மூங்கில் தோட்டம்... மூலிகை வாசம்..!
-கண்ணகி
“மூலிகைகள் நம் நாட்டின் பொக்கிஷங்கள்... இதை அறியாமல் `ஹச்’ என்று தும்மினாலோ, தலைவலி என்றாலோ மாய்ந்து போய் எதற்கெடுத்தாலும் அலோபதி மாத்திரைகளை வாங்கி விழுங்குகிறோம். ஆரம்பத்தில் நானும் அதைத்தான் செய்தேன். எனக்கு தாங்க முடியாத குதிகால் வலி வந்தது. அதற்கு வலிக்கொல்லி மாத்திரைகளும், எக்ஸ்ரே மூலம் பரிசோதித்து குதிகால் எலும்பு வளர்ந்துள்ளது, அறுவை சிகிச்சை மூலம் குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டேன்.
ஆறு மாதங்களுக்கு மேலாக மிகவும் சிரமப்பட்டு வந்த நேரத்தில், நம் மூலிகை மருத்துவத்தில் எளிய முறையில் அதற்கான தீர்வைக் கண்டு, அதை செய்தபிறகு என்ன மாயம் என் குதிகால் வலி போயே போச்... அப்போதுதான் புரிந்தது அதுநாள் வரை ஆங்கில மருத்துவத்தில் எவ்வளவு பண விரயம், கால விரயம் செய்து விட்டேன் என்பது. இதுவே மூலிகைகள் மீது எனக்கு தீராத ஆர்வத்தை ஏற்படுத்தியது.
அதைப்பற்றி நிறைய புத்தகங்கள் படித்தேன். பின்னர் நாமே வளர்க்கலாமே என தோன்றியதன் விளைவுதான் ‘மூலிகைப் பண்ணை’யின் தொடக்கம்’’ என்கிறார் சென்னை மாடம்பாக்கத்தில் மூலிகைப் பண்ணை அமைத்து பராமரித்து வரும் கண்ணகி ராஜகோபால். கண்ணுக்குத் தெரிந்தும் நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட பலவிதமான மூலிகைகள் பற்றி கூறுகிறார்...
“எனது சொந்த ஊர் நாகப்பட்டி னம் மாவட்டம் திருக்குவளை தாலுகாவில் உள்ள வாழக்கரை கிராமம். கணவர் ராஜகோபால் விமானப் படையில் பணிபுரிந்து தற்போது ரயில்வேயில் பணிபுரிகிறார். காவிரியின் கொடையாக இயற்கை எழிலுடன் இணைந்து இனிய நீரும், சுத்தமான காற்றும், பசுமையான வயல்வெளிகளும் என என் இளமைக்காலம் சிறந்து விளங்கியது இன்னும் நினைவில் நிழலாடுகிறது.
அடைமழைக்காலங்களில் வரும் உடல் உபாதைகளுக்கும், பூச்சிகள் கடி, இன்ன பிற வேதனைகளுக்கும் என் அன்னையின் கை வைத்தியமே முதல் உதவியாகவும் முடிவான தீர்வாகவும் பலநேரங்களில் இருந்தது. வயல் வரப்பு களிலும், குளக்கரை, களத்து மேடு, வீட்டுத் தாழ்வாரம், குப்பைக்குழி என கால் பட்ட இடங்களிலெல்லாம் பயன் தரும் பசுந்தளிர்கள் நிரம்பி வழிந்த வளங்கள், பாரம்பரியமாக பயன் தந்து வந்த மூலிகைகள் போன்ற முத்தான செய்திகளை அடுத்த தலைமுறைகள் அறியாமல் செய்துவிட்டோம்.
பள்ளிக்கூட கால்பந்து விளையாட்டில் அவ்வப்போது கால்களில் அடிபட்டு வீக்கம், வலி என்று வரும் என் மகன்களின் துயரைப் போக்க வீட்டில் உள்ள புளி உப்புடன் மூலிகை துணையுடன் மருத்துவம் செய்வேன். காலையில் வலி மறைந்து மீண்டும் விளையாடும் உற்சாகத்துடன் அவர்கள் பள்ளி செல்வதைக் கண்டு பரவசம் கொள்வேன்.
எனக்கும் என் குழந்தைகளுக்கும் பயன் தந்த மூலிகைகள் மற்றும் நான் தேடித் தெரிந்து கொண்டிருக்கும் மூலிகைகள் அனைத்தையும் வளர்த்து ஆர்வம் உள்ளவர்கள் வாங்கிப் பயன் பெறக்கூடிய வகையில் தோட்டம் அமைப்பதை இலக்காகக் கொண்டு இப்போது நான் ஆரம்பகட்ட நிலையில் இருக்கிறேன்.
