சிற்பிகளின் கிராமம்



- ஜெ.சதீஷ்

இவ்வுலகத்தில் அழிந்து போன அல்லது சிதிலமடைந்து போனவைகளை கண்டறிய பல சாதனங்கள் இருப்பினும் குறிப்பாக தமிழகத்தில் கற்காலம் முதல் இன்று வரை காலத்தை வேறுபடுத்தி காட்டுவது கல் சிற்பங்களே. காண கிடைக்காத பல அறிய வகை சிற்பங்கள் புதையுண்டு இன்று வரை ஆங்காங்கே மண்ணிலிருந்து கிடைக்கத்தான் செய்கிறது.

அப்படிப் பட்ட கல் சிற்பங்களை வைத்தே காலத்தையும், மனித குலத்தையும், குலம் ரீதியான செயல்கள், ஆட்சி செய்த மன்னர்கள் போன்ற சரித்திர செய்திகளை அறிகிறோம். பெரும்பாலான சிற்பங்கள் பெண்களை சித்தரித்தே இருப்பதை பெரும்பாலும் சிற்பக் கூடங்களில் காண முடிகிறது.

இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே கோயில்கள் அதிகமாக உள்ளது. அதிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பல கோயில்களை காணலாம். கோயிலுக்கும் சிற்பக் கலைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதால், தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் மிகவும் பிரபலமான சிற்ப வேலைப்பாடுகள் நடை பெற்று வருகிறது.

அதில் திருவண்ணாமலை மாவட்டம், போளூரை வட்டமாக கொண்ட மொடையூர் என்ற ஒரு சிறிய கிராமத்தில் ஆண், பெண் இருபாலரும் கல் சிற்பம் செய்யும் தொழிலை செய்து வருகிறார்கள் என்று தகவல் கிடைத்தது. கல் சிற்பம் செய்பவர்களை பொற்கலைஞர்கள் என்று கூறுவது உண்டு. தகவல் அறிந்து மொடையூரில் உள்ள பெண் பொற்கலைஞர்களை சந்திக்க புறப்பட்டோம்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து போளூர் செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது மொடையூர் கிராமம்.  வந்தவாசியில் இருந்து நெடுஞ்சாலை தொட்டதும் வாசற்கதவு போல் இரண்டு பக்கமும் புளிய மரங்கள் சூழ்ந்து நம்மை வரவேற்கிறது.

மொடையூர் சென்று சேரும் அந்த 45 கிலோ மீட்டர் தொலைவும் வெயில் படாத சோலையாகவே காட்சியளிக்கிறது. மொடையூர் கிராமத்தை நெருங்கிவிட்டோம் என்பதை உறுதி செய்கிறது வழியெங்கும் அமைக்கப்பட்டிருந்த சிற்பக்கூடங்களும், கற்சிற்பங்களும். நவீன இயந்திரங்களின் சத்தம் காதை கிழிக்க, பெரிய பெரிய பாறைகளை அறுத்துக்கொண்டிருக்கின்றனர் சிலர். கண்ணுக்கு தெரிந்த தொலைவெங்கும் சிற்பக் கூடங்கள்தான் காட்சி தந்தன. இருபாலரும் இணைந்தே பணியாற்றி வருகிறார்கள். பெண் ஒருவர் சுத்தியையும், உளியையும் வைத்து ஒரு சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார். நம்மை அறிமுகப் படுத்திக்கொண்டு அவரிடம் பேசத் துவங்கினோம். 

சிற்பத்தை செதுக்கிய வண்ணம் நம்மிடம் பேசத் தொடங்கினார் அவர். தனது பெயரை செல்வி என அடையாளப்படுத்தினார். ‘‘ஆண்டாண்டுகாலம் எங்கள் தொழில் சிற்பம் செய்வதுதான். நான் 10 வயசுல இருந்து சிற்ப வேலைகளை செய்து வருகிறேன். எங்க கிராமத்துல ஆண், பெண் அனைவருமே சிற்பம் செய்யும் தொழிலில் ஈடுபடுகிறோம். அஞ்சு தலைமுறையா சிற்பம் செதுக்கும் வேலையைத்தான் பார்த்து வருகிறோம். நான் அஞ்சாவது தலைமுறை.

