நீராலானது இவ்வுலகு



பிளாச்சிமடா முதல் தாமிரபரணி வரை: நீருக்கான போராட்டங்கள்

கோக் மற்றும் பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணி அருகில் நிலத்தடி நீர் எடுப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த இடைக்கால தடையை நீக்கி ஆணை பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தொடுத்த வழக்கில் நீதிபதிகள் செல்வம் மற்றும் கலையரசன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

தாமிரபரணியில் இருந்து கோக் மற்றும் பெப்சி நிறுவனங்களை தவிர்த்து, ஏ.டி.சி டயர் நிறுவனத்திற்கு நாளொன்றுக்கு 10,00,000 லிட்டர், ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு 1,16,00,000 லிட்டர், அமுல்யா ஸீ புட்ஸ் நிறுவனத்திற்கு 2,00,000 லிட்டர் அளவிலான நீரை தமிழக அரசே தாமிரபரணியில் இருந்து எடுத்து விநியோகிக்கின்றது.

இந்த நிலையில் கோக் மற்றும் பெப்சி நிறுவனத்திற்கு எதிராக மட்டும் ஏன் வழக்கிடப்பட்டுள்ளது என்னும் கேள்வியை எழுப்பியுள்ளது உயர் நீதிமன்றம். தண்ணீரை வியாபாரப் பொருளாக மட்டுமே கருதி செயல்படும் கோக் மற்றும் பெப்சி போன்ற நிறுவனங்களையும், பிற தொழில் நிறுவனங்களையும் ஒரே பார்வையில் அணுக முடியுமா என்னும் கேள்வி நம்மிடம் எழுகிறது.

நிச்சயமாக முடியாது என்பது மட்டுமே அதற்கு விடையாக இருக்கும். மக்களின் அடிப்படை நீர்த் தேவைக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமே தவிர தனியார் நீர் வியாபாரிகளின் தேவைக்கல்ல. அதுவும் தமிழகம் போன்ற நீர் பற்றாக்குறை உள்ள ஒரு மாநிலத்தில் இத்தகைய தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தையே நமக்கு தருகிறது.   

தாமிரபரணி வரலாறு
தமிழக எல்லைக்குள்ளாக தோன்றி தமிழக நிலப்பரப்பில் மட்டுமே பயணித்து தமிழக கடலோர பகுதியில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணி மட்டுமே. எல்லா தென்னக நதிகளை போல தாமிரபரணியும் தன்னுடைய பயணத்தை மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்தே துவங்குகிறது. பின்பு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பயணித்து விவசாயத்தை செழிக்க செய்து, மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றி, சூழலை சீரமைத்து, வங்காள விரிகுடாவில் கலக்கிறது இந்த நதி. விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கான தேவையான குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது தாமிரபரணி. இந்நதியின் மீது சுமார் 8 சிறிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் 7 அணைகள் கி.பி. 1365 முதல் 1731 வரையிலான காலகட்டங்களில் கட்டப்பட்டவை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஓர் அணை கட்டப்பட்டது.

தாமிரபரணியில் கோக் மற்றும் பெப்சி  
தாமிரபரணி அருகே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் என்னும் கிராமத்தில் 1993ம் ஆண்டு தமிழக அரசு சிப்காட் தொழிற்பேட்டையை துவங்கியது. இதற்காக சுமார் 2000 ஏக்கர் அளவிலான நிலம் கையகப்படுத்தப்பட்டது.  இந்த தொழிற்பேட்டையில் தற்போது சுமார் 27 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்பேட்டைக்கான ஒரு நாள் தேவையான சுமார் 1,13,56,235 லிட்டர் (3MGD) நீரை தாமிரபரணியில் இருந்து எடுப்பதற்கான அனுமதியை தமிழக அரசு 1998ம் ஆண்டு வழங்கியது.

இதேபோல தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி அருகே  சிப்காட் தொழிற்பேட்டை சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது சுமார் 79 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒன்று தான் ஸ்டெர்லைட் நிறுவனம். இந்த தொழிற்பேட்டைக்குத் தேவையான நீரும் தாமிரபரணியில் இருந்துதான் உறிஞ்சப்படுகின்றன. நிலத்தடி நீர் உட்பட சுற்றுச்சூழலுக்கு மிக பெரிய சீர்கேட்டை விளைவிக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை கூட 100 கோடி அபராதம் செலுத்திவிட்டு செயல்பட அனுமதி கொடுத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் இங்கு நாம் நினைத்து பார்க்க வேண்டும். 

2004ம் ஆண்டில் இருந்து கங்கைகொண்டானில் கோக் நிறுவனம் தடம் பதித்தது. 99 வருட காலம் அங்கு தன்னுடைய குளிர்பான உற்பத்தியை மேற்கொள்ள தமிழக அரசிடம் அனுமதி பெற்றுள்ளது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் நீர்த் தேவையான 18,00,000 லிட்டர் அளவிலான நீரை தமிழக அரசே தாமிரபரணியில் இருந்து எடுத்துக் கொடுக்கிறது.

அதே தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் பெப்சி நிறுவனத்தின் நீர்த் தேவையான சுமார் 15,00,000 லிட்டர் அளவிலான நீரையும் தமிழக அரசே தாமிரபரணியில் இருந்து கொடுக்கிறது. இதில் முக்கியச் செய்தி என்னவென்றால், 1000 லிட்டர் அளவிலான குடிநீரை ரூபாய் 37.50 என்னும் விலைக்கு கோக் மற்றும் பெப்சி நிறுவனங்களுக்கு தமிழக அரசால் கொடுக்கப்படுகிறது என்பது. ஒரு லிட்டர் ‘அம்மா புட்டிநீர்’ நமக்கு ரூபாய் 10க்கு விற்கப்படுகிறது என்பது வேறு கதை.

