போதையும் பாதையும்
டீன் ஏஜ் குழந்தைகளின் அம்மாக்களுக்கு...
- கிர்த்திகா தரன்
நிஜ சம்பவம் ஒன்று... மெரினாவில் ஓர் இளைஞன், காட்டன் பேன்ட், இன் செய்த நீல நிற சட்டை, நல்ல தோற்றம், முகத்தில் வசீகரம், கண்ணில் ஒரு துறுதுறுப்பு, அலை அலையான கேசம்... கடற் காற்று முகத்தில் அடிக்க கடலை ரசித்தபடியே நடந்தான். நடை போட்டபடி வெகுதூரம் வந்து இருந்தான். கொஞ்சம் தனிமை... தூரத்தில் ஒரு குடிசை... நிறைய நபர்கள் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருந்தனர். ஆர்வக்கோளாறு வயது. இளமை தந்த துணிச்சலும் ஆர்வமுமாக அந்த குடிசையில் என்ன நடக்கிறது என்று பார்க்க நடையை எட்டிப் போட்டு அவ்விடத்தை அடைந்தான்.
வயசான ஒருவர் “தம்பி உள்ள வாப்பா... வேணுமா” என்று கேட்க. “இல்லங்க பழக்கம் இல்ல”ன்னு வெளியே போக முயன்றான். “அட, என்ன தம்பி நீங்க... உக்காருங்க... இத எடுத்துக்குங்க... இதெல்லாம் பார்த்து அனுபவிக்க வேண்டாமா, இந்த வயசுல செய்ய வேண்டியதை செய்துடனும் தம்பி” என்று சொல்ல... ஆர்வமிகுதியில் குறுகுறுப்பில், நம்மை மீறி என்ன ஆகிவிடும் என்ற மிதப்பில் அவர் கொடுத்த அதை... ஆம் ஹெராயின் என்ற போதை மருந்தை வாழ்க்கையில் முதன் முறையாக எடுத்துக்கொண்டான்... பிறகு அவன் வாழ்க்கை அவன் கையில் இல்லை. ஒரு முறை விளையாட்டாக எடுத்துக்கொண்டாலும், ஹெராயின் என்ற போதை மருந்து பிடியில் இருந்து விடுபடுவது எளிதில்லை. அன்றோடு அவன் வாழ்க்கையின் அழிவு கட்டம் அவனறியாமலே ஆரம்பம் ஆனது.
இளைஞன் வாழ்க்கையின் முதல் படியில் அடியெடுத்து வைத்தவன்... திரும்ப அந்த உடையிலும் ,கண்ணியமான தோற்றத்திலும் அவனை பார்க்க முடியவில்லை. இளவயதின் ஒரு சிறு ஆர்வம்தான்... வேறு தவறே இல்லை. ஆனால், வாழ்க்கை நசுக்கப்பட்டது. இதுபோன்று நடக்கும் என்று நம் போன்ற தாய்மார்கள் அறிவதும் அவசியம் ஆகிறது. நம்மால் போய் பார்த்தோ, பேசியோ அனுபவிக்க முடியாத ஒருவித நிழல் நிஜங்கள் இருக்கின்றன. அதற்கு வரலாறும் உள்ளது. அது இந்தியாவை பொறுத்தவரை பெண்களுக்கான உலகமாக இல்லை. விதிவிலக்கை தவிர.
எனவே குடும்ப ஆணிவேர்களின் அஸ்திவாரம் இன்னும் இங்கு ஆழமாக வேர் ஊன்றி இருக்கிறது. எந்த விஷயத்தில் சம உரிமை பேசினாலும் என் தனிப்பட்ட கருத்து போதை போன்ற மோசமான விஷயங்களில் தேவை இல்லை என்பதே. ஏன் என்றால் பெண்கள் முன்னேற்றத்தின் மிகப்பெரிய எதிரி அவை. ஆனால், கலாசார மாறுதல் என்ற பெயரில் பெண்களுக்கும் இந்த மயக்கத்தை காட்டுவது ஆரம்பித்து இருக்கிறது. மிக வேகமாக பரவியும் வருகிறது.