நான் மட்டுமல்ல எங்க மொடையூர் கிராமத்துல நீங்க யாரக் கேட்டாலும் இந்த பதிலத்தான் சொல்லுவாங்க. தாத்தா இந்த வேலைதான் பார்த்துட்டு இருந்தாங்க, எங்க அப்பாவும் இந்த வேலைதான் பார்த்துட்டு இருக்காங்க, அதனால எனக்கும் இந்த வேலை பிடித்திருந்தது. என் ஒருவருடைய உழைப்பால் மட்டுமே ஒரு சிற்பத்தை செய்ய முடியாது. பாறையை ஒருவர் வெட்டிக்ெகாடுப்பார். 

உருவத்திற்கு ஏற்ப வெட்டி எடுக்கப்பட்ட கல்லில், ஒருவர் படத்தை வரைந்து கொடுப்பார். பிறகு தான் உருவத்தை என்னால் செதுக்க முடியும். பெரும்பாலும் கோயில் சிலைகள்தான் அதிகம் ஆர்டர் வரும். கட்சி பிரமுகர்கள் சிலர் அரசியல் தலைவர்கள் சிலைகளை செய்து தரச் சொல்லி கேட்பார்கள். ஆர்டர் பெற்று கொண்டு, குறிப்பிட்ட நாட்களுக்குள் செதுக்கி கொடுத்து விடுவோம்.

45 வருஷமா இந்த வேலையைதான் பார்த்துட்டு இருக்கேன். என்னுடைய கணவரும் சிற்பக் கலைஞர் என்பதால் இந்த சிற்பம் செதுக்கும் வேலை எனக்கு நன்றாக பழகிப் போனது. இருவருமே ஒன்றாக வேலை செய்வதால் எனக்கு இது கடினமான வேலையாக தெரியவில்லை. சில நேரங்களில் என்னுடைய கணவர் சிலைகளை வடிவமைத்துத் தருவார், கண், காது, ஆபரணங்கள் போன்ற சிறு சிறு நுணுக்கமான வேலைப்பாடுகளை நான் செய்து கொடுத்து விடுவேன்.

சிற்ப வேலையில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் எங்கள் பொண்ணுக்கு திருமணம் செய்து வைத்தோம். இன்றைய நாள் வரை எந்த விதமான இடையூறுகளும் இந்த வேலையில் எங்களுக்கு கிடையாது’’ என்றவர் உங்களுக்கு ஒரு சின்ன சிலை செய்து காட்டுகிறேன் என்று ஒரு சிறு கல்லை கையில் எடுத்தவர், பேசிக்கொண்டிருந்த 5 நிமிடத்தில் ஒரு வினாயகர் சிலையை செய்து காண்பித்தார். 

இவருடைய பொற் சிலைகள், தமிழக அரசின் பூம்புகார் கலைக்கூடத்தில்  பெண் சிற்பிக்கான மாநில  விருதை பெற்றுத் தந்துள்ளது. உருவச் சிலைகள் மட்டுமல்லாமல் உணர்வு பூர்வமான  சிலைகளும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிலைகளையும் வடிவமைத்து இருக்கிறார். முதல் பெண் பொற்கலைஞர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
  
வீட்டில் இருந்தபடியே சிறு சிறு கற்சிற்பங்கள் செய்து வருகிறார்கள் மேலும் சில பெண்கள். அதிலிருந்து குப்பம்மா என்பவரை சந்தித்தோம். ‘‘திருமணத்திற்கு பிறகுதான் சிற்ப வேலைகளை கற்றுக் கொண்டேன். என்னுடைய  கணவரின் குடும்பம் மொடையூர் கிராமத்தில் காலம் காலமாக சிற்பம் செதுக்கும் வேலை பார்த்து வருகிறார்கள். கணவருக்கு உதவியாக சின்னச் சின்ன சிற்பங்களை செய்து வருகிறேன்.

ஆரம்பத்தில் எனக்கு சிற்பம் செதுக்க சொல்லி கொடுத்தது என்னுடைய கணவர்தான். என்னைப்போலவே இந்த கிராமத்தில் வீட்டில் இருந்தபடியே பெண்கள் பலர் சிற்பங்கள் செதுக்கியும், சிலைகளுக்கு டிசைன்கள் செய்தும் வருகிறார்கள். நானும் எப்பவாவது ஒரு நாள் பட்டறைக்கு சென்று, செய்து வைத்த சிலைகளுக்கு டிசைன் போட்டு தருவது, சிலைகளுக்கு கலர் கொடுப்பது என சிற்பம் தொடர்பான சில வேலைகளை செய்வேன்’’ என்கிறார் குப்பம்மா.
  
