நினைவுகள் பிரிவதில்லை



காற்றில் நடனமாடும் பூக்கள்

நிகழ்வுகள் நடந்து முடிந்துவிடுகின்றன. மனிதர்கள் கலைந்துபோய்விடுகிறார்கள். மறைந்து விடுகிறார்கள். ஆனால், நினைவுகள் என்றைக்கும் அப்படியே தங்கிவிடுகின்றன. ஆயுளைக் கூட்டித் தரும் அமிழ்தினும் இனிய நெல்லிக்கனியை தான் உண்ணாது அதியமான் ஔவைக்கு தந்த நட்பின் பிரியமும், முதியோர்கள் வேடமிட்டு வந்து சரியான தீர்ப்பளித்த கரிகால்சோழனின் அறிவுத்திறனும், ஒரு பசுவிற்காக தன் மகனை தேர்காலில் இட்ட மனுநீதி சோழனின் நேர்மையும் அறமும், இவை போன்ற நல்லன பிறவும் எத்தனை எத்தனையோ நூற்றாண்டுகளை கடந்து வந்திருக்கும் இனிய நினைவுகள் அல்லவா!

அழகான அமைதியான இல்லம், தட்டுப்பாடில்லாத செல்வம், மதிப்புமிக்கப் பணி, புகழ், நட்பு, உறவு என இன்னும் இன்னும் தேவைகளின் பட்டியல் நீண்டுகொண்ேடயிருந்தாலும் இவற்றை எல்லாம் கடந்து மானுட வாழ்வு என்பது முற்றும் முழுதும் நினைவுகளால் ஆனதாகவே உள்ளது. வீட்டிலிருக்கிறோம் அலுவலகத்தி லிருக்கிறோம்  பயணத்திலிருக்கிறோம் என்று எங்கிருப்பதாக சொல்லிக் கொண்டாலும் அங்கேயே இருந்தாலும்கூட... உண்மையில் நாம் இருப்பது என்னவோ நமது நினைவுகளுக்குள்தான்.

பெரும்பாலும் உடல் இருக்கும் இடத்திலேயே உள்ளம் இருக்க விரும்புவதில்லை. கால்கள் முன்னோக்கி நடந்து கொண்டிருக்கும்போது மனம் பின்னோக்கி போய்க் கொண்டிருக்கும். ஆக, மனித மனம் ஒவ்வொன்றுமே கண்ணுக்குத் தெரியாத அரூபமான நினைவுச் சங்கிலிகளால் கட்டப்பட்டுக் கிடக்கின்றன. இந்த நினைவுச் சங்கிலிகளை நாம் விரும்பினால்கூட அறுத்துக் ெகாள்ள முடிவதில்லை. பறவையொன்று ஒரு மலையை ஒரு சுற்று சுற்றி வந்து அமர்வது போல் மரணமுறும்முன் தான் வாழ்ந்த வாழ்வை ஒவ்வொருவரும் நினைவுகளால் வட்டமிட்டுச் சுற்றிப் பார்த்துவிட்டுத்தான் கண்மூடுகிறார்கள்.

‘‘தத்தக்கா பித்தக்கா நாலு காலு
தானா நடக்கையில ரெண்டு காலு
உச்சி வெளுக்கயில மூணுகாலு
ஊருக்குப் போகயில பத்துக்காலு’’

என்பது கிராமப்புறங்களில் இப்போதும் புழக்கத்திலிருக்கும் ஒரு புதிர். மானுட வாழ்வின் பரிணாமத்தையும் முடிவையும் நான்கே வரிகளில் விளையாட்டு போல் இப்புதிர் சொல்லிச் சென்றாலும். செயற்கரியச் செயல் செய்த மனிதர்களின் நினைவுகள் என்றுமே அழிவதில்லை. இப்பூவுலகைவிட்டுப் பிரிவதுமில்லை. இறுதியாக உடலைச் சுமப்பவர்கள் ஐந்து பேர் என்றாலும் நினைவுகளை சுமப்பவர்கள்தான் எத்தனை எத்தனைப் பேர்!

பற்பல நிைனவுகளை நாம் ெவளியில் சொல்வதில்லை. மாறாக காந்தி மகானோ, தான் பிள்ளைப் பிராயத்து தவறுகள் முதல் தேசவிடுதலைப் போர் நினைவுகள் வரை... எதையும் மறைக்காது உலக மக்களுக்கு ‘சத்திய சோதனை’யாக எழுதிச் சென்றிருக்கிறார். சத்திய சோதனை முன்னுரையில் காந்தி சொல்கிறார்,  ‘‘ஒரு விஞ்ஞானி தம் ஆராய்ச்சிகளை எவ்வளவோ கணக்காகவும் முன்யோசனையின் பேரிலும் நுட்பமாகவும் நடத்துகிறார். ஆனால் அதன் பலனாக தாம்கண்ட முடிவுகளே முடிந்த முடிவுகள் என்று அவர் கொள்வதில்லை. தாம் அறிந்துகொள்ளாதவையும் இருக்கக்கூடும் எனக்கருதி அவற்றையும் தெரிந்துகொள்ள தயாராக இருக்கிறார்.