நம்ம வீட்டைச்சுற்றி ஏராளமான மூலிகைகள் கிடக்கின்றன. பொடுதலை, உத்தாமணி (வேலிப்பருத்தி), பழம்பாசி, நெருஞ்சில், தொட்டாச்சிணுங்கி, சிறுகண்பீழை (கற்கரசி), துத்தி, அருவதா (சதாப்பூ), பேய்விரட்டி, நாயுருவி, சங்குப்பூ (காக்கரட்டான்), மூக்கிரட்டை, ஓரிதழ் தாமரை, வெள்ளை கரிசாலை (கையாந்தகரை), மஞ்சள் கரிசாலை, அம்மான் பச்சரிசி, கிணற்றடிப்பூண்டு, கொல்லுக்காய்வேளை (கொலுஞ்சி), நாய்வேளை (நாய்க்கடுகு), சீந்தில், நீர்பிரம்மி, வெட்டிவேர், சீமை அத்தி இவை எல்லாவற்றையும் தேடிக்கண்டுபிடித்து கொண்டு வந்து பண்ணை அமைத்துள்ளேன்” என்று சொல்லும் கண்ணகி, இவற்றின் பயன்களையும் செய்யும் பக்குவத்தையும் விளக்கத் தொடங்கினார்...
பொடுதலை வெகுநாட்களாக எந்த ஒரு மருந்துக்கும் ஆறாத புண்ணை பொடுதலை ஆற்றிவிடும். பொடுதலை இலையை அம்மியில் வைத்து சிறு துண்டு மஞ்சளும் சேர்த்து மைபோல் அரைத்து புண் மீது கட்டினால் இரண்டு நாட்களில் புண் ஆறிவிடும். இடுப்பு பிடிப்புக்கும் சிறந்த மருந்து. பொடுதலை இலையை கைப்பிடி அளவு எடுத்து வெள்ளைப்பூண்டு 7 பல், 15 மிளகு, பாக்கு அளவு சுக்கு சேர்த்து அரைத்து வாயில் போட்டு வெறும் வயிற்றில் வெந்நீரில் குடிக்க வேண்டும். 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குணமாகிவிடும்.
உத்தாமணி (வேலிப்பருத்தி)
உத்தாமணி இலையை வதக்கி துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க கீழ்வாதம், முடக்குவாதம், இடுப்பு வலி சரியாகும். இலைச்சாற்றில் 15 மிளகை ஊறவைத்து வெயிலில் உலர்த்தி இதுபோல் 7 முறை ஊறவைத்து காயவைத்து பொடி செய்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் செரியாமை, வாந்தி, மாந்தம், காய்ச்சல் குணமாகும். பேய்விரட்டி இலையை கொதிக்க வைத்து ஆவிபிடித்து வந்தால் விடாத வாதஜுரம் தீரும். ஒரு பிடி நெல்பொறியில் 2 இலைப்போட்டு நீரில் காய்ச்சி மணிக்கு ஒருதடவை கொடுத்துவர காலரா தீரும். பேய்விரட்டியின் இலையை அகல்விளக்கில் திரிக்குப் பதிலாக போட்டு தீபம் ஏற்றலாம். இந்த தீபம் ஏற்றி வந்தால் வீட்டில் விஷப்பூச்சிகள், கொசுக்கள் அண்டாது.
பழம்பாசி
இதன் இலை சதை நரம்புகளை சுருங்கச் செய்யும். உடலின் எடையைக் குறைக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். நரம்பு தளர்ச்சி, ஆஸ்துமா, வலிப்பு நோய்களை சரி செய்யும். இதன் இலையை சிறிது பச்சரிசி சேர்த்து அரைத்துக் குழப்பி களிபோல் கிளறி, கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடைந்துவிடும்.
இன்னும் என்னிடம் உள்ள மூலிகைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். அவை உங்கள் வீட்டைச் சுற்றியும் கிடக்கின்றன. நமது அடுத்த இலக்கு மூலிகை மருத்துவம் மற்றும் பாட்டி வைத்தியம் குறித்த விளக்க தேடலாக இருக்கட்டும். நாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். நம்நாட்டு எளிய மூலிகைகள் நம்மோடு நம் சுற்றத்தாருக்கும் அடுத்த தலைமுறைக்கும் பயன் தரும் வகையில் நம் அனுபவத்தை பகிர்ந்து கொள்வோம்” என்கிறார் கண்ணகி.
பள்ளிக்கூட கால்பந்து விளையாட்டில் அவ்வப்போது கால்களில் அடிபட்டு வீக்கம், வலி என்று வரும் என் மகன்களின் துயரைப் போக்க வீட்டில் உள்ள புளி உப்புடன் மூலிகை துணையுடன் மருத்துவம் செய்வேன். காலையில் வலி மறைந்து மீண்டும் விளையாடும் உற்சாகத்துடன் அவர்கள் பள்ளி செல்வதைக் கண்டு பரவசம் கொள்வேன்.
- தோ.திருத்துவராஜ் படங்கள்: ஆர்.கோபால்
|