ஆண் உடல் வேறு, பெண் உடல் வேறு. ஒரு வாரிசை சுமக்கும் இயற்கை விதி உள்ளது. அது பல பொறுப்புகளை கொடுத்து நம்மை பல தவறான வழிகளில் செல்ல விடுவதில்லை. தாய்மை இந்த விதத்தில் ஒரு வரமே. தாய்மையை வைத்து முன்னேறாமல் போவது நம் பலவீனமாகவும் இருக்கிறது. போதை என்றால் என்ன? எல்லாரும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது இதன் பிடியில் ஆட்பட்டிருப்பர். அன்பு, காதல், நேசம், பாசம் என்பது கூட சிறு போதைதான்.
சிலருக்கு காபி இல்லாவிடில் முடியாது... அங்கு கஃபைன் என்ற மூலப்பொருள் போதை பொருளாகிறது எதுதான் போதைப் பொருள்? நம் அடுப்பங்கரையிலேயே உள்ளன சில போதைப் பொருட்கள். உலகில் மிக அதிகளவில் உள்ள போதை சர்க்கரையும் காபியும். சர்க்கரையின் போதை குழந்தைகளை கூட விட்டு வைப்பதில்லை. இந்த போதை வஸ்துதான் மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரி. உடலை ஆண், பெண் வித்தி யாசம் இல்லாமல் உடல் உறுப்புகளை செயல் இழக்க வைக்கும்.
இன்றைக்கு எந்த மருத்துவமனை சென்றாலும் அங்கு உள்ளே இருக்கும் நோயாளிகளின் பின்புலங்களை கவனமாக ஆராய்ந்தால் சர்க்கரையின் ஆதிக்கம் அதிகமாகி நோயாளி ஆனவர்கள்தான் பெரும்பாலும் இருப்பார்கள். சர்க்கரை ஏன் போதை பொருளானது? பனை வெல்லமும் சுக்கு காபியும் இருந்தவரை நமக்கு நீரிழிவு வரவில்லை. சர்க்கரை என்பது வெறும் ஜீனி மட்டுமில்லை, பல்வேறு பழங்கள், அரிசி எல்லாவற்றிலும் இருக்கிறது.
அதன் சுவைக்கு நாம் அடிமையாகியே பல உள்ளுறுப்புகளை இழக்கிறோம். கிட்னி, இதயம், குடல் பிரச்னைகள், பற்கள் எல்லாம் சரியாக செயல்படாமல் போவதற்கு முக்கிய எதிரி சர்க்கரை. அந்த சுவையின் அடிமையில் இருந்து மீள முடியாமல் இருப்பது நிஜம். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை விழிப்புணர்வு பெருகி வருகிறது. பாரம்பரியம் நோக்கி படை எடுக்க ஆரம்பித்து உள்ளனர். எளிதான உதாரணம் சாதாரண வாழ்வில் சர்க்கரை, காபி போதை. அதைத்தவிர?
போதை... நிஜமான அர்த்தம் ஒரு தனிமம் அல்லது பொருள் உடலுக்குள் சென்று மனதையும் மூளையையும் மாற்றுவது அல்லது அதனை கட்டுக்குள் இல்லாமல் செய்வதற்கு பெயரே போதை வஸ்து. இது ஒரு வார்த்தை... எளிதாக படித்துவிடலாம்... இதற்குப் பின்னால் எத்தனை கதைகள், கொலைகள், போர்கள். உலகிலேயே அதிக லாபம் தரும் வியாபாரமாக நடந்தது, நடந்து கொண்டு இருக்கிறது. சில நாடுகளின் மக்கள் இன்றும் அச்சத்தில் வாழ்கிறார்கள். சில நாடுகளின் மக்களோ கவலையின்றி உட்கொள்கிறார்கள். இரண்டுக்கும் போதைப் பொருட்களின் பின் இருக்கும் அரசியலே காரணம்.
