நம்பிக்கை வித்து



- மகேஸ்வரி

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு லிஸி வெலாஸ்கோவெஸ் அளித்த பேட்டி அவர் வாழ்வை புரட்டிப்போடும் என அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வீடியோ வலைத்தளமான யூ ட்யூப் இணையத்திலும் “உலகின் குரூரமான பெண்” என்ற தலைப்பின் கீழ் லிஸி வெலாஸ்கோவெஸ் நேர்காணல் வெளியிடப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட 4 கோடி மக்களால் பார்க்கப்பட்ட இக்காணொளியின் கீழ் சிலர் கொஞ்சமும் மனசாட்சியற்று, மிருகம் எனும் அளவிற்கு அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி லிஸிக்கு கருத்து பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர், “இவ்வுலகிற்கு நீ செய்யக்கூடிய ஒரே உதவி, ஒரு துப்பாக்கி கொண்டு உன்னை நீயே சுட்டுக்கொள்வதுதான்” என்றும் வக்கிரமான வார்த்தைகளையும் பயன்படுத்தி இருந்தனர்.

இந்த கேலி கிண்டலுக்கு எல்லாம் சற்றும் அசராத லிஸி, ‘‘நான் அழகில்லை என்பதையும் பல முறை யோசித்திருக்கிறேன். அந்த சமயத்தின் போது, தினமும் காலை எழுந்து கண்ணாடியில் என்னுடைய முகத்தை பார்ப்பதற்கே பிடிக்காமல் போனதும் உண்டு. ஆனால், என்னுடைய உண்மையான சொரூபம் எதுவென எனக்கு மெதுவாகத்தான் புலப்பட்டது. என் வாழ்வை நானே என் கையிலெடுத்து, அதை நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ மாற்றுவது என்பது என்னிடம் மட்டுமே உள்ளது என்பதையும் உணர்ந்தேன்.

இருப்பினும், என்னுடைய வெளிப்புறத் தோற்றம்தான் எனக்கான அடையாளம் எனவும் முடிவு செய்தேன். வெற்றியும் சாதனைகளுமே என்னுடைய குறிக்கோள்” என்கிறார். சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு, மனம் தளரும் மனிதர்களுக்கு மத்தியில், லிஸி வெலாஸ்கோவின் கதை நமக்கு மிகப் பெரிய பாடம். தன்னம்பிக்கையினை வளர்த்தெடுக்கும் மூன்று புத்தகங்களை வெளியிட்டு அசத்தியிருக்கிறார் லிஸி.

அவரது புத்தகத்தின் முதல் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் வரிகள் இவை, “செயற்கை முறையில் அழகு மிளிரும் பிரபலமானவர்களுக்கு மத்தியில், லிஸி வெலாஸ் கோவெஸ் இயல்பாகவும், மாறுபட்டு இருப்பதுடன், அவரது கதை தனிமைப்படுத்தப்பட்டவர்கள், நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஒரு புதுவித ஊக்கத்தை தரும்” என்பதாகும். லிஸிக்கு ஏற்பட்டது மிகவும் அரிதான கொடிய வகை நோய்.

நோயின் காரணமாய் லிஸியின் உடல் எடை வழக்கமான எடைபோல் இல்லாமல் இருந்தது. அவரின் உடம்பில் கொழுப்பு இல்லாதது மட்டுமின்றி, உடலுக்குத் தேவையான கொழுப்பும் சேராது என்பதே இந்நோயின் உச்சம். இவரது உடலில் அதிகபட்சமாக 29 கிலோ எடை மட்டுமே இருந்துள்ளது. இந்நோய் காரணமாக, தனக்குத் தேவையான சக்தியினைப் பெற, 15 நிமிடத்திற்கு ஒருமுறை உணவை எடுக்க வேண்டிய கட்டாயம் லிஸிக்கு ஏற்படுகிறது.

