தனிக்காட்டு ராணிகள்



-ஜெ.சதீஷ்

இந்தியாவின் முதல் பெண் வனத்துறை அதிகாரிகள் பணியாற்றும் பெருமையை சேர்ந்தது குஜராத் கிர் தேசிய வன உயிரியல் பூங்கா. இந்த பூங்கா தான் ஆசிய சிங்கங்களின் வாழ்விடம் என்று அறியப்பட்டாலும், இங்கே வேறு சில விலங்குகளும் வாழ்கின்றன. காட்டுப் பூனைகள், இந்திய சிறுத்தை புலிகள், கரடிகள், வரிக் கழுதைப் புலிகள், இந்திய நல்ல பாம்புகள் போன்றவைகள் அவற்றில் சில.

கொடிய விஷப் பாம்புகளை இங்கே காணலாம். இப்பகுதியில் பெண் வனக்காவலர்கள் துணிச்சலோடு பணியாற்றி வருகிறார்கள். தினமும் சுமார் 25 கிலோ மீட்டர் வரை காட்டுப்பகுதியை கண்காணித்து வருகிறார்கள். இதில் மிகப் பெரிய சவால்களையும் அவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். பள்ளத்தில் தவறி விழுகின்ற மிருகங்களை காப்பாற்றும் வேலையையும் ஆண்களுக்கு நிகராக செய்து வருகின்றனர். 

இவர்களின் சாகச பணி அனைவரையுமே கவர்ந்திருக்கிறது. இந்த பரபரப்பான வேலையை குறித்து வனத்துறை அதிகாரி மம்தா அசாமா கூறுகையில்... “கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். கிணற்றிலும், சேற்றிலும் தவறி விழுந்த சிங்கங்கள், சிறுத்தைகள், மலைப்பாம்புகள் உள்ளிட்ட விலங்குகள், மனித வாழ்விடத்திற்கு வழி தவறி சென்றுவிட்ட விலங்குகள் என இதுவரை 800 விலங்குகளை காப்பாற்றியுள்ளேன். 

முதலில் எனக்கு மிகவும் அச்சமாக இருந்தது. ஆனால், இன்று எனக்கு பயம் என்றால் என்ன வென்றே தெரியாது. காட்டில் சின்னச் சின்ன வேலைகளை செய்யவே பெண்கள் தகுதியானவர்கள் என்று ஆண் அதிகாரிகள் நினைத்தனர். எங்களுக்கு கடினமான பணிகள் அளிக்கப்படவில்லை. அலுவலகத்தில் ஆறு மாத காலம் பணிபுரிந்தபின், நான் ஏதாவது முக்கியமான பணி செய்யவேண்டும் என்று கருதினேன். அப்போது, விலங்குகளை காப்பாற்றும் பணிக்கு பெண் பாதுகாவலர்கள் யாருமில்லை.

2007-ம் ஆண்டு கிர் காட்டை பாதுகாக்கும் பணிக்காக 44 பெண் வனக் காவலர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தனர். அதில் நானும் ஒருவர்’’ என்றார் மம்தா அசாமா. ஜெய படாட் கூறுகையில்... ‘‘ எந்த வித முன் அனுபவமும் இல்லாமல்தான் இந்த வேலைக்கு வந்தேன். தற்போது எந்த வித பயமுமின்றி பணியாற்றி வருகிறேன். இந்த காடு இப்போது எங்களுக்கு பழகிவிட்டது’’ என்கிறார் ஜெயஸ்ரீ.