செல்லுலாய்ட் பெண்கள்



அகம்பாவ நடிப்பும் அமைதி நடிப்பும் இணைந்த கலவை-ஜி.வரலட்சுமி

காதலித்தவனை கைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக சுய மரியாதையை இழந்துதான் வாழ வேண்டுமா? ஆண் உதவியில்லாமல் பெண்ணால் வாழ முடியாதா? வளையல் சூடும் கைகளால் வாள் ஏந்தவும் முடியும். சமையல் செய்யும் கைகள் சாம்ராஜ்யத்தை ஆளும் என்பதை நிரூபிப்பதற்காக ஆயிரமாயிரம் ஆண்களின் கொட்டத்தை அடக்கியே தீர்வது என்ற என் லட்சியத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான்...” ‘ஆரவல்லி’ படத்தில் ஜி.வரலட்சுமி பேசும் வசனம் இது.

மகாபாரதக் கதை என்றாலும் இந்த வசனமும் அதை அவர், ஆரவல்லி என்ற கதாபாத்திரத்தின் வாயிலாகப் பேசும் மிடுக்கும் அவரின் உடல் மொழியும் உண்மையிலேயே பெண்களின் சுயமரியாதையை கிளர்த்துபவை. இதற்கான பெருமை முழுமையும் அவரது அப்பழுக்கற்ற முக பாவங்களுக்குச் சொந்தமானது.

ஆட்சியாளராகத் தன் தங்கை சூரவல்லியுடன் இணைந்து முற்று முழுக்கப் பெண்களை மட்டுமேகொண்டு அல்லி ராஜ்யம் நடத்தும் ‘ஆரவல்லி’ படத்தின் முடிவு, அபிமன்யுவும் பாண்டவர்களின் தங்கை சங்கவதியின் மகன் அல்லிமுத்துவும் அவன் நண்பர்களும் எவ்வாறு ஆரவல்லியையும் அவள் ஆட்சியையும் கவிழ்க்கிறார்கள் என்பதுதான்.

அது போல் இப்படம் வெளிவந்த 1957 காலகட்டத்தில் ‘ஆண்களை அடக்க நினைத்தால் அவ்வளவுதான்’ என்ற நீதி போதனையையே ரசிகர்களாலும் வழங்க வைத்தது. இன்றைக்கும் அப்படத்தில் அவரது நடிப்பைப் பார்க்கும்போது, ‘உண்மையிலேயே அப்படி ஒரு அரசு ஏற்பட்டால் குடியா மூழ்கிப் போய்விடும்’ என்ற நியாயமான எண்ணத்தை ஜி.வரலட்சுமி விதைத்துச் செல்கிறார்.

தெலுங்கின் முதன்மை நாயகி
ஒரு சாயலில் அஞ்சலிதேவி, மற்றோர் சாயலில் ஆரம்ப கால பானுமதி என ஏற்கனவே நமக்கு அறிமுகமான கதாநாயகிகளின் கலவையான தோற்றத்தில் இருந்தாலும், தனக்கான பாணி நடிப்பின் மூலம் முப்பதாண்டு காலத்துக்கும் மேலாகத் திரைத்துறையில் தன் பங்கைக் குறைவறச் செலுத்தியவர் வரலட்சுமி.

மிடுக்கான தோற்றம், ஆளுமை தன்மையுடன் கூடிய பேச்சு, தாய்மொழி தெலுங்கு என்றாலும் அட்சர சுத்தமான தமிழ் உச்சரிப்பு, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முதன்மையான இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள அவருக்கு உதவியது. தமிழைக் காட்டிலும் தெலுங்கில் பிரதான இடம் என்றாலும், தமிழிலும் நினைவில் நிற்கும் பல படங்களில் அப்போதைய முதன்மை நாயகர்களுடன் இணைந்து நடித்தவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

பிழைப்புக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற தொழில் நடிப்பு
கரிக்காபட்டி வரலட்சுமி என பிறந்த ஊரையும் பெயருடன் இணைத்துக்கொண்டவர் சுருக்கமாக ஜி.வரலட்சுமி என மாறினார். அன்றைய ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்துக்குள் அமைந்த ஓங்கோல் பகுதியில் கரிக்காபட்டி சொந்த ஊர். 1926 செப்டம்பர் 13ல் பிறந்தவர். பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது இது ஆந்திரப் பிரதேசமாக மாறியது.