லிஸியின் வலது கண்ணில் பார்வை குறைபாடும் உள்ளது. தனக்கு ஏற்பட்டுள்ள இந்தக் குறையினை லிஸி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், எந்நேரமும் சிரித்த நிலையில், “நான் எவ்வளவு சாப்பிட்டாலும் என் எடை கூடாது. எடை கூடுமே என்கிற கவலையின்றி நான் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்” என தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையினை பாஸிட்டிவ் எனர்ஜியாக மாற்றி மகிழ்கிறார். இது தனக்கு ஒரு விதத்தில் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வு எனவும் நினைக்கிறார் இந்த நம்பிக்கை மனுஷி.

லிஸியின் குழந்தைப் பருவத்தில், அவரால் தானாக தவழவோ, நடக்கவோ, மற்ற வேலைகளை செய்யவோ இயலாது. இருப்பினும் லிஸியின் பெற்றோர் சற்றும் சோர்வடையாமல் தன் மகளிடம் உள்ள திறமைகளையும், நற்பண்புகளையும் லிஸியிடம் இருந்து வெளிக்கொண்டு வரும் முயற்சியில் இறங்கினர். விளைவு, லிஸி விடாமுயற்சியும், போராடும் குணமும் கொண்ட பெண்ணாய் வெளிப்பட்டார்.

முதல் நாள் தான் பள்ளிக்குச் சென்றபோது, பெரிய புத்தகப்பையுடன் தன் தோற்றம், ஓர் ஆமை போல இருந்தது எனத் தன் இளமைக்கால நினைவுகளை சற்றும் வருத்தப்படாமல் விவரிக்கிறார். அப்போது தன்னுடன் யாரும் பேசாமல் தனிமைப்படுத்தியதையும், புறக்கணித்ததையும் நினைவுகூர்கிறார். “நீ மற்றவர்களை விட சிறியதாகவும், வித்தியாசமான நோயுடனும் இருப்பது உண்மைதான். ஆனால், நீ யார் என்பதை உனக்கு புரிய வைப்பது உன் உடல் உபாதை அல்ல.

நீ பள்ளிக்குச் சென்று படித்து, தலை நிமிர்ந்து நீ நீயாக இருப்பதும், உன்னை வடிவமைத்துக் கொள்வதுமே”  என்ற தன்னம்பிக்கை விதையினை லிஸியின் பெற்றோர் தொடர்ந்து அவருக்குள் விதைத்துக்கொண்டே இருந்தனர். மற்ற குழந்தைகளை விட வித்தியாசமாய் தன்னிடம் என்ன இருக்கின்றது என்பதை லிஸி தனக்குள் தேடத் தொடங்கினார். விளைவு, தொடர்ந்து மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ள லிஸி, இப்போது ஒரு தன்னம்பிக்கை பேச்சாளராக இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

லிஸியின் முதல் புத்தகமான ‘லிஸி ப்யூட்டி ஃபுல்’ என்ற நூலில், வெளிப்புறத் தோற்றத்திற்கு சமூகம் தரும் முக்கியத்துவம், அதனால் தான் சந்தித்த இன்னல்களை விவரிக்கிறார். மேலும் லிஸி குழந்தையாய் இருந்தபோது அவரின் தாய் தந்த அறிவுரைகளும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் இருக்கும் லிஸியின் முதல் புத்தகம் அதிக வரவேற்பை அனைவரிடமும் பெற்றுள்ளது.

லிஸியின் இரண்டாவது புத்தகம் ‘பீ ப்யூட்டிஃபுல்; பீ யூ’. தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் இழந்து நிற்பவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மட்டுமின்றி, குறிக்கோள்களை அமைத்துக்கொள்வது குறித்தும் எழுதியுள்ளார். தீய எண்ண அலைகள், கேலி கிண்டல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் இதில் இவர் விரிவாக விவரித்துள்ளார். தற்போது லிஸி, கிண்டல்களால் ஏற்படும் பாதிப்புகளையும், அதற்கு எதிராக போராடும் வகையில் ஒரு பிரத்யேக டாக்குமென்ட்ரி படத்தில் தன்னுடைய கவனத்தை முழுவதும் செலுத்தி வருகிறார்.