ஊசிமுனை ஓவியங்கள்



ஸாரி ஹைலைட் (ஆரி காட்)

ஒரு சேலை முழுவதையும் வடிவமைக்க வேண்டும் என்றால் அதற்கென ஆரி காட் உள்ளது. இது தனித்தனி ஃப்ரேமாக இருக்கும். இடத்தை அடைக்காது. தேவைப்படும்போது ஃப்ரேமை இணைத்து காட்டாக மாற்றிக் கொள்ளலாம். வேலை முடிந்ததும் தனித்தனியாகப் பிரித்துவிடலாம். இந்த ஆரி காட்டில் ஒரு முழு நீளச் சேலையினையும் இணைத்து சுற்றி அமர்ந்து வடிவமைக்க மிகவும் வசதியாக இருக்கும். ஒரே நேரத்தில் 6 பேர் அமர்ந்து ஒரு சேலையினை வடிவமைக்கும்போது இரண்டே நாளில் முழுச் சேலையினையும் முடித்துவிடலாம்.

இந்த முறையினை நமக்காக செய்து காட்டுகின்றனர். மோகன் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் பயிற்சியில் இருக்கும் பெண்கள். மிகவும் சிம்பிளாக எடுக்கப்பட்ட ஒரு சேலை, நம் எண்ணங்களால் மேலும் மெருகூட்டப்பட்டு, நாம் அணியும்போது சற்று தூக்கலாய், கூடுதல் அழகியலுடன் எடுத்துக்காட்ட, இந்த இதழில் தோழி வாசகிகளுக்கு ஸாரி ஹைலைட் செய்து காட்டுகின்றனர், மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவன இயக்குநர் செல்வி மோகன் தலைமையில் பயிற்சியாளர் அனுராதாவுடன் மாணவி சசிகலா.

தேவையான பொருட்கள்

ஆரி நீடில்ஸ் 2, மணி கோர்க்கும் வயர், விரும்பும் வண்ணத்தில் சில்க் த்ரட் நூல், கோல்ட் வண்ண சுகர் பீட்ஸ், கோல்ட் வண்ண ஹஃப் பீட்ஸ், கோல்ட் வண்ண ஜமுக்கி, கோல்ட் வண்ண ஸ்டோன், ஒட்டுவதற்கு கம், பென்சில், கத்திரிக்கோல், துணி மாட்டும் உட்ஃப்ரேமுடன் இரும்பு ஸ்டாண்ட்.

செய்முறை

1. ஹைலைட் பண்ண நினைக்கும் சேலையினை உட் ஃப்ரேமில் தொய்வின்றி இழுத்து இணைத்து அதை இரும்பு ஸ்டாண்டில் பொருத்தவும். அதன் மீது விரும்பிய வடிவத்தை டிரேஸ் செய்து துணியின் மீது கார்பன் வைத்து துணி மீது டிரேஸ் செய்யவும். நேரடியாக வரையத் தெரியும் என்றால் அப்படியே துணியில் வரையலாம்.

2. இரும்பு ஸ்டாண்டின் அடிப் பக்கம் இடது கையின் ஆட்காட்டி விரலில் மணி கோர்க்கும் வயரை சுற்றிக்கொண்டு, ஆரி ஊசி முனையில் ஹாஃப் பீட்ஸை கோர்த்து ஊசி முனையினை மேலிருக்கும் நெலிந்த வடிவத்தில் குத்தி உள்ளிருக்கும் வயரை மேலிழுத்து, வயர் மேல் வரும்போது, ஒவ்வொரு ஹாஃப் பீட்ஸ் அல்லது இரண்டு மூன்றாக இணைத்து வளைவுகளில் உசி முனையால் அருகருகே குத்தி தொடர வேண்டும். சேலை முழுவதும் உள்ள இந்த வளைவுகளை ஹாஃப் பீட்ஸால் மெருகூட்டலாம்.

3. வரைந்து வைத்துள்ள பூ வடிவத்தின் நடுவில் கோல்ட் வண்ண ஸ்டோனை கம் கொண்டு ஒட்டி,  சிறிது நேரம் ஸ்டோன் துணியில் ஒட்டிக்கொள்ளும் வரை காய வைக்கவும்.

4. கம்மில் ஸ்டோன் ஒட்டிக் கொண்டதும், ஸ்டோனை சுற்றி, அதே முறையில் சுகர் பீட்ஸை வட்ட வடிவில் கோர்த்து நடுவில் இருக்கும் ஸ்டோனை மேலும் மெருகூட்டவும்.

5. சுற்றியுள்ள வட்ட வடிவங்களிலும் கம் கொண்டு ஸ்டோனை ஒட்டி அதே முறையில் சுகர் பீட்ஸை ஸ்டோனை சுற்றி கோர்க்கவும்.

6. பூவைச் சுற்றியுள்ள இலை வடிவங்களில் அதே பாணியினை பின்பற்றி, அடிப்பகுதியில் சில்க் த்ரெட்டால் குத்தி, ஆரி ஊசி முனையில் ஜமுக்கியினை கோர்த்துக் கொண்டு, இலை வடிவத்தை நிரப்பவும். ஜமுக்கியினை சுற்றி ஹாஃப் பீட்ஸை கோர்த்து மேலும் அழகூட்டவும்.

7. இந்த முறையினை சேலை முழுவதும் ஆங்காங்கே இடைவெளிவிட்டு வடிவமைத்தால், சாதாரண வண்ணத்தில் இருந்த சேலை நம் கலை உணர்வால் மேலும் ஹைலைட்டாகி, பார்ப்பதற்கு ஒரு ரிச் லுக்குடன் ஜொலிக்கும். மாலை நேர பார்ட்டிகளுக்கு உடுத்திச் செல்லும் அளவிற்கு ரிச்சான லுக்கில் காட்சி தரும். பிறகென்ன பார்ட்டியில் பல வண்ண சோடியம் விளக்கின் ஒளியில் நீங்களும் பிரகாசமாகி விடுவீர்கள்.

ஒரே வண்ணத்தில் இருக்கும் சாதாரண சேலையினை மேலும் மெருகூட்டி ஹைைலட் செய்ய, ஒரு சேலைக்கு 5000 முதல் வேலைப்பாட்டையும், எடுத்துக் கொள்ளும் நேரத்தைப் பொருத்து விலை நிர்ணயம் செய்யலாம்.

எழுத்து வடிவம்: மகேஸ்வரி படங்கள்: ஆர்.கோபால்