ப்ரியங்களுடன்...



எங்கள் அன்புக்குரிய இந்துமதியின் நேர்காணல் சூப்பர்! அதே இனிமை! அதே எளிமை! சிவசங்கரி அவர்களின் புகைப்படத்தையும் வெளியிட்டதில் அட்டகாசமாகி விட்டது. நைஸ் ப்ரசன்டேஷன்!- ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர்.

தோழி 6ம் வருடத்தில் அடியெடுத்து வைப்பதை பெருமையாக நோக்குகிறோம். பெண்கள் இதழிலிருந்து மாறுபட்டு, பல துறைகளிலும் எங்களுக்கு பரிச்சயமும், பழக்கமும் ஏற்பட்டிருக்கிறது என்றால் அது தோழியால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது.
- மகாலஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி-9.
 
எந்த ஒரு இதழையும் பிரதிபலிக்காமல் என் வழி தனி வழி என தனித்துவத்துடன் பீடு நடை போட்டுவரும் எங்கள் குங்குமம் தோழியே வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு.
- பு.வையலட் மேரி, கொருக்குப்பேட்டை.

கக்கூஸ் ஆவணப்படம் தலைப்பும் தகவல்களும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போலிருந்தன. உச்சநீதிமன்ற ஆணையால்கூட தீர்க்க  முடியாத பிரச்னையாக இருக்கும் துப்புரவு தொழிலாளர்களின் அவலங்களை காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர்கள்,படத்தொகுப்பாளர், தயாரிப்பாளர் திவ்யா ஆகியோருக்குப் பாராட்டுகள் என்பது மிகச் சாதாரண சொல். அவர்களின் வலியையும், வேதனையையும் உணர வைத்தது. ‘இது  படமல்ல’, உண்மையில் ‘பாடம்’
- கீதா, கலைஞர் கருணாநிதிநகர்.

பெண் மேஜிக் கலைஞர் மகாலட்சுமி தன் துறையில் தடம் பதித்திருப்பதில் மனம் மகிழ்ச்சிக் கொள்கிறது. கோதுமை ரவை பொங்கலை செய்து ருசித்து, ரசித்து உண்டோம்.
- சு.இலக்குமணசுவாமி, திருநகர், மதுரை-6.

ஊசிமுனை ஓவியங்கள் வியக்க வைத்தது என்பதே நிஜம்.
- சி.கார்த்திகேயன், சாத்தூர்.

‘‘100 பொருட்களின் வாயிலாக பெண்கள் வரலாறு’’ அரிய தகவல்களை அத்தனை இதழ்களிலும் அள்ளிக்கொண்டு வந்தது. நன்றி! ‘ஹைட்ரோ கார்பன்’ என்றால் என்ன? அதனால் நாம் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியது வரும் என்பனவற்றை அறிவுறுத்தியது ‘நீராலானது இவ்வுலகு’ தொடர்.

’வானவில் சந்தை’ பகுதியில் ‘‘சம்பாத்தியத்திற்கு உழைக்கும் நேரத்தில் ஒரு சிறிய அளவையாவது அதைத் திட்டமிடுவதில் பெண்கள் செலுத்த வேண்டும்’’ என்ற வரிகள் மாணிக்கக் கற்கள். ‘பெண்’ணுக்கே உரிய தனிச்சிறப்பு. ‘பூப்பெய்தல்’ அது குறித்த பெண் குழந்தைகளுக்கு இதமாக, அனுசரணையாக இருக்க வேண்டும் என்பதை ‘நான் வளர்கிறேனே மம்மி’ மிகச்சிறப்பாக எடுத்துரைத்தது.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

ஓவியக்கல்லூரியில் ஓவியம் பயிலாமல், வித்தியாசமான முறையில் ஓவியம் படைக்கும் பன்முக ஓவியர் தாரா கணேசனின் வண்ணக் கனவுகள் நனவாக வாழ்த்துகிறேன்.
- ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.