மூன்று பெண்களில் இரண்டாவதாகப் பிறந்தவர் இவர். உள்ளூர் பள்ளியிலேயே சகோதரிகள் மூவரும் படித்தபோதும் வரலட்சுமிக்குப் படிப்பின் மீது பெரிதாக ஆர்வமில்லை. அதற்குக் காரணம் இவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் மற்றொரு உறவினர் துங்கல சலபதி ராவ் பெஜவாடாவில் (விஜயவாடா) நடத்தி வந்த நாடகக் குழுவில் இணைந்து நடித்து வந்தார்.

மிகச் சிறு வயதிலிருந்தே அதைப் பார்த்து வளர்ந்தவருக்கு படிப்பை விட, ஆடுவதிலும் பாடுவதிலும்தான் நாட்டம் இருந்தது. அத்துடன் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தந்தையார் சுப்பராமய்ய நாயுடு காலமாகிவிட்டார். குடும்பத்தின் வறுமை, படிப்பில் நாட்டமின்மை என எல்லாம் சேர்ந்து படிப்புக்கு முழுக்குப் போட வைத்தது.

பிழைப்பதற்கான வழி தேடியபோது கிடைத்ததுதான் நடிப்புத் தொழில். இயல்பாகவே அதன் மீதிருந்த ஆர்வமும் சேர்ந்துகொள்ள, தூரத்து உறவினரான துங்கல சலபதி ராவ் நாடகக் குழுவில் 11 வயதில் தன் சகோதரர் உதவியுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். நடிப்பின் மீதான இயல்பான ஆர்வம் பல வேடங்களை அவருக்கு வழங்கியது.

இனிமையான குரல் வளமும் அமைந்திருந்ததால் பாடி நடிக்கக் கூடியவராகக் குறுகிய காலத்தில் பேரும் புகழும் அவரைத் தேடி வந்தது. பாதுகா, சக்குபாய், பிரகலாதா, கிருஷ்ணலீலா போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. நாடக்ககுழு பல ஊர்களுக்கும் செல்லும்போது புகழும் பேரும் தானாகவே வந்தடைந்தன. அதிலும் குறிப்பாக சக்குபாய், ரங்கூன் ரௌடி போன்ற நாடகங்களில் ஏற்ற பாத்திரங்கள் மக்களால் பெரிதும் பேசப்பட்டன.

நாடகங்களின் வாயிலாகப் பல புதுமுகங்கள் திரைத்துறைக்குள் நுழைந்துகொண்டிருந்த காலம் அது. இயக்குநர்களும் நாடகங்களில் தங்களுக்கான முகங்களையும், திறமைகளையும் கண்டு தேர்வு செய்து கொண்டிருந்தார்கள். அப்படித்தான், 1938ல் ராஜமுந்திரியில் நடைபெற்ற சக்குபாய் நாடகத்தில் ராதா வேடமேற்று நடித்துக்கொண்டிருந்த 12 வயது வரலட்சுமி, அப்போதைய இளம் இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ் ராவ் கண்களில் தென்பட்டார். அந்தச் சின்னப் பெண்ணின் நடிப்பும் அழகும் துடுக்குத்தனமான பேச்சும் அவரைக் கவர, திரைப்படங்களில் நடிக்க அழைப்பு விடுத்தார்.

தெலுங்கு, தமிழ்ப்பட வாய்ப்புகள்
14 வயதில் இவருடைய முதல் தெலுங்கு திரைப்படம் ‘பாரிஸ்டர் பர்வதீசம்’ வெளியானது. இத்துடன் ‘பொந்தம் பெள்ளி’ படமும் இணைந்தே வெளியானது. டூ இன் ஒன் படம் என அப்படங்கள் பேசப்பட்டன. இது ஒரு நகைச்சுவைத் திரைப்படம். படம் நன்றாகவும் ஓடி பெயர் வாங்கிக் கொடுத்தது.

உடனடியாக தயாரிப்பாளர் எம்.கே.ரெட்டி தன் அடுத்த மூன்று படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்காக சென்னை வந்தார் வரலட்சுமி. 1939ல் வெளியான ‘தட்சயக்ஞம்’ இவரின் முதல் தமிழ்த் திரைப்படம். அதைத் தொடர்ந்து நியூ தியேட்டர் நிறுவனத்தாரின் ‘பிரகலாதா’ படமும் வெளியானது. திரைத்துறைக்குள் வந்த பின்னும் போட்டி பலமாக இருந்ததால் வாய்ப்புகள் மெதுவாகவே கிடைத்தன.

