இல்லத்தரசிகளின் (ஊதியமில்லா) வீட்டு வேலைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும்



புதியதோர் விதி செய்வோம்!

-ரஞ்சனி நாராயணன்

‘எல்லோரும் வேலைக்குப் போகும் பெண்களைப் பற்றியே பேசுகிறீர்களே, நாங்கள் செய்வதெல்லாம் கணக்கில் வராதா? ஒருநாள் அலுவலகம் செல்லாமல் வீட்டு வேலைகளைச் செய்து பாருங்கள். அப்பப்பா! எத்தனை வேலைகள்! சமையல் செய்வது அவ்வளவு எளிதான காரியமா?

ஒவ்வொரு நாளும் என்ன செய்வது என்று மண்டையை குடைந்து கொள்வதிலிருந்து, காய்கறிகள் வாங்கி வந்து, சாமான்கள் வாங்கி வந்து அரைக்க வேண்டியவற்றை அரைத்து, பொருட்கள் கெடாமல் பாதுகாத்து... பட்டியல் இட்டு மாளாது. கூடவே குழந்தைகளை கவனித்து, வீட்டுப் பெரியவர்களை பார்த்துக்கொண்டு வரும் விருந்தினர்களை உபசரித்து... இவையெல்லாம் அலுவலகம் செல்லும் பெண்கள் செய்யவில்லையா என்று கேட்காதீர்கள்.

செய்கிறார்கள். ஆனால், நாங்கள் இருபத்து நான்கு மணி நேரம், வாரத்தில் ஏழு நாட்கள், வருடத்தில் 365 நாட்கள் செய்யும் வேலைகளுக்கு எங்களுக்கு யார் ஊதியம் கொடுக்கிறார்கள்? ஒரு அங்கீகாரம் இல்லை..! ஏன், ஒருநாள் விடுமுறை கூட கிடையாது. கணவருக்கும், குழந்தைகளுக்கும் விடுமுறை என்றால் எங்களுக்கு அன்று கூடுதல் வேலை! அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பணி ஓய்வு உண்டு. ஏன் தாங்களாகவே முன்வந்து முன்னதாகவே கூட பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறலாம். ஆனால், எங்களுக்கு?’

இப்படிக் கேட்கும் இல்லத்தரசிகளுக்காக குரல் கொடுக்கிறார் திருமதி மிலிண்டா கேட்ஸ். யாரிவர்? மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சொந்தக்காரர் திரு பில் கேட்ஸின் மனைவி! அத்தனை பெரிய செல்வச் செழிப்புள்ளவர் இல்லத்தரசிகளுக்காக குரல் கொடுக்கிறாரா என்று வியப்பாக இருக்கிறது அல்லவா? இவர் பேசினால் எல்லோரும் கேட்பார்கள் என்பதும் உண்மை. என்ன நடந்தது? இவர் இப்படிப் பேச என்ன காரணம்?

ஒவ்வொரு நாளும் சமையல் அறையிலிருந்து இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு, எல்லாவற்றையும் சுத்தம் செய்து விட்டு கடைசியாக வெளிவரும் ஆள் தானே என்பதை கண்ட மெலிண்டா கேட்ஸ் எல்லா இல்லத்தரசிகளையும் போல சும்மா இருக்கவில்லை. ஒரு எழுதப்படா விதியை தம் இல்லத்தில் நடைமுறைக்குக் கொண்டுவந்தார். ‘எல்லோரும் சாப்பிட்டு விட்டு கையைத் துடைத்துக்கொண்டு போனால்? நான் ஒருத்தி தனியே எல்லாவற்றையும் செய்து முடிக்க வேண்டுமா? அம்மா சமையல் அறை வேலைகளை முடித்துக்கொண்டு வெளியே வரும் வரை யாரும் சமையல் அறையை விட்டு வெளியே செல்லக் கூடாது!’ என்று. 

இந்த விதிமுறையை அவரது கணவரோ, அவரது மூன்று குழந்தைகளோ வரவேற்கவில்லை. ‘ஆனால், அந்த மாற்றம் வந்த நாளை இவர்கள் மறக்கவே இல்லை!’ என்கிறார் மெலிண்டா சிரித்துக்கொண்டே. ‘பெண்கள் ஊதியம் இல்லாமல் செய்யும் வீட்டுவேலைகளின் நேரத்தையும், ஆண்கள் இப்படிச் செய்யும் வேலைகளின் நேரத்தையும் ஒப்பிடும்போது மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது’ என்கிறார் இவர். ‘வளர்ந்த நாடுகளில் இந்த இடைவெளி 90 நிமிடங்கள் என்றால் வளர்ந்து வரும் நாடுகளில் 5 மணி நேரமாக இருக்கிறது.

அதாவது, பெண்கள் ஊதியம் இல்லாமல், ஆண்களின் வேலை நேரத்தைவிடக் கூடுதலாக 5 மணி நேரம் வேலை செய்கிறார்கள். இது போன்ற ஊதியம் இல்லாத வேலைகள் பெண்களின் செயல்வளங்களை முடக்குகிறது. இதைப்பற்றி நாம் இப்போது பேசியே ஆகவேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னையின் ஆழம் புரியும்!’ மெலிண்டா மேலும் சொல்லுகிறார், ‘இந்த வேலைகளை வீட்டில் உள்ளவர்கள் சரிசமமாக பகிர்ந்து கொள்ளவில்லை என்றால், இந்த வேலைகளைச் செய்வதில் சமநிலை வேண்டும் என்பதை புரிந்து கொள்ளவில்லை என்றால் பெண்கள் தங்கள் செயல் திறனை பயன்படுத்த முடியவில்லை என்றால் நாம் எதிர்பார்க்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP- Gross Domestic Productivity) லாபம் அடைய முடியாது’.

