எண்ணம்போல் வாழ்வு



-கி.ச.திலீபன்

வாழ்தலின் மீதான நம்பிக்கையை இழந்து போகும் தருணம்  எல்லோரது வாழ்க்கையிலும் ஏற்படும். அதன் பிறகு அவநம்பிக்கையுடன், பற்றுதலற்ற ஒரு வாழ்க்கையை வாழப்போகிறோமா? இல்லை அதிலிருந்து மீண்டு புத்துயிர்ப்பு கொள்ளப் போகிறோமா என்பதில்தான் அடங்கியிருக்கிறது வாழ்வின் சாரம். கர்ப்பப்பை பிரச்னை, கருக்கலைவு, முதுகுவலி, மார்பகப் புற்றுநோய் என 19 ஆண்டு காலம் நோய்களால் அல்லல்பட்டவர் ஸ்ரீலதா ஸ்ரீகுமார்.

வாழ்வின் மீதான நம்பிக்கையை தொலைத்திருந்த கட்டத்தில் யோகாசனம் மூலம் கிடைத்த ஆற்றுப்படுத்துதலினால் தனது உடற் பிரச்னைகளிலிருந்து நம்பிக்கையோடு மீண்டு வந்திருக்கிறார். எதிர்மறையான எண்ணங்களுக்கு ஆட்பட்டிருந்தவர் இப்போது நேர்நிறையான எண்ணங்களோடு, பலருக்கும் யோகாசனத்தைப் பயிற்றுவிக்கிறார். நாகர்கோவில் அருகே திருநயினார்குறிச்சியைச் சேர்ந்த இவரை நாகர்கோவில் வாழும் கலைப்பயிற்சி மையத்தில் சந்தித்தேன்.

‘‘நான் இளங்கலை பொருளாதாரம் படிச்சிருக்கேன். என் கணவர் மத்திய தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1982ம் ஆண்டுதான் எங்க திருமணம் நடந்தது. முதல் முறை கருத்தரிச்சப்ப கர்ப்பம் கலைஞ்சுடுச்சு. இரண்டாவது முறை கருத்தரிச்சதுலதான் என் மகன் ஸ்ரீஜித் பிறந்தான். அவனுக்கு அடுத்து இரண்டு முறை கருத்தரிச்சும் இரண்டு கருவும் கலைஞ்சு போச்சு. இதனால உடல் ரீதியா மட்டுமில்லாமல் மன ரீதியாகவும் நான் ரொம்பவும் பாதிக்கப்பட்டேன்.

கர்ப்பப்பை பிரச்னை மட்டுமில்லாமல் முதுகுவலியும் ஒரு பிரச்னையா இருந்தது. மாத்திரைகளாலேயே என் நாட்கள்கழிஞ்சுது. நோய் எதிர்ப்பு சக்தி ரொம்பவுமே குறைவா இருந்தது. மனச்சோர்வுக்கு ஆளாகியிருந்தேன். நான் ரொம்பவும் பயப்படுவேன். வெளியாட்கள் யார்கிட்டயாவது பேசனும்னா கூட எனக்கு பயம். ஏன்னா நான் பிறந்து வளர்ந்த குடும்ப சூழல் அப்படி.

பொதுவாகவே பெண்களை வீட்டுக்குள்ளயே சுருக்கிடுவாங்க. அதனால என்னோட வட்டம் ரொம்பவும் சின்னது. என் பிரச்னையை சொல்லி ஆறுதல் தேடிக்கிறதுக்குக் கூட ஆட்கள் இல்லை. அதனால அந்தக் கவலைகள் எல்லாம் எனக்குள்ளேயே அடங்கியிருந்துச்சு. இப்படியான சூழல்லதான் 2000ம் ஆண்டு கோவையிலுள்ள ஒரு மருத்துவமனையில் எனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருக்குன்னு சொன்னாங்க.

அதைக் கேட்டதும் நான் பரிதவிச்சுப் போனேன். அன்றைக்கு புற்றுநோய்ங்கிறது ரொம்பப் பெரிய நோய். ஏற்கனவே முதுகு வலியாலயும், கர்ப்பப்பை பிரச்னைகளாலும் அவதிப்பட்ட எனக்கு புற்றுநோய்னு அடுத்த அடி விழுந்தது. கர்ப்பப்பை பிரச்னை, கருக்கலைவு, முதுகுவலிக்காக எடுத்துக்கிட்ட மாத்திரைகளோட பக்க விளைவுகளும் ஹார்மோன் சமமின்மையும்தான் புற்றுநோய்க்குக் காரணம்னு சொன்னாங்க. எனக்கு நெகடிவான எண்ணங்கள் அதிகம்.

எதையும் பாசிட்டிவாவே யோசிக்க மாட்டேன். இதுவும் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அப்ப என் மகனுக்கு 17 வயசுதான் ஆகியிருந்துச்சு. எனக்கு இப்படியாயிடுச்சேங்கிற கவலையோட, குடும்பத்தை கவனிக்க முடியாம போச்சேங்குற கவலையும் சேர்ந்துகிச்சு. வார்த்தையால சொல்லிட முடியாத வேதனைக்கு ஆளாகியிருந்தேன். நம்பிக்கைங்கிற ஒண்ணு இல்லாமயே போச்சு. இனி வாழ்க்கையே அவ்வளவுதான்னுதான் நெனைச்சேன்.