அப்போது தெலுங்கில் காஞ்சன மாலா, புஷ்பவல்லி, பி.பானுமதி என திறமை வாய்ந்த நடிகைகளுடன் போட்டி போட வேண்டியிருந்தது. அவர்கள் மூவரும் புகழேணியின் உச்சத்தில் இருந்தவர்கள். மிக இளம் வயதுப் பெண்ணாகவும், மெலிந்த தோற்றத்திலும் இருந்ததால் தன்னை தக்கவைத்துக் கொள்ள மிகுந்த பிரயாசைப்பட வேண்டியிருந்தது.

குரல் வழி வாய்ப்புகள் தேடி…
நல்ல இனிமையான குரல் வளமும் இருந்ததால், பாடல்கள் வழியாக தன்னை நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் பம்பாய்க்குப் பயணமானார். இந்தித் திரையிசையின் பிதாமகன் என புகழப்படும் நௌஷாத் இசைக்குழுவில் கோரஸ் பாடும் வாய்ப்புதான் கிடைத்தது. தனிப் பாடல் பாடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்போது சுரைய்யா, நூர்ஜஹான் போன்ற பெரும் பிரபலங்கள் இசைத்துறையில் உச்சத்தில் இருந்தார்கள்.

அதன் பிறகும் இந்தி திரையிசையைப் பொறுத்தவரை, வேற்று மொழி பாடகிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டே வந்தது. பின்னாட்களிலும் கூட லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே சகோதரிகள் ஆக்கிரமித்திருந்தார்கள் என்றே சொல்லலாம். திறமையிருந்தும் கூட வாணி ஜெயராம் போன்ற பாடகிகள் அங்கு ஜொலிக்க முடியவில்லை என்பது இந்தி திரையிசை வரலாறு உணர்த்தும் பாடமும் செய்தியும்.

இந்நிலையில் 1940களில் தெற்கிலிருந்து சென்ற வரலட்சுமி மட்டும் எப்படி பாடகியாகி விட முடியும்? வேறு வழியில்லாததால் ‘வன ராணி’, ‘ஜிந்தகி’, ‘யாம்வுத்’ போன்ற படங்களில் பின்னணிக் குரல் கொடுக்கும் சிறு சிறு வாய்ப்புகளும், ஒரு சில படங்களில் தலைகாட்டி விட்டுப் போகக்கூடிய சிறு பாத்திரங்களும் மட்டுமே இந்தித் திரையுலகில் அவர் பெற்றவை. மனம் நொந்து போனவர் சுவரில் எறிந்த பந்து போல  1942ல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தார்.

திரை வாழ்வும் அசல் வாழ்வும்
திரைத்துறைக்கு தன்னை நம்பி அழைத்து வந்த கே.எஸ்.பிரகாஷ் ராவ் மட்டுமே அவருக்குப் பெரும் ஆதரவாக இருந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு குழந்தைகள் என முழுக்கவும் குடும்ப வாழ்க்கை மட்டுமே. ஆனால், பாடிய வாயும், ஆடிய காலும் எப்படி ஓய்ந்து இருந்து விட முடியும்? மீண்டும் திரைஉலகம் இரு கரம் நீட்டி வரவேற்றது.

நான்காண்டு கால ஓய்வுக்குப் பின், 1946ல் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான சி.புல்லையா தயாரித்த ‘விந்தியாராணி’ படத்தில் நடித்தார். பின்னர் தொடர்ச்சியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்தன. ‘துரோகி’, ‘வாலி சுக்கிரீவன்’, ‘ஸ்வப்ன சுந்தரி’ என படங்கள் பெயர் வாங்கிக் கொடுத்தன.

எதிர்மறை பாத்திரங்களும் திரை நாயகிகளும்
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம் ‘துரோகி’. இப்படத்தில் கே.எஸ்.பிரகாஷ் ராவும் வரலட்சுமியும் இணைந்தே நடித்தார்கள். இன்று வரை வரலட்சுமிக்குப் பெயர் சொல்லும் படமாக அது இருக்கிறது. பணத்திமிர் பிடித்த பெண்ணாக அவருடைய பாத்திரம் அமைந்திருந்தது. ‘ஆரவல்லி’, குழந்தையும் தெய்வமும்’ போன்ற படங்களும் கூட ஒரு அதிகாரம் மிக்க பெண்ணாக அவரை காட்சிப்படுத்தியே அமைந்தன.

