித்து வந்தனர்.
பெண்களை மையமாகக் கொண்ட ‘ராட்சசி’ சிறந்த படத்திற்கான விருது நடிகை ஜோதிகாவிற்கு வழங்கப்பட்டது. அந்தப் படத்தில் சரியாகப் பராமரிக்கப்படாத அரசு பள்ளிக்கூடத்திற்குப் புதிதாக நியமிக்கப்படும் தலைமை ஆசிரியராக ஜோதிகா நடித்திருப்பார்.

அந்த படத்தின் ஷூட்டிங் தஞ்சாவூரில் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை காணாமல் போக வேண்டாம் என அங்கிருக்கும் மக்கள் கூறியதால், ஷூட்டிங் முடிந்தவுடன் கோயிலுக்கு சென்று அங்கு ஈஸ்வரனை தரிசிக்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே அவர் அந்த  கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது அதன் அழகினை உதய்பூர் அரண்மனையுடன் ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளார். மறுநாள் அரசு மருத்துவமனை ஒன்றில் படப்பிடிப்பு.

அங்கு சென்றவர், அது முறையாகப் பராமரிக்கப்படாமல், மோசமான நிலையில் இருந்ததை கண்டுள்ளார். சுகாதாரமாக இருக்க கூடிய மருத்துவமனையின் நிலை தலைகீழாக இருப்பதை கண்டு மனமுடைந்து கோயிலுக்குச் செல்ல மனமில்லாமல் அப்படியே திரும்பியதாக, அந்நிகழ்ச்சியில் தன் அனுபவத்தை பகிர்ந்தார். இதையடுத்து, தன் படத்தில் வரும் ஒரு காட்சியை சுட்டிக்காட்டி, அதில் கூறியிருப்பது போல, மக்கள் கோவில் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை போல, மருத்துவமனைகளுக்கும் பள்ளிகளுக்கும் தங்களால் முடிந்த ஒரு பங்கை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

ஆனால், சமூக வலைத்தளங்களில் இது பல விதமாக திரிக்கப்பட்டு, நடிகை ஜோதிகா கோவில்களையும், இந்து மதத்தையும் எதிர்ப்பதாக பேசப்பட்டது. இந்தியாவில் அனைத்து விதமான ஆன்மீக தளங்களும் பல நூறு ஆண்டுகளுக்கான வரலாற்று சின்னங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தும் இச்சமயத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நமக்கு மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும், மருத்துவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டியுள்ளது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் சேவையை உலக நாடுகள் அனைத்துமே கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில் ஒரு மருத்துவமனை சுகாதாரமின்றி செயல்படும் போது, கொஞ்சம் மனம் பதைபதைக்கதான் செய்யும்.

நடிகை ஜோதிகாவின் கோரிக்கையை ஏற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மற்றும் அதிகாரிகளும் இணைந்து, அவர் குறிப்பிட்ட அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவமனையில் உள்ள குறைகளை அறிந்து அதற்கான மாற்று நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

ஆனால் இங்கு ஜோதிகாவை தரக்குறைவாக பேசி பல பதிவுகளும் எதிர்ப்புகளும் தொடங்கின. சமூக வலைத்தளங்களில் ஜோதிகாவையும் அவர் குடும்பத்தையும் துன்புறுத்தி இழிவுபடுத்தும் பதிவுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஜோதிகா தன் கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இது பலரின் மனதையும் துன்புறுத்தியுள்ளதாகச் சிலர் தெரிவித்துள்ளனர்.  

இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எப்போதோ ஒரு விருது விழாவில் பேசியதை சிலர் இப்போது விவாதமாக மாற்றுகிறார்கள் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.

‘‘கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை சிலர் குற்றமாகப் பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை’ என்பது ‘திருமூலர்’ காலத்துச் சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்துக் கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.

மேலும் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாகவே எல்லா மதத்தைச் சார்ந்தோரும் கருதுகின்றனர். பல ஆன்மீக பெரியவர்களும் இதையே கூறுகின்றனர். அதன் அடிப்படையில் ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதங்களைக் கடந்து மனிதத்தை விதைக்கவே விரும்புகிறோம் என்று அதில் தெரிவித்திருந்தார்.

ஒருவர் நடிகை என்ற காரணத்திற்காகவும், அவர் நேரில் சந்தித்த அனுபவத்தை வைத்து ஒரு கருத்தை முன்வைத்திருந்தும், அதை அரசியலாக்கி, தகாத வார்த்தைகளால் சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கும் இந்த போக்கு பலருக்கும் அச்சத்தையே விளைவித்திருக்கிறது. நேரில் பேசத் தயங்கும் வார்த்தைகளை இணையத்தில் சுலபமாகப் பதிவிட்டு கடந்துபோகும் மனப்பான்மையும் விபரீதமாகவே இருக்கிறது.  

ராணுவமும் ஆயுதமும் நாட்டு மக்களைக் காப்பாற்றுவது போல, மருத்துவமும் கல்வியும் மக்களைப் பாதுகாக்க அத்தியாவசியமானது என உலக தலைவர்கள் அனைவருமே தற்போது உணர்ந்துள்ளனர். இந்த கொரோனா தொற்றுநோய் காலத்திலாவது மக்கள் மருத்துவம், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றுக்கு முன்னுரிமை வழங்கி நிதி ஒதுக்க வேண்டும். மருத்துவமும் கல்வியும் என்று தரமாக நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கிறதோ, அப்போது இந்நாடு தாமாக வளர்ச்சியடைந்துவிடும்.

ஸ்வேதா கண்ணன்