உடல் தானம்



-மகேஸ்வரி

“பிண்டம் எனும் எலும்போடு, சதை, நரம்பு, உதிரம் அடங்கிய உடம்பிது…” என்ற பாடலை நினைவுப்படுத்தும் விதமாக, இறப்பிற்கு பின் நெருப்பிற்கும் மண்ணிற்கும் இரையாகும் மனித உடலை மருத்துவம் படிக்கும் மாணவர்களின் உடற்கூறியல் கல்விக்கு உதவட்டுமே எனும் எண்ணத்தில் விரல்விட்டு எண்ணும் விதத்தில், மிகச் சிலரே அது பற்றிய விழிப்புணர்வோடு உடலை தானம் செய்ய முன்வருகிறார்கள்.

உறுப்பு தானமும், உடல் தானமும் ஒன்றல்ல... இரண்டும் வேறு வேறு. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு அரசு பொது மருத்துவமனைகளில் கேட்பாரற்று கிடக்கும் இறந்த உடல்களே பெரும்பாலும் உடற்கூறியல் கல்விக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஒருவர் முழுமனதுடன் விரும்பி, தான் இறந்ததும் தன்னுடலை தானம் செய்ய வேண்டும் என நினைத்தால், என்ன செய்ய வேண்டும்? அதற்கென யாரை அணுகுவது? எங்கே எப்படி விண்ணப்பிப்பது? ஒப்படைக்கப்பட்ட நம் உடலின் அடுத்த நிலை என்ன? எண்ணற்ற கேள்விகளுடன் அது குறித்து விளக்கம் பெற சில வினாக்களுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின், பொது அறுவை சிகிச்சை மருத்துவரான டாக்டர் லெஷ்மண மூர்த்தியை அணுகியபோது உடல் தானம் குறித்து நம்மிடம் விளக்கமாகவும் விரிவாகவும் பேசினார்.

உடலை எப்படி ஒப்படைப்பது?
தானம் செய்ய ஒப்புக்கொண்ட நபர் இறந்த பின் அவரின் உடல் அரசு மருத்துவமனையிலோ, அரசு மருத்துவக் கல்லூரியிலோ ஒப்படைக்கப்படும். உடல் தானம் செய்த நபர் இயற்கையாக மரணமடைந்தால் மட்டுமே மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும். எனவே தானம் செய்தவர் இயற்கையாக மரணம் அடைந்தார் என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவித்தால் அவர்களே வந்து உடலைப் பெற்றுச் செல்வார்கள் அல்லது நாமாகவும் விண்ணப்ப நகலுடன் இறந்த உடலை மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கலாம். வேலை நாட்களாக இருந்தால் மருத்துவக் கல்லூரியிலும், விடுமுறை நாட்களாக இருந்தால் அரசு மருத்துவமனையிலும் ஒப்படைக்கலாம்.

உடல் தானம் பெற்ற பிறகு தொடரும் நடவடிக்கைகள் என்ன?
உடல் கிடைத்ததும் எம்பார்மிங்செய்யப்படும். உடலிலுள்ள ரத்தத்தை முழுவதும் வெளியேற்றி தொடையில் துளையிட்டு செயற்கை திரவத்தை ஏற்றி உடலை பதப்படுத்தி வைத்திருப்பார்கள். எம்பார்மிங் செய்வதன் மூலம் ஒருவரின் உடல் சுருங்குமே தவிர, எத்தனை நாள் ஆனாலும் உடல் கெடாது.

உடல் தானம் செய்வதற்கென விதிமுறைகள் உள்ளதா? யாரெல்லாம் உடல் தானம் செய்ய முடியாது?
கண்டிப்பாக விதிமுறைகள் உள்ளன. ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களும், ஹெபடைடிஸ் பி/சி வைரஸ் தாக்குதல் அடைந்தவர்களும், கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோய் பாதிப்படைந்தவர்கள், டி.பி. நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் உடல்கள் ஏற்கப்பட மாட்டாது.

தொழுநோயால் பாதிப்படைந்தவர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இறந்தவர்களின் உடல் பாகங்கள் சிதைவடைந்து இருந்தால் தானமாக ஏற்கப்பட மாட்டாது. மேலும் இயற்கையான இறப்பில்லாமல் பிணக்கூராய்வு (postmortem) செய்யப்பட்ட உடல்கள் உடற்கூறியல் கல்விக்கு பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் உடல் தானம் செய்வதற்கு வயது வரம்பு கிடையாது.