அம்மாதிரியான நடிப்பில் அவர் வெளுத்துக் கட்டினார் என்பதே உண்மை. ஒரு நடிகையாக அவர் பல பாத்திரங்களையும் ஏற்றிருந்தாலும், பெண்ணின் இயல்புக்கு மாறாகச் சொல்லப்படும் பாத்திரங்கள் தனித்தன்மையை உருவாக்கி விடும், அதற்கு டி.ஆர்.ராஜகுமாரியின் வசந்தசேனை தொடங்கி, ‘ரத்தக்கண்ணீர்’ காந்தா, ‘படையப்பா’ நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் வரை பல பாத்திரங்களை உதாரணமாகச் சொல்லலாம். நடிகையரின் நடிப்பு திறனுக்கு கிடைத்த வெற்றியாகவும் இதனை கொள்ளலாம்.

சொந்தக் கம்பெனி ஸ்டுடியோ பணிகள்
1930களின் இறுதியில் நடிக்கத் துவங்கி 40களில் வேகம் பிடித்தாலும், பல இளம் கதாநாயகிகளுடன் 1950 களிலும் தன் ஓட்டத்தைத் தொடர்ந்தவர் வரலட்சுமி என்றால் மிகையில்லை. அவருக்கான பாத்திரங்கள் அவருக்கு அமைந்தன என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ், தெலுங்கு என முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். நடிகர்களில் எம்.ஜி.ஆர். அதுபோலவே 30களில் தொடங்கி 50களில் வேகம்
எடுத்தவர்.

நடிகரும் கணவருமான பிரகாஷ் ராவுடன் இணைந்து ‘பிரகாஷ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, இருவரும் சொந்தமாகத் தெலுங்கிலும் தமிழிலும் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தனர். பின்னர் 1952ல் ‘பிரகாஷ் ஸ்டுடியோ’ வையும் தொடங்கினார்கள். இவர் நடித்த ’குல கோத்ராலு’, ‘பெள்ளி சேசி சூடு’, ‘கன்ன தல்லி’ ‘மாங்கல்ய பந்தம்’ போன்ற தெலுங்குப் படங்கள் பெரும் புகழ் பெற்ற படங்கள். வரலட்சுமிக்குப் பெயர் பெற்றுத் தந்த படங்களும் கூட.

1951ல் பிரகாஷ் ராவ் இயக்கிய இரு மொழிப்படம் ‘அண்ணி’ தெலுங்கில் ‘தீக்‌ஷா’. அண்ணிக்கும் சிறு வயதுக் கொழுந்தனுக்கும் இடையிலான அன்பை, கிட்டத்தட்ட தாய் மகன் போன்ற உறவை அற்புதமாகச் சொல்லிய படம். தமிழிலும் சிவாஜி பத்மினி நடிப்பில் ‘மங்கையர் திலகம்’ இம்மாதிரியான கதையமைப்பைக் கொண்ட படம்தான். பிரகாஷ் ராவ் இயக்கிய பல படங்கள் குடும்ப உறவுகளை மேன்மைப்படுத்துபவையாக இருந்தன.

அதில் பெரும்பாலும் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தவர் வரலட்சுமியே. ‘பெள்ளி சேசி சூடு’, ‘கன்ன தல்லி’ போன்ற படங்கள் ‘கல்யாணம் பண்ணிப் பார்’, ‘பெற்ற தாய்’ என தமிழிலும் எடுக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றவை. தமிழின் ஒப்பற்ற தேன் குரலுக்குச் சொந்தக்காரர் பி.சுசீலா அறிமுகமான படமும் இதுதான். ‘ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு?’ என்று கேட்டு ரசிகர்களைத் தன் குரலால் சொக்க வைத்தார்.

முதன்மை நாயகர்களின் நாயகி
எம்.ஜி.ஆருடன் ‘குலேபகாவலி’ படத்தின் பின் பாதியில் நாயகியாகத் தோன்றினார். அற்புதமான பாடலான ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ…போ…’ மூலம் இன்றளவும் நம் மனங்களில் நிலையான இடம் பெற்றவர். மூன்று கதாநாயகிகள் என்றாலும், வழக்கம் போல் தன் மிடுக்கும் கம்பீரமும் சற்றும் குறையாமல் நாட்டின் அரசியாக நடித்திருப்பார்.

எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக இணைந்து நடித்த ஒரே படம் இதுதான் என்றாலும், அவருடன் தி.முக. பிரச்சார மேடைகளிலும் பங்கேற்றுப் பேசியவர். அதன் தொடர்ச்சியாக, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘தொழிலாளி’ போன்ற எம்.ஜி.ஆர். படங்களின் நாயகியாக தன் சகோதரியின் மகள் ரத்னா இடம் பெறுவதிலும் முக்கிய பங்காற்றியவர். 

‘நான் பெற்ற செல்வம்’ படத்தில் சிவாஜியின் நாயகி. கௌரி என்ற பாத்திரமும் நடிப்பும் நினைவில் நிற்பவை. அதிகாரம் மிக்க பெண்ணாக மட்டுமல்லாமல், அன்பும் பொறுமையும் மிக்க பாத்திரத்திலும் சோபித்தவர். இப்படத்தின் ‘பூவா மனமும் பூத்ததே’ டூயட்டும், கவி. கா.மு. ஷெரீஃப் எழுதிய ‘வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலு ஏசும்’ தத்துவப் பாடல் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் வகையைச் சார்ந்தது.

வசதி படைத்த வீட்டு இளைஞனான தன் கணவன், தன் பொருட்டு வீட்டை விட்டு வந்து வறுமையில் உழல்வதும், பிரசவ செலவுக்குப் பணம் இல்லாமல், டாக்டரின் வீட்டிலேயே திருடத் துணிந்தான் என்ற செய்தி கேட்டு, மருத்துவமனையை விட்டு வெளியேறி, உயிரையும் இழக்கும் சுய கௌரவம் மிக்க பெண்ணாக வாழ்ந்திருப்பார். ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் பரதனான சிவாஜிக்குத் தாயாக, ராமனைக் காட்டுக்கு அனுப்பும் சுயநலம் மிக்க கைகேயி பாத்திரத்தையும் இவர்தான் ஏற்றார்.

ஒரே காலகட்டத்தில் கதாநாயகியாகவும் வயதில் மூத்த அக்கா, அண்ணி, அம்மா என பல அவதாரங்களை அந்தக் கால கதாநாயகிகளால் எடுக்க முடிந்த இயல்பான தன்மையும் சூழலும் இப்போது ஏன் இல்லாமல் போனது என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை. சிவாஜியும், வரலட்சுமியும் இணைந்து நடித்த ‘ஹரிச்சந்திரா’ 1966ல் தணிக்கை செய்யப்பட்டாலும், அதன்பின் 1968ல் வெளிவந்து படுதோல்வி அடைந்தது. இதனை இயக்கியவரும் பிரகாஷ் ராவ் தான்.

1957ல் பெங்களூர் மேயர் கே.எம். நாகண்ண கவுடாவின் நந்தி பிக்சர்ஸ் தயாரித்த படம் ‘நாகார்ஜுனா’ என்ற புராணப்படத்தைத் தயாரித்தார். இதில் அர்ஜுனனாக பின் நாளைய கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நடிக்க, கதாநாயகி உலூச்சியாக நடித்தவர் ஜி.வரலட்சுமி. இப்படத்தில் செந்தமிழ் நடையில் கொஞ்சிய இலக்கணத் தமிழ் வாசனை வீசிய வசனங்களை கன்னடத்து ராஜ்குமாரும், ஆந்திரத்து வரலட்சுமியும் அற்புதமாகப் பேசி நடித்திருக்கிறார்கள் என்பதும் ஆச்சரியம்தான். இந்த வகையில் கன்னட சூப்பர் ஸ்டாருடனும் இணைந்து நடித்தவர் வரலட்சுமி.

தமிழின் முதல் சூப்பர்ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், சிறை மீண்ட பின் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியையே கண்டன. அதனால் அந்தப் படங்கள் மக்களின் கவனத்தைப் பெறவில்லை. பட்டியலில் இடம் பெற்றதோடு மட்டும் நின்று போனது. அவரது கடைசி படமான ‘சிவகாமி’யில் கதாநாயகியாக, அவருக்கு இணையாக நடித்தவர் வரலட்சுமி.

மாடர்ன் தியேட்டர்ஸின் டார்லிங்
‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனத்தின் முதன்மை நடிகைகளில் ஒருவராகவும் வரலட்சுமி இருந்தார். 1956ல் டி.ஆர்.சுந்தரம் இயக்கி வெளியான ‘பாசவலை’ அதில் முக்கியமான படம். ‘அப்துல் ஷா’ என்ற ஒரு பழமையான நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. வழக்கமாக ஜெமினி நிறுவனத்தின் படங்களில் அதிகமாக இடம் பெற்றவரான எம்.கே.ராதா மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்தார்.