வரலாறு குழந்தைகள் படிக்க விரும்புவதில்லை. தேதி வாரியாக மனப்பாடம் செய்ய வைத்து சுவாரஸ்யங்களை போக்கி மதிப்பெண்கள் எடுக்க வைக்கும் பாடமாக ஆனதால், வரலாற்றின் வசீகரம் போய்விட்டது. இன்றும் நமக்கு வரலாறு என்ற வார்த்தையை கேட்டால் கொட்டாவி வருவது சிறு வயது பழக்கம். வரலாற்றின் சுவாரஸ்ய ஏடுகள் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஒவ்வொரு ஏடும் நமக்குச் சொல்லும் கதைகள் ஒன்று என்றால் சொல்லப்படாத கதைகள் அதற்குப் பின்னால் எழுதப்பட்டுள்ளன.
முக்கியமாக அரசாங்கம் சொல்லுவதே வரலாறாக பதியப்படுகிறது. ஆனால், கால மாற்றத்தால் மக்களும் வரலாற்றை இணையம் மூலமாக பதிய ஆரம்பித்து உள்ளனர். இப்போது போதை மருந்தின் வரலாறுடன் ஆரம்பிப்போம். போதை வஸ்துக்கள் மிகப் புதிது, கலாசாரத்தில் போதை மருந்து கிடையாது என்று சில கலாசாரக் காவலர்கள் கூறலாம். ஆனால், என்று மனித கலாசாரம் பிறந்ததோ அப்பவே போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.
சுமேரியர் பீர் செய்யும் இடத்தை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். எகிப்து, ஈரான், இந்தியா, அமெரிக்கா என்று உலகம் முழுவதிலும் ஏதோ ஒரு விதமான போதைப் பொருட்கள் உட்கொள்ளப்பட்டிருப்பது ஆராய்ச்சிகளில் நிரூபணம் ஆகி இருக்கிறது. முதலில் நம்ம ஊர் கசகசா... அதாவது, பாப்பி சீட்ஸ் சுமேரியாவில் பயிரிடப்பட்டிருக்கிறது. ஓபியம் என்னும் போதை மருந்து பாப்பி விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எகிப்தியர் பாப்பி காயை கீறி அதில் வடியும் பசையை சேகரித்து போதை பொருள் தயாரித்து உள்ளனர்.
மெக்சிகோவில் போதைக்கு பேயாட் என்ற முள்செடியை கி.மு. 3780 வருடங்களுக்கு முன் பயன்படுத்தி உள்ளனர். அங்கு முக்கிய ஆன்மிக திருவிழாக்களில் அந்த போதை மருந்தை சாப்பிட்டும், குடித்தும் உள்ளனர். அதில் இருந்து ஆன்மிக இன்பத்தை அடைவதாக நம்பிக்கை கொண்டு இருந்து இருக்கின்றனர். பல்வேறு ஆன்மிக அனுபவங்கள் என்று சொல்லப்படும் விஷயங்கள், கடவுளைக் கண்டதாக அறிந்த செயல்கள், பலவற்றில் போதைப் பொருட்களின் தொடர்பும் ரகசியமாக இருந்திருக்கிறது.
மதமே போதையாகி போன பல விஷயங்களும் உள்ளன. சிலர் எதையாவது பிடித்துக்கொள்ள வேண்டும் என்று கோயில்கள் செல்வது, பூஜைகள் செய்வது, மந்திரம் செபிப்பது என்று ஆரம்பித்து அது சம நிலை இல்லாமல் போதையாகி அதையே பழக்கம் ஆக்கி கொண்டு இருப்பார்கள். நல்ல செயல்களும் போதையாகி போவது உண்டு. எல்லாவற்றிலும் மிக மோசமான போதை புகழ் போதை.