அத்தகைய விஞ்ஞானியின் நிலைதான் என் நிலையும். என்னை நானே ஆழ்ந்து சோதித்து வந்திருக்கிறேன்.  என்னுள்ளேயே நான் துருவித்துருவித் தேடிப் பார்க்காத இடமில்லை. என் மனநிலை ஒவ்வொன்றையும் சேமித்து அலசிப் பார்த்திருக்கிறேன்’’ என்பதோடு எனது வாழ்க்கையே நான் கூறும் செய்தி’’ என்றும் கூறிய மகாத்மாகாந்தி அவர்களின் நினைவுகள் மனிதகுல வரலாற்றில் இனிவரும் எல்லா நூற்றாண்டுகளிலும் ஓர் அணையாத சுடராக ஒளிர்ந்துகொண்டுதானிருக்கும். அந்தச் சுடர் அருகே சென்று நிற்கலாம். கண்
களில் ஒற்றிக் கொள்ளலாம்.

ஆனால், அப்படி ஒரு அபூர்வச் சுடராக இனி எவராலும் மாறவே முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆழ்மனதில் பதிந்துவிட்ட ஞாபகங்களை மறக்கமுடியாது. துன்புறுவது ஒருபுறமிருக்க நினைத்திருக்க வேண்டிய எத்தனையோ விஷயங்களை மறந்துபோய் அன்றாட வாழ்வில் தவிப்பவர்களாகி விடுகிறோம். வீட்டைப் பூட்டினோமா... பூட்டை இழுத்துப் பார்த்தோமா... சாவியை எடுத்து வந்திருக்கிறோமா... கைப்பேசி கைப்பையில் தானிருக்கிறதா... பூனைக்குட்டிக்கு பால் வைத்தோமா இப்படி வீட்டைவிட்டு கிளம்பியதுமே நூறு நினைவு பிசகல்கள் வந்துவிடுகின்றன. நான் சிறுமியாக இருக்கும்போது என் தாயார் வெற்றிலைப் பாக்குப் பையை தனது இடுப்பிலேயே செருகி வைத்துக் ெகாண்டு வீடு முழுதும் தேடியலைவதைப் பார்த்து சிரித்திருக்கிறேன்.

இப்போது நானும் அடிக்கடி கைப் பேசியை தேடியலைவதைக் கண்டு என் குழந்தைகள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். தேவையற்ற ஞாபகங்களால் எண்ணத்திலிருக்க வேண்டியவை பிசகி விடுகின்றன. இதுபோன்ற அர்த்தமற்ற தேடல்களிலிருந்து என்னால் தப்பிக்கவே முடிவதில்லை ஒரு நாள் கூட. எனது தோழி ஒருவர் சட்னியை அரைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் நினைவோடு பெட்டகத்தில் (பீரோ) வைத்துவிட்டு நாள்முழுவதும் மனக்குழப்பத்துடன் தேடிக்கொண்டேயிருந்தாராம். தேங்காய் துருவி, சட்னி அரைத்தது உண்மை. ஆனால், ‘சட்னி’ எங்கே போயிருக்கும். ஒருவேளை அமானுஷ்யமாக ஏதாவது நடந்திருக்குமோ என்றெல்லாம்கூட யோசித்தாராம். இரண்டு நாட்களுக்குப்பின் ‘பீரோ’வில் ஏதோ எடுக்கத் திறந்தபோது ‘சட்னி’ அங்கே ஊசிப்போய் இருந்திருக்கிறது.

மறதி நடப்பதுதான் என்றாலும் இதுபோன்ற மறதிகளும் தேடல்களும் நமது நேரத்தை ஈவு இரக்கமின்றி கொள்ளையடித்து விடுகின்றன. எதை மறந்தால் நல்லதோ மனதிற்கு அமைதி கிட்டுமோ அதனை மறக்க முடியாதவர்களாகவும் எதை நினைத்திருக்க வேண்டுமோ அதை மறந்தும் அல்லல்படுபவர்கள் ஆகிவிடுகிறோம். இதனால் நம் மனம்படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

கனவுகள் மற்றும் நினைவுகள் குறித்து ஆராய்ந்து வரும் இங்கிலாந்து நாட்டுப் பேராசிரியர் கரோலின் காடன் நமது பதின் பருவத்தின் இறுதி ஆண்டுகளிலும் இருபதை ஒட்டிய வயதுகளிலும் நமக்கு நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்தே நாம் அதிகம் கனவு காண்கிறோம் என்றும் இந்தப் பருவத்தில்தான் முதல் தடவையாக வீட்டைப் பிரிந்து செல்வது, காதல் வயப்படுவது போன்றன ஏற்படுவதால் இக்காலக்கட்டத்தின் நினைவுத்திறனோ மற்ற எதனைக் காட்டிலும் உச்சபச்சமாக இருக்கும் என்கிறார்.