சட்டத்தின் போதமைகள்
இந்த வழக்கில் தமிழக அரசு முன் வைத்த வாதங்கள் மிகவும் வேடிக்கையானவை. தாமிரபரணியில் இருந்து நீர் எடுத்து கோக் மற்றும் பெப்சி உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுவதினால் விவசாயம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் மாவட்ட ஆட்சியர். மேலும் தாமிரபரணியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரின் அளவில் சிறிய பகுதியே கோக், பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகிறது என்றும் தமிழக அரசு சார்பாக கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது தமிழக அரசு கொண்டுள்ள பற்று நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

உண்மையில் நிலத்தடி நீரை வர்த்தக பயன்பாட்டிற்காக எடுப்பதை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் போதிய சட்டங்கள் இல்லை என்பதே இப்பிரச்சனையின்  மையப்புள்ளி. 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு நிலத்தடி நீர் மேலாண்மை சட்டம் ‘அம்மா குடிநீர்’ வர்த்தகத்திற்காக பின்வாங்கப்பட்டது.

இன்று வரை நிலத்தடி நீர் உள்ளிட்ட அனைத்து நீர் சார்ந்த வணிகத்தை கண்காணிக்கவும், மேலண்மை செய்யவும் தமிழக அரசிடம் தனியாக ஓர் அதிகார மையம் இல்லை. நீர் ஆதாரப் பகுதிகளில் இருந்து தொழிற்சாலைகள் நீரை எடுப்பதை தடுக்கும் விதமாக சில அரசாணைகள் மட்டுமே தமிழக அரசிடம் உள்ளது. இது மட்டும் போதுமா என்னும் கேள்வி நம்மிடம் எழுவது நியாயமானது.

கோக் மற்றும் பெப்சி நிறுவனங்களுக்கு நீர் கொடுப்பதால் நிலத்தடி நீர் குறைகிறது என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரங்களும் இல்லை என்றும் கூறியுள்ளது உயர்நீதிமன்றம். சில அரசாணைகளின் அடிப்படையில் நீர்வளத் துறை என்னும் அமைப்பு இயங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள நிலத்தடி நீரளவை கண்காணிப்பது இவர்களின் முக்கியப் பணி.

தமிழகத்தில் எந்தப் பகுதியில் நிலத்தடி நீரை வணிக நோக்கிற்காக பயன்படுத்தலாம் என்பதை கண்டறிவது இத்துறைதான். ஆனால் சிப்காட் போன்ற தொழிற்பேட்டைகளுக்கு சிறப்பு சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்த பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை.

தாமிரபரணி பகுதியின் நிலத்தடி நீரின் அளவு மற்றும் அதன் தன்மை குறித்தான விவரங்களை நீர்வளத்துறையிடம் இருந்து பெற தவறிவிட்டது உயர் நீதிமன்றம். தமிழக அரசும் இந்த விவரங்களை நீதிமன்ற முன்பாக  தெரிவிக்காதது வேதனையானது. நாட்டிற்கு தொழில் வளம் தேவைதான். ஆனால் அதற்கு என்ன விலை நாம் கொடுக்கப்போகிறோம் என்பதுதான் கேள்வி. இயற்கை வளங்களை முற்றிலுமாக அழித்து தொழில் வளத்தை வளர்க்கப் போகிறோமா அல்லது சூழலோடு இயைந்த வளர்ச்சிக்கான தொழில் வளத்தை முன்னெடுக்க போகிறோமா என்பதே நம் முன் உள்ள முக்கிய கேள்வி.

பிளாச்சிமடா என்னும் வழிகாட்டி
இதுபோன்ற மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நீதிமன்றம் செல்லலாமா என்கிற கேள்வியும் தற்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது. நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கூறிவிட்டதாலேயே அது இறுதியானது என்று ஆகிவிடாது. தொடர்ந்து இங்கு நீதிமன்ற தீர்ப்புகள் மாற்றப்பட்டு வருகின்றன. ஜனநாயகத்தில் மக்களே முழு அதிகாரம் பெற்றவர்கள். நீதிமன்ற தீர்ப்பாகவே இருந்தாலும் அதனை மக்கள் மன்றத்தால் மாற்ற முடியும்.

சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்தவை மக்கள் மன்றங்களான நாடாளுமன்றமும் சட்டசபையும் தான்.  இந்திய அரசமைப்பு சட்டத் திருத்தம், பெரியார் நடத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான போராட்டத்தின் காரணமாகவே கொண்டு வரப்பட்டது. அதேபோல உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பாகவும் கோக்கை விரட்டியடித்த பிளாச்சிமடா மக்கள் போராட்டம் நமக்கு பல பாடங்களை தருகின்றன.

கேரளாவில் பிளாச்சிமடாவில் மக்கள் போராட்டம் காரணமாக விரட்டப்பட்ட கோக்தான் 2004ம் ஆண்டு தாமிரபரணியில் கால் பதித்தது. இன்னும் மீதம் இருக்கிறது நம்பிக்கை. மக்கள் குரல் மட்டுமே ஜனநாயகத்தில் முதன்மையானது. நீர்வளத்தை பாதிக்காத தொழில் வளத்தை கேட்போம். தண்ணீர் வணிகமாக மாறுவதை தடுப்போம்.

(நீரோடு செல்வோம்!)