இன்றைக்கும் ஈட்டலாம் நல்வருவாய்!



-கி.ச.திலீபன்

சிஸ்டர் மெர்சி

பொருளாதார ரீதியிலாக பெண்கள் சுய சார்போடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் பெண் கல்வி ஊக்குவிக்கப்படுகிறது. பெண்களுக்கான தொழிற் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்’ என்பது பெண்களுக்கும் பொருந்தும். ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு தையற்பயிற்சி, எம்பிராய்டரிங் மற்றும் கைவினைப்பொருட்களுக்கான பயிற்சிகள் தமிழகமெங்கும் பரவலாக அளிக்கப்பட்டதன் நோக்கம் இதுதான்.

தான் கற்றுக்கொண்ட கைவினைக் கலையை நூற்றுக்கணக்கானோருக்கு கற்றுக் கொடுத்து அவர்களை தொழில் முனைவோர் ஆக்கியவர் சிஸ்டர் மெர்சி. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் செயின்ட் உர்சுலாஸ் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கைவினைக் கலைப் பயிற்று மையத்தை நிர்வகித்து வருகிறார் மெர்சி.

‘‘தூத்துக்குடிதான் என் சொந்த ஊர். ஆடை உருவாக்கம், எம்பிராய்டரி, ஓவியம் படிச்சிட்டு கன்னியாஸ்திரி ஆனேன். அதன்பிறகு மும்பையில் ஊழியம் செஞ்சப்போ ஸ்கிரீன் ப்ரின்டிங், டெக்ஸ்டைல் டிசைனிங், பத்திக் ப்ரின்ட் கத்துக்கிட்டேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் முளகுமூடு கிராமத்தில் கன்னியாஸ்திரியா 12 ஆண்டுகள் ஊழியம் செஞ்சேன்.

அந்த 12 ஆண்டுகளில் 3500க்கும் மேற்பட்டவங்களுக்கு எம்பிராய்டரி, லேஸ் மேக்கிங் (lace making) பயிற்சிகள் கொடுத்திருக்கேன். சென்னையில் 15 ஆண்டுகள் லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட் பள்ளியில் இருந்தேன். அப்போ பள்ளி மாணவிகளுக்கு மட்டுமில்லாமல், பள்ளி முடித்த பெண்களுக்கும் பல விதமான கைவினைக் கலைப்பயிற்சி கொடுத்திருக்கேன்.

பயிற்சியின்போது செய்யப்படும் பொருட்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தையும் அவர்களுக்கே கொடுத்து விடுவேன். எம்பிராய்டரியிலேயே பல விதமான எம்பிராய்டரி இருக்கு. கர்ச்சீப்ல இருந்து பெட்ஷீட் வரைக்கும் எல்லாத்துக்கும் எம்பிராய்டரி பண்ண முடியும். ஆனா ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு விதமாக பண்ண வேண்டியிருக்கும்.

பல விதமான எம்பிராய்டரி பயிற்சிகள் கொடுத்திருக்கேன். 250 மாணவிகளுக்கு உள் அரங்க வடிவமைப்பு பயிற்சி கொடுத்திருக்கேன். 1993ம் ஆண்டுதான் குலசேகரத்தில் இந்த மையத்தை ஆரம்பிச்சேன். கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள்,  இளம்பெண்கள், மாணவிகள்னு பல தரப்பினருக்கும் எம்பிராய்டரி, கட் வொர்க் பயிற்சி கொடுத்திருக்கேன்.

ஆதரவற்ற பெண்களுக்கு இப்பயிற்சிகள் பேருதவியா இருந்திருக்கு’’ எனும் மெர்சிக்கு 2014ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் ‘வாழும் கைவினை கலைப்பொக்கிஷம்’ என்கிற விருது வழங்கப்பட்டிருக்கிறது. அப்போதைய கைத்தறித்துறை அமைச்சர் பா.மோகன் இவ்விருதை வழங்கினார்.

‘‘மத்திய அரசின் கைத்தறித்துறையின் சார்பாக கைவினைக் கலைஞர்களின் திறனை சோதித்து அவர்களுக்கு கைவினைக் கலைஞர் எனும் அடையாள அட்டையை வழங்குவார்கள். அந்த அடையாள அட்டையை கொண்டு வங்கியில் கடன் பெற்று தொழில் புரிய முடியும். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அப்படியாக கடன் வாங்கிக் கொடுத்து, அவர்களுக்கு தொழில் புரிய வழிகாட்டி, கடனை திருப்பி செலுத்தி வங்கியின் பாராட்டையும் பெற்றிருக்கோம்’’ என்றவரிடம் இன்றைக்கு கைவினைப் பொருட்களுக்கான சந்தை எப்படி இருக்கிறது என்றேன்.

‘‘இன்னைக்கு மெஷின் எம்பிராய்டரி வந்துட்டதால இதனோட மதிப்பு குறைஞ்சிருச்சுன்னு சொல்லலாம். ஆனா இன்னைக்கும் இதன் மூலமா வீட்டிலிருந்தபடியே நல்ல வருமானம் ஈட்ட முடியும்’’ என்கிறார் மெர்சி.

படங்கள்: சேகர்