திருவனந்தபுரம் புற்றுநோய் மையத்தில்தான் சிகிச்சை எடுத்தேன். கீமோதெரபி சிகிச்சையப்ப உடலெல்லாம் வீங்கி, முடியெல்லாம் கொட்டிப்போனப்ப வாழ்க்கையையே வெறுத்துட்டேன். புற்றுநோய் சிகிச்சைக்காகவே திருவனந்தபுரம் போறதால திருவனந்தபுரம்னாலே என் மனசுல புற்றுநோய்னு பதிஞ்சிருச்சு. திருவனந்தபுரத்தைப் பார்த்தாலே எனக்கு ஒரு மாதிரி ஆகிடும். வாந்தி எடுத்துடுவேன்.

இப்படியா ஒவ்வொரு நாளும் நரகம்தான். சிகிச்சை முடிஞ்ச பிறகு, புற்றுநோய் மையத்தில் பிராணாயாமம், தியானம், யோகா செய்யும்படி சொன்னாங்க. இதன் மூலமா நம்மளோட மன அழுத்தம் குறைஞ்சு பாசிட்டிவ் ஆன எண்ணங்கள் ஏற்படும்னாங்க. அவங்களோட பரிந்துரையின் பேரில்தான் 41 நாட்கள் தொடர்ந்து யோகாசனம் செஞ்சப்ப எனக்குள்ளான மாற்றத்தை உணர முடிஞ்சுது.

எனக்குள்ள ஒரு தைரியம் வந்துச்சு. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதைத் தாண்டி வந்துட முடியும்ங்கிற பாசிட்டிவான எண்ணங்கள் உருவாக ஆரம்பிச்சது. அதுக்கப்புறம்தான் எனக்கு வாழ்க்கை மேலேயே ஒரு பற்றுதல் வந்துச்சு. திருவனந்தபுரத்தை நினைச்சாலே ஒரு மாதிரி ஆகிடும். அடிக்கடி வாந்தி வரும். ‘சுதர்சன க்ரியா’ ங்கிற மூச்சுப்பயிற்சி எடுத்ததற்குப் பிறகு எனக்கு வாந்தி வர்றதில்லை.

திருவனந்தபுரத்து மேல எந்த படபடப்பும் இல்லை. மனதை அழுத்திக்கிட்டிருக்கிற ஒரு மிகப்பெரிய பிரச்னையிலிருந்து விடுபடும்போது ஏற்படுற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 1982ம் ஆண்டிலிருந்து 2001 வரைக்கும் நோயோடவேதான் வாழ்ந்திருக்கேன். அதையெல்லாம் நினைச்சுப் பார்க்கும்போதே மனசு கனக்கும். எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கணும்னு தோணிருக்கு. என்னோட பயம்தான் எனக்கு எதிரியாக இருந்திருக்கு. எண்ணம் போலதான் வாழ்க்கை இருக்கும்.

அன்றைக்கு என்னோட எண்ணங்கள் முழுக்கவும் நெகட்டிவா இருந்தது. இன்னைக்கு பாசிட்டிவ் ஆன எண்ணங்கள்தான் எனக்கு இருக்கு. என் உடலுக்கு இப்ப எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லாத்துல இருந்தும் நம்மை மீட்டுக் கொண்டு வர்ற சக்தி இந்த உலகத்துல இருக்கவேதான் செய்யுது. எனக்கு அது யோகாசனம் மூலமாக நடந்திருக்குன்னுதான் சொல்லணும். புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டு வந்துட்டேன். ஆண்டுக்கு ஒரு முறை செக்கப்போய்க்கிட்டிருக்கேன்” என்றவர் தான் யோகா பயிற்சியாளரானது பற்றிக் கூறுகிறார்.

‘‘யோகாசனம்தான் என்னை மீட்டுக் கொண்டு வந்துச்சு. இனி அவ்வளவுதான்னு நினைச்ச வாழ்க்கையை இன்னும் இருக்குன்னு உணர்த்துச்சு. யோகாசனம் மூலமா என்னைப் போல பலரும் பயனடையணும். நான் கத்துக்கிட்டதை பலருக்கும் சொல்லித்தர முடிஞ்சுது. இந்தக் கால இடைவெளியில 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்களுக்கு யோகா மற்றும் ஆற்றுப்படுத்துதல் பயிற்சி கொடுத்திருக்கேன்.

2014ம் ஆண்டுதான் யோகா ஆசிரியர் ஆனேன். இன்றைக்கு நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள வாழும்கலைப் பயிற்சி மையங்களில் யோகா பயிற்றுவிக்கிறேன்” என்கிறார் ஸ்ரீலதா ஸ்ரீகுமார். ஆம் எண்ணம் போல்தான் வாழ்வு இருக்கும்.

படங்கள்: மணிகண்டன்