ஒரு நடிகை ஆசிரியராகிறார்!



புதிய அவதாரம்

நடிப்பாற்றல் மிக்க அழகுப்பதுமை, ஆஸ்கார் நாயகி ஏஞ்சலினா ஜோலியின் அடுத்த புது அவதாரம் என்ன தெரியுமா? பேராசிரியை. இதென்ன சம்பந்தமே இல்லாத நியூ என்ட்ரி...

பிரிட்டனில் உள்ள பிரபல லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பல்கலைக்கழகம், முதுகலை, பால்நிலை மற்றும் மனித உரிமைகள் பாடத்திற்கு வருகைப் பேராசிரியராக (Visiting Professor) ஏஞ்சலினா ஜோலியை நியமித்துள்ளது. இங்கு வருகைதரும் நான்கு வருகைப் பேராசிரியர்களுள் ஏஞ்சலினாவும் ஒருவர். ஏஞ்சலினா, வில்லியம் ஹேக்குடன் இணைந்து 2012ல் பாலியல் வன்முறைக்கு எதிரான முனைப்பை உருவாக்கிய காரணத்திற்காகவே மனித உரிமைகள் மற்றும் பாலியல் துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தன்னுடைய இந்த புது பொறுப்பை கர்வத்துடனே ஏற்றுக் கொண்டுள்ளதாகச் சொல்கிறார் ஏஞ்சலினா. “என்னை இந்த மாஸ்டர் புரோகிராமில் இணைத்துள்ளது மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. மற்ற கல்வி நிறுவனங்களும் இதை உதாரணமாக எடுத்துக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்று விரும்பு கிறேன். இதன்மூலம் பெண்களுக்கெதிரான குற்றங்கள், பாலியல் வன்முறைகள் போன்றவற்றில் பெண்களின் உரிமைகள் பற்றிய விவாதத்தை இன்னும் விரிவாக்க முடியும் என நம்புகிறேன்’’ என்கிறார்.

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக அகதிகள் முகாம்களிலும் எண்ணற்ற சமூகப் பணிகளுடனும் இணைந்த தன் நடிப்பு வாழ்வை ஏஞ்சலினா தொடர்வது உலகறிந்த உண்மை. இதற்காக ஐ.நாவுடன் இணைந்து செயலாற்றும் பணிகளுக்கு ஏஞ்சலினாவிற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைப்பது என்னவோ உண்மை.

அகதிகள் மறுவாழ்வு, மகளிர் மேம்பாடு மற்றும் பாலியல் வன்முறை போன்ற பணிகளுக்கு ஐ.நாவின் சிறப்புத் தூதராக ஏஞ்சலினா செயலாற்றி வருகிறார். ஜோலியின் வகுப்பு எப்படி மாற்றத்தை உருவாக்கப் போகிறது என பார்ப்பதற்காக உலகமே காத்திருக்கிறது. “ஏஞ்சலினா என் பேராசிரியராக இருந்தால் நான் காலேஜை ஒரு நாளும் ‘பங்க்’ செய்ய மாட்டேன் மச்சி” என்கிறது இளைஞர் பட்டாளம்.

- உஷா