அடுத்து கஞ்சா... அதைப் பற்றிய கதை மிகப் பெரிய கதை. அதன் இலைகள் விதைக்கப்படாத நாடுகளே இல்லை எனும் அளவுக்கு உலகெங்கும் புகழ் பெற்று இருந்தது. முக்கியமாக இந்தியாவின் கஞ்சா அதன் கலாசாரத்தோடு ஆழ பின்னப்பட்டு இருக்கிறது. பிறகு கோகோ இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் கோகெயின் எனும் போதைப் பொருள். இன்றும் சில நாடுகளில் சக்திக்காக கோகோ இலைகளை மெல்லும் வழக்கம் உள்ளது.
முதலில் போதை மருந்துகள் பற்றிய அறிமுகம்... கஞ்சா எனப்படும் மருந்து மறியுவானா, பாட் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அதன் இலைகளை பதப்படுத்தி புகைக்கிறார்கள். அடுத்து நம்ம புகையிலை... உலகிலேயே மிக அதிக உயிர்களை காவு வாங்குவது சிகரெட் பழக்கம்தான். வேறெந்த போதையை விடவும் புகையிலை காவு வாங்கும் உயிர்கள் அதிகம். அடுத்து ஆல்கஹால்... ஒயின், பீர், வோட்கா, ரம் என்று பலவிதங்களில் ஆல்கஹால் உட்கொள்ளப்படுகிறது. அடுத்து ஓபியம்... இது கசகசா மூலம் பெறப்படுகிறது..
கோகைன்... கோகோ இலைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. அதைத் தவிர பழங்காலத்தில் பலவித மூலிகை இலைகளில் போதை ரசாயனம் இருந்தது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அவையும் போதைப் பொருட்களாக உபயோகப்பட்டுள்ளன. அதைத் தவிர மயக்க மருந்து கண்டுபிடிப்பின் விளைவாகவும், வலி நிவாரணி ஊசி மருந்துகளின் விளைவாகவும் உருவான பல போதை மருந்துகள் உள்ளன. மருத்துவமனைகளில் சத்தம் இல்லாமல் போதைக்கு ஆளானவர்களை பார்த்து இருக்கிறேன்.
எனக்கு தெரிந்து ஒரு மருத்துவர்... கேட்டமின் இன்ஜக்ஷன் போட்டுக்கொண்டால் மட்டுமே அவரால் நிலைத்து நிற்க முடியும். அவர் பெண் மருத்துவர். விதிவிலக்காக இப்படியும் நல்ல மருந்துகள் சில சைட் எஃபெக்ட்ஸ் போல விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. இவை ஆய்வு கூடத்தில் தயாரிக்கப் படுபவை. அதிலும் பல வகைகள். இப்பொழுது பெயின்ட் கறை நீக்கும் திரவங்கள், ஒயிட்னர் கூட பள்ளி மாணவர்களால் போதை மருந்தாக உட்கொள்ளப்படுகிறது. இனி இந்த உலகிற்குள் ஒரு பயணம் செய்து, நம் குழந்தைகளைக் காப்போம் வாருங்கள்...
வரலாற்றின் சுவாரஸ்ய ஏடுகள் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஒவ்வொரு ஏடும் நமக்குச் சொல்லும் கதைகள் ஒன்று என்றால் சொல்லப்படாத கதைகள் அதற்குப் பின்னால் எழுதப்பட்டுள்ளன. முக்கியமாக அரசாங்கம் சொல்லுவதே வரலாறாக பதியப்படுகிறது.
உலகிலேயே மிக அதிக உயிர்களை காவு வாங்குவது சிகரெட் பழக்கம்தான். வேறெந்த போதையை விடவும் புகையிலை காவு வாங்கும் உயிர்கள் அதிகம்.
(அலசுவோம் ஆழமாக!)
|