கணவனைப் பிரிந்து, குழந்தைகளுடன் கண்ணீர்க் கடலில் தானும் கரைந்து, பார்ப்பவர்களையும் மூழ்கடித்திருப்பார் வரலட்சுமி. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் ‘குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்’, ‘அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை’ போன்ற பாடல்கள் இப்படத்துக்குப் பெரும் பலம். இதற்குப் பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படமான ‘ஆரவல்லி’ வரலட்சுமியைப் புகழின் உச்சியில் கொண்டு நிறுத்தியது.

நடுத்தர வயது தாயாக, ஆணவம் மிக்க பெண்ணரசியாக வரலட்சுமி அமர்க்களப்படுத்தியிருப்பார். 1946ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனமே பி.எஸ்.சிவபாக்கியம் நடிப்பில் இப்படத்தை எடுத்திருந்தது. தெலுங்கில் பிரபலமாக இருக்கும் வரலட்சுமியை வைத்து மீண்டும் எடுத்தார் சுந்தரம். மகாபாரதக் கதையில் கிளைக்கதையாக இடம் பெற்றாலும், கர்ண பரம்பரைக் கதையாகவும் இன்று வரை சொல்லப்படும் கதை.

கிளியோபாட்ராவைப் போல் ஆரவல்லி கழுதைப் பாலில் குளிப்பதாகவும், அதற்காக சலவைத் தொழிலாளிகள் கழுதையிடம் பால் கறப்பதாக எல்லாம் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். நகைச்சுவை நடிகர்களே பெரும்பாலும் அக்காட்சிகளில் நடித்திருந்தனர். இதே நிறுவனம் தயாரித்த ‘காட்டு ரோஜா’விலும் நடித்தார்.

திசை மாறிய வாழ்க்கை
1962ல் பிரகாஷ் ராவுடன் திருமண பந்தம் முறிந்தது. மல்யுத்த வீரர் அஜித் சிங்கை மணந்து கொண்டு, அவருடன் மல்யுத்த மேடைகளிலும் அவ்வப்போது தோன்றினார். இருவரும் இணைந்து சொந்தமாக ‘டாக்ஸி டிரைவர்’ என்ற படத்தைத் தயாரித்து நடித்தனர். ஆனால், அப்படம் வெளியாகவேயில்லை. பின் அவரையும் விட்டுப் பிரிந்து தனிமையில் வாழ்ந்தார்.

‘குழந்தையும் தெய்வமும்’ தெலுங்கில் ‘லேத மனசுலு’ வாக தயாரானபோது அதிலும் நடித்தார். 1968ல் ‘மூக ஜீவலு’ தெலுங்குப் படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் வழியாக பெண் இயக்குநர்களின் வரிசையில் ஒரு எண்ணிக்கை கூடுதலானது. ‘வாணி ராணி’, ‘வாழையடி வாழை,’ ‘வீட்டுக்கு ஒரு பிள்ளை’ என 70கள் வரை நடித்தார்.

அதன் பின் திரையுலகை விட்டு விலகி தனிமையிலேயே வாழ்க்கையைக் கழித்தார். எங்கிருக்கிறார் என்பதையே ஏறக்குறைய ரசிகர்கள் மறந்து விட்ட நிலையில் மகள் கனக தாராவுடன் தங்கியிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், வயது முதிர்வு காரணமாகவும் உடல் நலமின்மையாலும் 2006 நவம்பர் 26ல் 80ம் வயதில் காலமானார்.

(ரசிப்போம்!)

நடித்த படங்களில் சில...
அண்ணி, பரோபகாரம், பெற்ற தாய், நல்ல தங்காள், போர்ட்டர் கந்தன், பாசவலை, வாழ்விலே ஒரு நாள், மறுமலர்ச்சி, பத்தினி தெய்வம், அமுதவல்லி, அழகர்மலைக் கள்வன், மாமியார் மெச்சிய மருமகள், பெற்ற மனம், பொன்னான வாழ்வு, திருடர்கள் ஜாக்கிரதை, மாயா ரம்பா, பாக்தாத் திருடன், காட்டு ரோஜா, அரிச்சந்திரா, வாணி ராணி, வாழையடி வாழை, வீட்டுக்கு ஒரு பிள்ளை.