தன் உடலை தானம் செய்யாதவர் இறந்தால், அந்த உடலை அவரது நேரடியான உறவினர்கள் விரும்பினாலும் தானம் செய்ய முடியும். உடல் தானம் செய்யப்பட்ட ஒருவரின் உடல் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டதும், எம்பார்மிங் செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்டுவிடும். எம்பார்மிங் செய்து முடிக்கப்பட்டுவிட்டது என்றால், ஒப்படைக்கப்பட்ட உடலை திரும்பப்பெற மீண்டும் குடும்பத்தினர் நினைத்தாலும் இயலாது.

தானம் பெறப்பட்ட உடலின் அடுத்தக் கட்ட செயல்பாடு என்ன?
எம்பார்மிங் செய்து பதப்படுத்தப்பட்ட உடல், மருத்துவம் பயில வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் உடற்கூறியல் செயல்முறை கல்விக்கு பயன்பாட்டிற்கு அனுப்பப்பட்டுவிடும். பெறப்படும் உடல்களின் எண்ணிக்கையினை பொருத்து, இறந்த நபர்களது உடல்கள் மாணவர்களுக்குப் பிரித்து வழங்கப்படும். ஒரு சில அரசு மருத்துவக் கல்லூரிகளில் 150 மாணவர்கள் வரை இருப்பார்கள். சில மருத்துவக் கல்லூரிகளில் 250 மாணவர்கள் வரைவகுப்பில் உண்டு.

பெறப்பட்ட உடல்களை மாணவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து பிரித்துத்தருவார்கள். உதாரணத்திற்கு 150 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில், எட்டு உடல்கள்தான் உள்ளது என்றால், ஒரு உடலிற்கு 18ல் இருந்து 20 மாணவர்கள் எனப் பிரிப்பார்கள். குறைவான உடல்கள்தான் தானமாகப் பெறப்பட்டது என்றால், உடற்கூறியல் பற்றி செயல்முறையில் மாணவர்கள் கும்பலாக நின்று கற்கும் நிலை ஏற்படும். அதிக உடல் பெறப்பட்டது என்றால் ஒரு உடலுக்கு குறைவான மாணவர்கள் என்ற முறையில் அனைவரும் உடற்கூறியலை எளிமையாக கற்கலாம்.

உடற்கூறியல் கல்வி என்பது...
உடலமைப்பு. உள் உறுப்புகளின் அமைப்பு, அதன் செயல்பாடு என ஒரு உடலை முழுவதும் திறந்து பார்த்தால் மட்டுமே தெளிவாக கற்க    இயலும். ஒவ்வோர் உறுப்பின் பாகங்களையும் செயல்முறையில் ஓப்பன் செய்து சொல்லித் தருவார்கள். வலது கை, இடது கை, கால் என ஒவ்வொரு பாகமாக உடற்கூறியல் முதலாமாண்டில் துவங்கும். அவைகளை அருகில் இருந்து கவனித்துக் குறிப்பெடுப்போம்.

மாணவர்களும் முதலாமாண்டிலே, செயல்முறையில் இறங்கி மனித உடல்களை உடற்கூறியல் செய்வோம். முதல்முறை, புதிதாக உயிரற்ற உடலை நெருங்கி, செயற்கல்வியில் இறங்கும்போது, துவக்கத்தில் தடுமாற்றமாக இருந்தாலும், போகப்போக மாணவர்களுக்கு முற்றிலும் பழகிவிடும். இரண்டாமாண்டில் இருந்து மனித உடலில் ஏற்படும் நோய்கள் பற்றி சொல்லித் தரப்படும்.

தனியார் மருத்துவக் கல்லூரி என்றால், அதற்கென மெழுகால் செய்யப்பட்ட வாக்ஸ் பொம்மைகள், மேனிக்யூல் போன்றவற்றை வைத்து செயற்கையான முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும். மருத்துவம் பயில வரும் அனைத்து மாணவர்களுக்கும் முதலாமாண்டு உடற்கூறியல் கல்வி கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.

