பூரியில் அருள்பாலிக்கும் ஜெகன்நாதர்!ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையிலுள்ள நகரத்தில் அமைந்த வைணவ திருக்கோவிலே ஜெகன்நாதர் கோவில். இக்கோவிலில், பிரபஞ்சத்தின் கடவுள் கிருஷ்ணர். பலராமர், சுபத்திரை விக்ரகங்களும் உள்ளன. உலகிலேயே கருவறையில் மரத்தாலான மூலவர்கள் சிலை உள்ள கோவில் இக்கோவில்தான்.
இச்சிலைகள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, உரிய சடங்குகளுடன் புதிய மரத்தால் செதுக்கி நிறுவப்படுகிறது. இம்மரம் புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரம்மத்தினால் செய்யப்பட்டதாகும்.

கோவில் வரலாறு பூரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில், கிருஷ்ண பகவான் தோன்றி, பூரி கடலில் மிதந்துவரும் பெரிய மரக்கட்டையை கொண்டு கோவிலுக்கான சிலையை செய்யுமாறு கூறினார். அதன்படி கடலிலிருந்து எடுத்து வரப்பட்ட அந்தப் பெரிய மரக்கட்டைக்கு
பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து கிருஷ்ணர் சிலை செய்யும்படி உத்தரவு இட்டார் மன்னர்.

ஆனால் தச்சர்களின் தலைவர் அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அதனால், செய்வதறியாமல் திகைத்தனர். அந்த சமயத்தில் வயது முதிர்ந்த தச்சரைப்போல் வேடமணிந்து விஸ்வகர்மா  அங்கு வந்தார். அவர் அரசனிடம் சிலைகளை 21 நாட்களில் முடித்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.
அதுவரை தான் வேலை செய்யும் அறையை யாரும் திறக்கக்கூடாது என்று கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். இப்படியாக 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளி சத்தம் கேட்டது. எனவே, அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறை  பக்கம் போகவில்லை. அதை அடுத்து, மூன்று நாட்கள் உளி சத்தமே இல்லாமல் இருந்தது.

இதனால், அரசர் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அவசரப்பட்டு கதவைத் திறந்துவிட்டார். உள்ளே இருந்த விஸ்வகர்மா மறைந்துவிட்டார், அசரீரியாக அறையிலிருந்து குரல் கேட்டது. ‘‘மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் அறைக்கதவைத் திறந்துவிட்டாய். எனவே, இக்கோவிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படியிருந்தாலும் பரவாயில்லை அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு என்று கூறினார். இந்த கோவிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையைக் கடைபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள்’’ என்று அருள் பாலித்தார்.

அந்த அறையில் வேலை முடியாத நிலையில், அரைகுறையாக கிருஷ்ணர், பலராமர், சுபத்திரை ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளை அரசர் பிரதிஷ்டை செய்தார். இந்திரத்துய்மனின் காலத்திற்குப்பிறகு அவர் கட்டிய  கோவில் பாழடைந்துவிட்டது. அதன்பிறகு, அந்த இடத்தில் பலகோவில்கள் கட்டப்பட்டன.

அவை அனைத்தையும் கடல் மூழ்கடித்துவிட்டது. தற்போதைய கோவில் ஏறக்குறைய கி.பி. 1135-ம் ஆண்டு அரசர் அனந்தவர்மனால் துவக்கப்பட்டு, 1200 ஆம் ஆண்டு இவரது பேரன் ஆனங்காயி மாதேவ் என்ற அரசனால் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோவில், பஞ்சரத முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் மிக உயரமான கருவறை கோபுரத்தின் மேல், 8 உலோககலவையால் செய்யப்பட்ட நீலசக்கரம் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாலய கொடிமரம் ‘ஏழைகளுக்கு அருள்பவன்’ என்னும் பொருளில் பவன் பாவனா என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் வணங்கினாலே ஜெகநாதன் அருளைப் பரிபூரணமாக பெறலாம். ராமாயணத்தில் இராமபிரானும், மகாபாரதத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வணங்கினர் என்று புராணங்கள் கூறுகின்றன.

