செஞ்சுரி வயதில் சாதனை!
சூப்பர் சீனியர்
50 வயதைக் கடந்தாலே மூட்டுவலி, முதுகுவலி என முடங்கிவிடுபவர்களுக்கு உதாரண மனுஷி மன்கவுர். வயதில் செஞ்சுரி தொட்ட மன்கவுர், கனடா வான்குவாரில் சமீபத்தில் அமெரிக்க முதியவர்களுக்காக நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு கலக்கியிருக்கிறார்.
வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி தங்கம் வென்றதன் மூலம் பார்வையாளர்கள் அனைவரின் இதயத்தையும் கவர்ந்திருக்கிறார் கவுர். இவர் தன்னுடன் கலந்து கொண்ட 70, 80 வயதுடைய ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களை விட, 100 மீட்டர் ஓடுபாதையை கடக்க ஒன்றரை நிமிடம் மட்டுமே எடுத்துக் கொண்டு அனைவரையுமே அப்படியே ஸ்தம்பிக்க வைத்தார். தன் வயதிலுள்ள 100 வயது வீரர்கள் பிரிவில் கவுர் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
பதக்கம் வென்று நாடு திரும்பியவுடன், “நம்நாட்டில் பல பதக்கங்களை வென்றிருக்கிறேன். இது உலகப் போட்டிகளில் கலந்து கொண்டதற்கு கிடைத்த தங்கப் பதக்கம்” என மிகவும் உற்சாகமாக எல்லோரிடமும் தனது வெற்றியை பகிர்ந்து கொண்டார். தன்னுடைய 93வது வயதில் ஓட்டத்தைத் தொடங்கிய மன்கவுருக்கு அவரது 78 வயது ஓட்டப்பந்தய வீரரான மகன் குருதேவ் சிங்தான் மூல காரணமாக இருந்தவர். இவரே, “மூட்டுவலி, இதயநோய் என எந்தவிதமான பிரச்னையும் இல்லாது ஆரோக்கியமாக இருக்கும் நீ ஓடத் தொடங்கு” என்று தன் தாய்க்கு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள உத்வேகமளித்தவர். அன்று தொடங்கிய என் தாய் “உலகம் முழுவதும் நடைபெற்ற முதியோருக்கான விளையாட்டுப்போட்டிகள் மூலம் 20க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளார்” என்கிறார் குருதேவ்.
உங்களுடைய நீண்ட ஆரோக்கிய வாழ்விற்கான ரகசியம் என கேட்ட போது, “நல்ல சத்தான உணவு மற்றும் நிறைய உடற்பயிற்சிகளே என் நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் காரணம்” என்கிறார் உலக சாதனை படைத்த ஆச்சரிய மனுஷி மன்கவுர்.
தன்னுடைய 93வது வயதில் ஓட்டத்தைத் தொடங்கிய மன்கவுருக்கு அவரது 78 வயது ஓட்டப்பந்தய வீரரான மகன் குருதேவ் சிங்தான் மூல காரணமாக இருந்தவர்.
- உஷா நாராயணன்
|