ஹேர் ரிமூவல் பேட் பயன்படுத்தலாமா?



-ஷாலினி நியூட்டன்

பெண்களின் ஃபேஷன் உலகைப் பொறுத்தவரை சுலபமாக எளிமையாக என எந்த புராடெக்ட் அறிமுகம் செய்தாலும் வரவேற்பு அதிகமாகவே இருக்கும். அப்படித்தான் காலம் காலமாக தோலில் உள்ள முடிகளை நீக்க சிகிச்சைகள், க்ரீம்கள், தெரபிகள் என பெண்களின் உலகை ஆக்கிரமித்துள்ளன.

வேக்ஸிங் துவங்கி ரிமூவல் க்ரீம் என ஒரு பக்கம் தோலில் உள்ள முடிகளை நீக்க அத்தனை வழிகள் என்றால் தோல் நிபுணர்கள் கருத்தோ வேறாக இருக்கிறது. நம் நாட்டின் காலநிலைக்கு ரோமங்கள் இருக்க வேண்டும், அதுதான் பாதுகாப்பு என்கிறார்கள். ஆனால் நடைமுறைக்கு சாத்தியமா? நோ வே என்பது மாடர்ன் பெண்களின் பதில். விமானப் பணிப்பெண்கள் முதல் நடிகைகள், மாடல்கள், ஐடி பணியில் இருக்கும் பெண்கள் என வேலைக்கு செல்லும் பல பெண்களும் “நாங்கள் கை நிறைய முடிகளுடன் இருந்தால் எப்படி... நிச்சயம் சங்கடமாகவே இருக்கும்” என்கிறார்கள். இவர்களை மனதில் வைத்தே இதோ இந்த ஹேர் ரிமூவல் வகைகளில் புதிதாக மற்றுமொரு முறை மார்க்கெட்டில் தலை தூக்கியுள்ளது.

ஹேர் ரிமூவல் பேட்: ஆண்கள் விரலில் கோர்த்துக்கொண்டு தலை சீவும் சீப்பைப் போன்ற அமைப்பு, அதில் கருப்பு நிற பேட்களை ஒட்டிக்கொண்டு முடிகள் உள்ள பகுதிகளில் மெதுவாகத் தேய்க்க வேண்டும். பின்னர் உங்களுக்கு இந்த பேட்கள் ஷைனிங் மற்றும் ஸ்மூத்னெஸ் ஆகியவற்றை கால்களுக்கும் கைகளுக்கும் கொடுக்கும். இதுதான் விளம்பர வாசகம்.

சிலிகான் நுண்துகள்கள் அடங்கிய இந்த பேட்களை நாம் நினைத்த இடங்களில் பயன்படுத்தலாம். பால்பாயின்ட் பேனா போன்று பேட்கள் ஓரிரு பயன்பாட்டிற்குப் பின் புதிதாக வாங்கி ரிஃபில் செய்துகொள்ளலாம். 150 ரூபாய் முதல் 2,300 ரூபாய் வரை என தரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. சரி..!

உண்மையில் இந்த ரிமூவல் பேட் எப்படி?
ஆன்லைனில் மட்டுமே தற்சமயம் கிடைக்கும் இந்த பேட்களை பயன்படுத்திய சிலரின் கருத்துகளை அதே ஆன்லைனில் தேடிப்
பிடித்தேன்.
 
அதற்கு முன்: எந்த புராடெக்ட் பெண்கள் காஸ்மெட்டிக் உலகில் காலடி எடுத்து வைத்தாலும் அதை உடனே சோதனை செய்து கருத்து வெளியிடும் பெண்களில் முக்கியஸ்தரான ஆங்கில வலைத்தள எழுத்தாளர் ரேச்சல் டெய்லர் இது குறித்து என்ன சொல்கிறார். தன் முகம், கால் என இந்த பேட்களை கொண்டு சோதனைக்கு உட்படுத்திய ரேச்சல் கூறிய கருத்து இதுதான்.