மலைக்க வைக்கும் தேரோட்டம்

பெரும்பாலும் கோவில்களில் பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் ஒருநாள் மட்டும் தேர்த்திருவிழா நடக்கும். ஆனால், பூரிஜெகநாதர் கோவிலில் 9 நாட்களும் தேர்த்திருவிழா நடக்கும் என்பது தான் சிறப்பு. உலக புகழ்பெற்ற இத்தேரோட்டத்தில் ஒவ்வொரு வருடமும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட, பக்தர்கள் கலந்துகொள்வார்கள். மூன்று தேர்கள் அலங்கரிக்கப்பட்டு, அதில் முதல் தேரில் பலராமரும், அடுத்து சுபத்திரை, கடைசியாக ஜெகநாதர் தேரும் உலா வரும்.

ரதயாத்திரை ஆண்டுதோறும் ஜூன்மாதம் ஒன்பது நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு வருடமும், பல ஆயிரம் டன் மர தடிகள் கொண்டு தேர் செய்யப்படும். மூலவ சுவாமி திருமேனிகள் 108 குடங்கள் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு தான் தேரில் நிறுவப்படும். 16 சக்கரங்களைக் கொண்ட ரதத்தில் சிவப்பு, மஞ்சள்நிற துணியால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஜெகநாதர் வருவார்.

14 சக்கரங்களைக்கொண்ட தேரில் சிவப்பு, பச்சைநிற துணிகளில் அலங்கரிக்கப்பட்ட பலராமரும், 12 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, கருப்பு துணியால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுபத்திராதேவியும் எழுந்தருள்வார். தேர் வீதிஉலா வரும் முன்பு பாரம்பரிய வழக்கப்படி, பூரி மன்னர் தங்க துடைப்பத்தால் ரத்தன வீதியை பெருக்கி சுத்தம் செய்வார். ரதயாத்திரை தொடங்கியவுடன் மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள குண்டிச்சா கோவிலுக்கு முதலில் சென்றடையும். அங்கு ஏழு நாட்கள் தங்கி, ஓய்வெடுத்தபின், ஒன்பதாவது நாளாக பூரி ஆலயத்தில் யாத்திரை முடிவடையும்.

உலகிலேயே பெரிய மடப்பள்ளி

இக்கோவிலில் உள்ள மடப்பள்ளியில் 56 வகையான உணவுகள் சமைக்கப்
படுகிறது. காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சுவாமிக்கு ராஜ விருந்தாக படைக்கப்படுகிறது. உணவுகள் அனைத்தும் மண் பானைகள் மற்றும் விறகடுப்பில் சமைக்கப்படுகிறது.

அடுப்பின் மேல்,  ஒன்றன் மீது ஒன்றாக ஐந்து பானைகள் அடுக்கப்படும். மேலே உள்ள பானையில் உள்ள உணவு தான் முதலில் வேகும் என்பதுதான் இக்கோவிலின் அதிசயம். ஒருமுறை சமையலுக்கு உபயோகப்படுத்தப்பட்ட பானைகளை மறுபடியும் பயன்படுத்துவதில்லை. அதனை உடைத்துவிடுகின்றனர்.

கோவிலின் சிறப்புகள்

நான்கு லட்சம் சதுர அடியில் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கோவில். கருவறை கோபுரத்தின் மேல் தினமும் கொடி ஏற்றப்படும். அந்த கொடி காற்றின் எதிர்திசையை ேநாக்கி தான் பறக்கும். கோபுரத்தின் உச்சியில் உள்ள சுதர்சனசக்கரம், நகரத்தில் எங்கிருந்து பார்த்தாலும் நம்மை பார்க்கும்படி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதே போல் கோயில் கோபுரத்தின் நிழல் தரையில் படியாது. அதே போல் கோவில் கோபுரத்தின் மேல் பறவைகள் பறப்பதும் இல்லை, கோபுரத்தில் கூடு கட்டி வசிப்பதும் இல்லை.

ஜி.சிவக்குமார்