அடுத்து நாம் பேசியது சுப்ரமணி என்பவரிடம். ‘‘சுமார் 600 குடும்பங்கள் இந்த ஊரில் இருக்கிறது. இதில் 75 சதவீதம் பேர் பொற் கலைஞர்கள்தான். வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராக முடையூர் கிராமம் இருப்பதற்கு காரணம் இந்த சிற்பக்கலைதான். ஆண்கள், பெண்கள் என அனைவருமே எங்கள் ஊரில் பொற்கலைஞர்கள்தான். அரசு சார்பில் நடத்தப்படும் சிற்பக்கலை வகுப்புகளுக்கு எங்கள் ஊரில் இருந்துதான் பயிற்சியாளர்கள் செல்வார்கள். 

நான் இது வரை பத்திற்கும் மேற்பட்ட வகுப்புகள் நடத்தியிருக்கிறேன். என்னுடைய பாட்டன்-முப்பாட்டன் காலத்தில் 5 குடும்பத்திலிருந்து தொடங்கிய மொடையூர் சிற்பக்கலை இன்று 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. எங்கள் ஊரில் இருக்கக்கூடிய பொற்கலைஞர்கள் யாரும் கலைக் கல்லூரியில் படித்தவர்கள் இல்லை.

இயற்கையாகவே பொற்கலை என்பது அவர்களது ரத்தத்தில் ஊரிப்போயிருக்கிறது’’ என்றவர் சிறந்த பொற் கலைஞருக்கான விருதை தமிழக முதல்வரிடமிருந்து பெற்றிருக்கிறார். சுமார் 65 ஆண்டு காலமாக கற்சிற்ப வேலையில் பரிட்சயமானவர். ‘‘அரசு சார்பில் எந்த வித உதவியும் எங்களுக்கு கிடைப்பதில்லை. வெளி மாநிலத்தில் இருந்து வரக்கூடிய கலைஞர் களுக்கு கொடுக்கக்கூடிய சலுகைகள் கூட தமிழக பொற்கலைஞர்களுக்கு கிடைப்பதில்லை. 

இப்போது தொடர்ந்து மூன்று வருடமாக என்னுடைய சிற்பங்களை பூம்புகார் அமைப்பு நிராகரித்து வருவது மன வேதனையை தருகிறது. எங்களை போன்ற பொற்கலைஞர்களுக்கு வயதான பிறகு ஓய்வூதியம் கேட்டு பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அரசு அதைப்பற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்ற கலை துறையில் இயங்கக்கூடிய கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் எங்களுக்கும் கொடுக்கப் படாதது எங்களை பெரிதும் பாதிக்கிறது’’ என்கிறார் சுப்ரமணி.
 
‘‘இப்போதெல்லாம் சிலை வடிவமைக்கக்கூடிய கற்கள் கிடைப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. நாங்கள் பயன்படுத்தக்கூடிய பச்சக்கல், மாவுக்கல், கருங்கல் போன்றவை அதிக விலையில் விற்கப்படுவதால் சிற்பங்கள் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எங்கள் ஊரில் பெண்கள் உட்பட அனைவருமே சிற்பக் கலைஞர்களாக இருப்பதால், வயதான பெண் பொற்கலைஞர்களுக்கு அரசு ஊதியம் கொடுத்தால் உதவியாக இருக்கும்’’ என்றவர் 2 முறை தமிழக அரசு சார்பில் சிறந்த பொற்கலைஞர் விருதைப் பெற்றிருக்கிறார். 
  
‘‘ஒரு சிலையை சாதாரணமாக செய்து விட முடியாது. அதற்குப் பின்னால் நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது. பாறைகளை வெட்டும் போது ஏற்படும் புழுதியால் ஆஸ்துமா நோய் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. நவீன இயந்திரங்களின் சத்தத்தினால் காது கேட்காத நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

அவர்களுக்கெல்லாம் எந்த உதவியும் அரசிடமிருந்து கிடைப்பதில்லை என்பது எங்களை போன்ற வளரும் கலைஞர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. மேலும் பெண்கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த அரசு அவர்களை ஊக்குவித்தால் எங்கள் கிராமப் பெண்கள் பலர் சிற்பக்கலையில் சாதனை படைப்பார்கள். திறமையான பெண் சிற்பிகளை உள்ளடக்கியது இந்த மொடையூர் கிராமம். ஆனால் இது உலகிற்கு தெரியாமலே இருக்கிறது’’ என்பதுதான் எங்கள் வருத்தம் என்கிறார் பொற்கலைஞர் மாணிக்கம்.  

படங்கள்: சு.திவாகர்