என்னுடைய தோல் மிகவும் சென்சிடிவானது. நான் என் கால்களைதான் இதற்கு முதலில் தேர்வு செய்தேன். நான் தேய்க்கத் துவங்கி ஒரு சில மணிநேரங்கள் கழித்து முடிகள் கொஞ்சமாக நீங்க ஆரம்பித்தன. பின் கை கால்கள், முகம் என சோதனைக்குப் பின் சில இடங்கள் சிவப்பாகவும், சிராய்ப்புகளும் தென்பட்டன. விளம்பரங்களில் காட்டப்படுவது போல் ஸ்மூத், ஷைனி ஸ்கின் எனக்குக் கிடைக்கவில்லை.

அதே சமயம் இந்த புராடெக்ட்டை பயன்படுத்தி என் தோழி ஒருவர் (அவருக்கு வறண்ட சருமம்) சுலபமாக வேலை செய்வதாகச் சொன்னார். ஆனாலும் தற்போது நாம் பயன்படுத்தும் இரண்டு முதல் ஐந்து நிமிட க்ரீம்களுடன் ஒப்பிட்டால் இந்த பேட்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் கொஞ்சம் அதிகம் என்பது என் தோழியின் அனுபவம். சுலபமோ, எளிமையோ இல்லை.”
 
ஆன்லைனில் வாங்கிய மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?
நிக்கி: என் 12 வயது மகளுக்காக இந்த புராடெக்டை பயன்படுத்தினேன். ஹேர் ரிமூவிங் அவளுக்கு முதல் முறை என்பதால் ரேஸர் பயன்படுத்தி அவளுக்குக் காயம் ஏற்படுத்துவதை விரும்பாததால் இந்த பேட்கள்தான் எனது சாய்ஸ். நல்ல ரிசல்ட்.

சாம்: எனது சின்ன முடிகளை மிகச் சுலபாக இந்தப் புராடெக்ட் நீக்குகிறது ஆனால் கொஞ்சம் நீளமான முடிகள், அல்லது அடர்த்தியான பகுதிகளில் அதிக நேரம் பிடிக்கிறது. எனினும் சென்சிடிவ் தோல் உள்ளோருக்கான முறை இதுவல்ல.

சரி, இதைப் பயன்படுத்தலாமா வேண்டாமா? தோல் சிகிச்சை நிபுணர் ஆர்த்தி என்ன சொல்கிறார். “ஈஸி, நேரம் குறைவு... இப்படி விளம்பரம் என்றாலே தோல் சார்ந்த விஷயங்களில் கொஞ்சம் கவனம் தேவை. சாதாரணமாக குளித்துவிட்டு சில பாலிஸ்டர் டவல்களில் அழுத்தித் துடைத்தாலே சிலருக்கு எரியும். இந்த ரிமூவல் பேட்களே தேய்க்கும் முறைதான் என்கிறீர்கள்.

உங்கள் தோல் என்ன விதமானது, அதற்கு இந்த பேட்கள் சரிவருமா என்பதை தகுந்த நிபுணர்கள் அறிவுரைகளுடன் பயன்படுத்தினால் நல்லது. முடிந்தவரை லேசர் முறை சிகிச்சை அல்லது வேக்ஸிங் போன்ற பழைய முறைகள், இதைத் தவிர்த்து வீட்டிலேயே ரேசர் பயன்படுத்தி முடிகளை நீக்குதல் இதை மட்டுமே நாங்கள் அறிவுறுத்துவோம்.

இந்தப் பேட்கள், க்ரீம்கள் எல்லாமே ஆரம்பத்தில் நன்றாக இருக்கும் நாட்கள் செல்லச் செல்ல எரிச்சல், தோல் அலர்ஜிகள் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். ஆனால் சுலபம், நேரம் குறைவு என்பதால் பெண்கள் இதை விரும்புகிறார்கள். தோல் விஷயம் என்பதால் எதிலும் ஜாக்கிரதை” என்று ஆலோசனை கூறுகிறார் ஆர்த்தி.