அணைக்கட்டி தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை தேவைப்படும்போதெல்லாம் பாசனத்திற்கு பயன்படுத்திக்கொள்வோம். தேக்கி வைக்கப்பட்ட நினைவுகளால் கவிதைகளும் காவியங்களும் விளைவதும் உண்டு.

‘‘ஒரு ஜோடிச்
சிறகுகள் வேண்டும் என்றேன்
உல்லாசமாக உன்னோடு
பறப்பதற்கு அல்ல
தொலைதூரம் போய்
உன்னை மறப்பதற்கு...’’

இது நான் பல ஆண்டுகளுக்கு முன் வாசித்த  கவிஞர் மு.மேத்தாவின் துன்பம் பற்றிய மறக்க முடியாத கவிதை. அலையற்றக் கடல்போல நினைவற்ற மனமாக மனதை ஒன்றுமற்று வைத்திருப்பதே தியானமாகிறது. ஒருவர் தியானத்திலிருக்கும்போதும் பல்வேறு எண்ணங்கள் மோதிக்கொண்டும் எட்டிப்பார்த்துக்கொண்டுமே இருக்கும் என்றாலும் காய வைத்த தானியங்களை கொத்தவரும் பறவைகளை விரட்டுவதுபோல்... அவற்றை விரட்டி விடும் பயிற்சிகளே. ஆன்மிக மையங்களுக்கு வருவாய் ஈட்டித் தருபவையாக இப்போது கொடிகட்டிப் பறக்கின்றன.

பற்றுக்கள் முழுதையும் அறுத்துக்கொண்டு காவி உடுத்தி சாமியாராக மாறியவர்களாலும்கூட நினைவுகளை அறுத்துக்கொள்ள முடிவதில்லை. நம் மனதின் ஆழமான பதிவுகள் இறுதி வரை நீங்குவதே இல்லை. கடந்த மே மாதம் எனக்கு ஏற்பட்ட கோரமான சாலை விபத்தின்போது மகிழுந்து தடுப்புச்சுவரில் மோதி கால் எலும்புகள் முறிந்து நான் வானே பிளக்கும்படி அலறிய அலறலை மறக்க வேண்டும் என நினைக்காத நாளில்லை. ஆனால் சிலசமயம் தூக்கத்திலும் பதறி விழிக்க வைத்துவிடுகிறது அந்நினைவின் பதிவு.

‘‘உனக்கு நீயே விளக்கு’’ எனக்கூறி புத்தர் எல்லாவற்றையும் விட்டு வெளியேறினாலும் தன் தாயையும், மனைவியையும், மகனையும் நினைக்காமலா இருந்திருப்பார். மற்றவர் நம் நினைவுகளில் எப்படி இருக்கிறார்கள் என்பதைப்போலவே நாம் பிறர் நினைவுகளில் எப்படி இருந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் எண்ணிப்பார்க்க கடமைப்பட்டுள்ளோம். ‘‘ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்’’ என்ற கவிஞர் பிருந்தா சாரதியின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் இக்கட்டுரைக்குப் பொருத்தமான அவரின் கவிதை இது.

நினைவுப்புற்று

கனவின் ஆழத்தில்
அடிக்கடி வந்து
கண்ணாமூச்சி ஆடுகிறது
ஒருநிழல் உருவம்
என்ன அது என்று
அறிந்துகொள்ள
மீண்டும் மீண்டும்
நினைவுகளில் மூழ்குகிறேன்
நினைவுப்புற்று திறந்துகொண்டு
ஈசல் கூட்டமாய் புறப்படுகின்றன
நான் மறந்துவிட்ட
என் இறந்தகாலத் தவறுகள்
பற்பல நிழல் உருவங்களாய்.

ஆழ்மனதில் பதிந்துவிட்ட ஞாபகங்களை மறக்கமுடியாது. துன்புறுவது ஒருபுறமிருக்க நினைத்திருக்க வேண்டிய எத்தனையோ விஷயங்களை மறந்துபோய் அன்றாட வாழ்வில் தவிப்பவர்களாகி விடுகிறோம். வீட்டைப் பூட்டினோமா... பூட்டை இழுத்துப் பார்த்தோமா... சாவியை எடுத்து வந்திருக்கிறோமா... கைப்பேசி கைப்பையில் தானிருக்கிறதா... பூனைக்குட்டிக்கு பால் வைத்தோமா... இப்படி வீட்டைவிட்டு கிளம்பியதுமே நூறு நினைவு பிசகல்கள் வந்துவிடுகின்றன.