உடல் தானம் குறித்து தோழி வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது...
இறப்பு என்பது உணர்வு சார்ந்த (emotional) விஷயம். அறிவுப்பூர்வமாய் சிந்தித்தால் மட்டுமே உடல் தானம் என்பது முற்றிலும் சாத்தியம். ஒருசில பிரபலங்கள் மட்டுமே தங்கள் உடலை தானம் செய்துள்ளார்கள். உறுப்பு தானம் பரவலாக நிகழும் நிலையில், உடல் தானம் பற்றிய சிந்தனை மக்களுக்கு இன்னும் அதிகம் வர வேண்டும். இறந்தவுடன் மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்கு உடலை தரும் உயர்ந்த முடிவுக்கும் மனித சமுதாயம் முன்வர வேண்டும்.

பிறப்பைத் தடுக்க, தள்ளி வைக்க விஞ்ஞானத்தால் கற்றோம். இறப்பையும் தடுக்கவும் தள்ளிவைக்கவும் விஞ்ஞானத்தில் முடியும், முடியாதது உலகில் எதுவுமில்லை. நெருப்புக்கும் மண்ணிற்கும் இரையாகும் இந்த சடலத்தை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கு வழங்குவதில் தவறு இல்லை.

உடல் தானத்திற்கு செய்ய வேண்டியது...

* உங்கள் பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவக் கல்லூரிகளில் உடல் தானத்திற்கான விண்ணப்பம் கிடைக்கும். அரசு மருத்துவக் கல்லூரி டீனையோ அல்லது உடற்கூறியல் துறைத் தலைவரையோ (Anatomy HOD) அணுகி விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

* விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் புகைப்படத்தை ஒட்டி பெயர், முகவரி, அடையாளங்கள், தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ‘நான் எனது இறப்புக்குப் பிறகு உடலை தானம் செய்ய விரும்புகிறேன்’ என்று எழுதி கையெழுத்திட வேண்டும்.

* அத்துடன் மிக நெருங்கிய உறவினர் ஒருவரின் சம்மதம் வேண்டும். கணவன் என்றால் மனைவி, மனைவி என்றால் கணவன், அதற்கடுத்த நிலையில் மகனோ, மகளோ, அதற்கும் அடுத்த நிலையில் அண்ணன் உறவுகள்... இப்படி அந்த விண்ணப்பத்தில் கேட்டிருக்கும் உறவுகளில் முன்னுரிமை தரக்கூடிய உறவொன்றை தேர்வு செய்யலாம்.

* உடல் தானம் செய்ததற்கான ரசீது ஒன்று கொடுப்பார்கள். அதனை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* இதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது.

காலம் முழுக்க பெரியாரின் கொள்கைகளை தமிழ் மண்ணில் பரப்பியவர் பேராசிரியர் பெரியார்தாசன். பெண் சிசுக் கொலைக்கு எதிரான ‘கருத்தம்மா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அறிமுகமாகி, மேலும் சில படங்களிலும் நடித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். கடைசியாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இறுதிக்காலத்தில் அவர் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். உயிருடன் இருக்கும்போதே தனது கண்கள் மற்றும் உடலை தானமாக தருவதாக ஏற்கனவே உறுதி அளித்திருந்தார். அதன்படி அவரது மரணச் செய்தி அறிந்து, சங்கரநேத்ராலயா கண் மருத்துவர்கள் அவரின் கண்களை பெற்றுச் சென்றனர். அவரின் உடல் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. 63 வயதில் இறந்த பெரியார்தாசனுக்கு வசந்தா என்ற மனைவியும், வளவன், சுரதா என இரு மகன்களும் உள்ளனர்.

சமீபத்திய நிகழ்வாக, தமிழகத்தில் பிரபல எழுத்தாளரும், கவிஞரும், முற்போக்கு சிந்தனைவாதியுமான, 73 வயதான மக்கள் கவிஞர் இன்குலாப், உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். தீவிர தமிழ் உணர்வாளரான மக்கள் கவிஞர் சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றியவர்.

கவிஞர் இன்குலாப் தன்னுடைய மரணத்துக்கு பிறகு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் தனது உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும் என கூறி இருந்தார். அதன்படி மக்கள் கவிஞர் இன்குலாப்பின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. இன்குலாப்பின் மூத்த மகன் செல்வம் தனது தந்தையின் உடலை ஒப்படைத்தார்.

நடிகர் கமல்ஹாசன்...
உடல் தானம் செய்த முதல் நடிகர் கமல்ஹாசன்தான். சென்னை மருத்துவக் கல்லூரியில் ஆகஸ்ட் 15, 2002 அன்று இதை உறுதி செய்தார்.