உணவே மருந்து



நாம் நாள்தோறும் சமைக்கும் சமையல் பொருட்கள் மருந்தாகவும் பயன்படுகின்றன. அதனால்தான் ‘உணவே மருந்து’ எனச் சொல்லப்படுகிறது. இதோ சாம்பிளுக்கு சில...

மிளகு
‘நறுமணப் பொருட்களின் அரசி’யான மிளகை சங்க காலத் தமிழர் ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்து பெரும் பொருள் ஈட்டினர். மிளகு நறுமணப் பொருளாகவும் மருந்தாகவும், உணவைப் பாதுகாக்கவும் பயன்பட்டது. மிளகில் உள்ள பொட்டாசியம் ஜீரண சக்தியைத் தூண்டும். குடல்களுக்கு நல்லது. வாயுப் பிரச்சனையை நீக்கும். கொழுப்பைக் குறைக்கும். சைனஸ், தொண்டை வலி குணமாகும். வெற்றிலையில் பத்து மிளகை வைத்து மென்று தின்றால் தேளின் விஷம் நீங்கும். மாங்கனீஸ், வைட்டமின் சி, வைட்டமின் ஈ ஆகியவை மிளகில் உள்ளன.

இஞ்சி
உணவு ஜீரணமாக இஞ்சி உதவுகிறது. குடலில் சேரும் கிருமிகளை அழிக்கும். கல்லீரலை குணப்படுத்தும். இஞ்சிச்சாறு வாந்தி, பித்தம், மலச்சிக்கல் ஆகியவற்றை குணமாக்கும். ஞாபக சக்தியைத் தூண்டும். பசி எடுக்கும். சளி, தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு இஞ்சி நல்ல மருந்து. தலைச்சுற்றலுக்குத் தீர்வு கிடைக்கும். உடல் இளைக்கும். வாதக் கோளாறுகள் நீங்கும். இதய நோய் குணமாகும்.

பூண்டு
பூண்டில் உள்ள அல்லிசின் மருத்துவ குணம் கொண்டது. 40 வகையான மருத்துவப் பயன்கள் பூண்டுக்கு உண்டு. ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைப் பூண்டு தடுக்கும். பூண்டு வாயுக் கோளாறைக் குணப்படுத்தி ஜீரண சக்தியை தூண்டும். ஜலதோஷம், காது வலி, முகப்பரு, ஊளை சதை, புழுத்தொல்லை, மூல நோய்கள் ஆகியவற்றைப் பூண்டு குணப்படுத்தும். பூண்டை அரைத்துப் பத்து போட்டால் கட்டிகள் கரையும். சுளுக்கை குணமாக்கும். வயிற்றுவலி, நெஞ்செரிச்சல், நெஞ்சுக் கரிப்பு குறையும். வாத நோய் குணமாகும். பூண்டையும் மிளகையும் சேர்த்துச் சாப்பிட்டால் குளிர்காய்ச்சல் ஓடிப் போய் விடும்!

மஞ்சள்
ஆற்றலின் வடிவாய் விளங்கும் மகளிருக்கு மஞ்சள் அவசியம். மஞ்சள் ஒரு கிருமி நாசினி. நோய் காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் வயிற்றுப் புண்ணை ஆற்றும். பெண்களின் முகத்தில் முடி வளர்வதைத் தடுக்கும். உடலின் வியர்வை நாற்றத்தை மஞ்சள் போக்கும். தோலுக்குப் பாதுகாப்பு தரும். மஞ்சள் புண்களை குணமாக்கும். மஞ்சளை தீயில் சுட்டு சுவாசித்தால் மூக்கடைப்பு நீங்கும். உடலுக்கு நிறத்தைக் கூட்டும். மஞ்சள் ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

சோம்பு
ஜீரண சக்தியை தூண்டும். பசி ஏற்படும். உடல் பருமன் குறையும். கருப்பை பலம் பெறும். குடற்புண் ஆறும். வயிற்றுவலி, வயிறுப் பொருமல் குணமாகும். ஈரல் பாதிப்பு நீங்கும். இருமல், இரைப்பு சரியாகும். காய்ச்சல் குறையும். மாதவிடாயின் போது ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தும்.

சீரகம்
சீரகக் கசாயம் வாந்திக்கு நல்லது. சீரகத் தண்ணீர் அஜீரணத்தைப் போக்கும். தலைச்சுற்றல், மயக்கம் நீங்கும். சீரகத்தை திராட்சையுடன் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுப்படும். கருப்பட்டியுடன் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.


- ப.கீதா, திருச்சி.