சுதந்திரத்தின் சுவை



-ஸ்ரீதேவி மோகன்

வடகொரியாவை சேர்ந்த பார்க் யோன்-மீ பேசும் வீடியோ 2014ல் இணையத்தில் வெளியாகியது. அன்றாடம் யாராவது இந்த வீடியோவை பார்க்கின்றனர். இதுவரை 50 மில்லியன் பேர் வரை பார்த்திருக்கிறார்கள். தங்கள் நாட்டு நிலையைப் பற்றி அந்தப் பெண் கண்ணீரோடு பேசும் போது, அந்த துக்கம் நம்மையும் வந்து தொற்றிக்கொள்கிறது. அந்தப் பெண் பேசியதன் சுருக்கம்...

“நான் வடகொரியாவை  சேர்ந்தவள். என் மக்கள் சார்பாக நான் உலகத்திடம் பேச வந்துள்ளேன். நான் 1993ம் ஆண்டில் பிறந்தவள். அப்போது எங்கள் நாட்டில் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. 4 வயதிலேயே என் அம்மா எனக்கு என் உணர்வுகளை வெளிப்படுத்துவது ஆபத்து என்று சொல்லி வந்தார். எங்களுக்கு எந்த விதமான சுதந்திரமும் இல்லை. சினிமா பார்க்க முடியாது.

பாடல்கள் கேட்க முடியாது. டி.வி. கிடையாது. இணையம் கிடையாது. புத்தகங்கள் படிக்க முடியாது. எங்கள் நாடு நீங்கள் கற்பனை செய்ய முடியாத நிலைமையில் இருக்கிறது. எனக்கு 9 வயது இருக்கும் போது ஒரு நாள் என் தோழியின் தாய் நடு ரோட்டில் வைத்துக் கொல்லப்பட்டார். அவர் செய்த ஒரே குற்றம் ஹாலிவுட் திரைப்படம் பார்த்ததுதான்.

எனக்கு 13 வயதாகும் போது என் தாய் என் கண் முன்னாலே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அதைச் செய்தவன் ஒரு சீன புரோக்கர். என்னை அவனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, என் தாய் அந்த நிலைக்கு ஆளானார். அன்று இரவே நான் அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன். எனக்கு பதினான்கு வயதாகும் போது என் அப்பா இறந்து விட்டார். அவரது உடலை யாருக்கும் தெரியாமல் அதிகாலை மூன்று மணி அளவில் நான் தகனம் செய்தேன். அப்போது என்னால் அழக்கூட முடியவில்லை.

வடகொரியாவை சேர்ந்தவர்கள் இப்போது அகதிகளாக உள்ளோம். வடகொரியாவிற்கு திரும்ப போக வேண்டி வந்தால் அதற்குப் பதிலாக இறந்துவிடலாம் என்று நினைக்கிறோம். உலக மக்களுக்கு நாங்கள் சொல்லிக்கொள்வது என்னவென்றால், வடகொரிய மக்களை உலகம் தீவிரவாதிகளாக பார்க்கிறது. பிறந்த நாட்டை வைத்து மக்கள் இப்படித் தான் என்று முடிவெடுக்காதீர்கள். எனக்கு ஆதரவு யாரும் இல்லை என்று நினைத்தேன். இப்போது நீங்கள் எல்லாரும் இருக்கிறீர்கள். வாருங்கள் இளைஞர்களே ஒன்று கூடுங்கள்.
 
* வடகொரிய மக்களின் நிலைமையைப் பற்றி இந்த உலகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
* அகதிகளான எங்களுக்கு ஆதரவு காட்டுங்கள். உதவி செய்யுங்கள்.
* சைனா எங்கள் மீது நடத்தும் தாக்குதல்களை நிறுத்துங்கள்.