ஸ்டார் தோழி
-சாரா பானு
* நான்... தன்னம்பிக்கை ஒன்றே துணையாக வாழ்க்கையை மகிழ்ச்சியாக கடக்கும் சாதாரண பெண் நான். முழுப்பெயர் சாரா ரம்ஜியா பானு. படிக்கும் போது பரீட்சை நேரத்தில் கையெழுத்து போடும் போது இவ்வளவு பெரிய பெயரா என கேட்காத ஆள் இல்லை. ஆகையால், சுருக்கமாக சாரா என்று அழைக்கப்படுகிறேன். என் தாயின் அரவணைப்பு எனக்கு மட்டுமல்ல... என் மகனுக்கும் இன்று வரை தொடர்கிறது. நட்பில் அதிக கவனம் செலுத்துவேன். எதிர்பார்ப்பு இல்லாமல் பழகும் குணம் இருப்பதாலே நட்பின் எண்ணிக்கை அதிகம்.
* படிப்பு நர்ஸிங் படித்து சேவை பண்ண ஆசை. பத்தாம் வகுப்பு படித்ததும் கணக்கியல் பட்டயப் படிப்பில் விருப்பமில்லாமல் தான் பெற்றோரால் சேர்க்கப்பட்டேன். எதையும் நேசிக்கும் பழக்கத்தால் பழகிப்போனது இயல்பு வாழ்க்கை!
* உற்சாகம் இன்றும் நானும் என் மகனும் கல்யாண வீடு சென்றால், அங்கு கச்சேரியில் ‘டங்கா மாரி ஊதாரி’ பாடல் கேட்டு தானாகவே டான்ஸ் ஆடும் எங்கள் கால்கள்!
* பொழுதுபோக்கு சிறுவயதில் தட்டாங்கல்லும் பாண்டியும் விளையாடினோம். இன்று பொழுதுபோக்கியாக முகநூலும் வாட்ஸ்அப்பும் நேரத்தை தின்று கொண்டிருக்கிறது.
* ஆளுமைகள் எனக்கு அன்னை தெரசா மிகமிகப் பிடிக்கும். அன்பால் சேவைகள் செய்யும் எண்ணம் எனக்குள் வர கடவுளை அடிக்கடி வேண்டுவேன். அப்துல் கலாம், இளையராஜா - இவர்களை ரொம்பப் பிடிக்கும். அப்துல்கலாம் அவர்கள் மாணவர்களுக்கு கொடுத்த ஊக்கமே என்னை அவரை நேசிக்க வைத்தது.
* புத்தகம் எனக்கு படிக்கப் பிடிக்கும் நிறையவே. ஆனால், சிறுவயதில் இருந்தே பள்ளிப் புத்தகம் தவிர்த்து வேறு புத்தகம் படிக்க வீட்டில் அனுமதி இல்லை. இருப்பினும் பிரயாணத்தின் போது படித்து விடுவேன்.
* ஊரும் பணியும் சொந்த ஊர் விருதுநகர். என் கணவர் விட்டுச் சென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும், பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்... எதிர்கொள்ளலாம் என்றே வாழ்கிறேன். கணக்கராக தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.
* காதல் 10வது படிக்கும் போதிருந்தே உறவினர் ஒருவரால் காதலிக்கப்பட்டேன். என் மனதுக்குள் காதல் இருந்தாலும், பெற்றோர், படிப்பு எனும் போது காதல் மனதுக்குள்ளேயே புதைந்து போனது.
* இசை இளையராஜா அவர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்? சந்தோஷமோ சோகமோ அதற்கு மருந்து இளையராஜாவின் இசைதான்!
|