‘வளர்ந்து வரும் நாடுகளில் பெண்கள் கேட்பது ‘எனக்கு இன்னும் நிறைய நேரம் வேண்டும்’ என்பது தான். ‘வீட்டுவேலை செய்து முடிக்க இருபத்து நான்கு மணி நேரம் போதவில்லை’ என்பது உலகத்தில் இருக்கும் எல்லா இல்லத்தரசிகளும் சொல்லும் வார்த்தை தான் போலிருக்கிறது. தினம் தினம் இவர்கள் செய்யும் ஊதியமில்லா வேலைகளின் நேரமும் அதிகமாகிக் கொண்டே போவதுடன், இதற்கான அங்கீகாரமும் கிடைப்பதில்லை. இது ஒரு மிகப்பெரிய பிரச்னை என்பதுடன் சமூகத்தின் மீதும், பொருளாதாரத்தின் மீதும் மிகப்பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தும். எத்தனை உழைப்புத் திறன் வீணாகிறது!’

‘மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு என்று கோடிக்கணக்கில் பணம் செலவழித்துவிட்டு, இல்லத்தரசிகள் வீட்டிற்குள் செய்யும் பணிகளை பணிகள் என்று சொல்லாமலும், அதற்கான அங்கீகாரமும் கொடுக்காமல் இருப்பதும் நாம் 2016ம் ஆண்டில் இருக்கிறோமா என்று சந்தேகமாக இருக்கிறது!’

ஒவ்வொரு வருடமும் கேட்ஸ் தம்பதி தங்களது இணையதளத்தில் தங்களை பாதிக்கும் விஷயங்கள் குறித்து கடிதம் எழுதுகிறார்கள். 2016ம் வருடம் திரு பில் எரிபொருள் இல்லாத உலகத்தைப் பற்றியும், திருமதி கேட்ஸ் பெண்களின் நேரம் எப்படி சமையலறையிலேயே கழிகிறது என்பதைப் பற்றியும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள்.

திருமதி மெலிண்டா தனது கடிதத்தை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு விளம்பரத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதில் ஒரு இல்லத்தரசி கூறுகிறார்: ‘எனது தேவைகளை கடைசியில் நிறைவேற்றிக் கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்’ என்று. திருமதி கேட்ஸ் சொல்லுகிறார் 50, 60 களில் இது போன்ற விளம்பரங்கள் வரும். இப்போது அவற்றைப் பார்க்க சிரிப்புத்தான் வருகிறது. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எங்கள் வகுப்புத் தோழர்கள் தங்கள் அம்மாக்கள் வீட்டிலேயே அதாவது, வெளியே போய் வேலை செய்யாமல் வீட்டிலேயே இருப்பவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள்.

நான் வளர்ந்த பிறகுதான் இது எத்தனை பெரிய பொய் என்று தெரிந்தது. அவர்கள் வீட்டில் சும்மா இருப்பவர்கள் இல்லை; வெளியில் ஒரு பெண் செய்யும் வேலை நேரத்தைவிட அதிக நேரம் வீட்டில் உழைத்துக் கொண்டு இருப்பவர்கள் என்று புரிந்தது’. ‘இவர்களது சமையலறை ஒரு முக்கோண வடிவில் இருக்கும். ஒரு மூலையில் அடுப்பு. ஒரு மூலையில் குளிர்சாதனப் பெட்டி; இன்னொரு மூலையில் பாத்திரங்களைக் கழுவும் தொட்டி. இந்த முக்கோண வடிவத்தின் மூன்று மூலைகளுக்கும் நடந்து நடந்தே இவர்களது சக்தி வீணாகும்.

உதாரணத்திற்கு ஒரு பெண் இதைபோன்ற ஒரு சமையலறையில் ஒரு கேக் செய்கிறாள் என்றால் அவள் 281 அடிகள் நடக்க வேண்டும். ஆனால், புதிதாக மாற்றி வடிவமைக்கப்பட்ட சமையலறையில் அதே கேக் செய்ய அவள் 41 அடிகள் மட்டுமே நடக்க வேண்டியிருக்கும். ஒரு கேக் செய்வதிலேயே பெண்களின் திறமை 85 சதவிகிதம் மேம்படுத்தப்படும் என்கிறது இந்த உதாரணம்’.

பெண்கள் மட்டுமே சமையலறையில் பாடுபட வேண்டும் என்கிற இப்போதுள்ள நடைமுறை மாறினால் ஒழிய பெண்கள் தங்கள் சக்தியை ஆயிரக்கணக்கான மணித்துளிகளை வீட்டு வேலைகளில் மட்டுமே செலவழித்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் இந்த சமூகம் வீட்டு வேலை செய்வதை பெண்களின் கடமையாகவே பார்க்கிறது. ஆண்களை விட அதிக நேரம் பெண்கள் செய்யும் இந்த வேலைக்கு சம்பளம் எதுவும் கொடுக்கப்படுவதில்லை என்பது இந்தப் பிரச்னையின் இன்னொரு முகம். பெண்கள் ஆண்களை விட அதிக நேரம் இந்தக் கூலி இல்லாத வேலைகளைச் செய்வது எல்லா நாடுகளிலும் நடைபெற்று வருகிறது.

இதன் விளைவாக  பெண்களின் வேலைத்திறன் களவாடப்படுகிறது. ஒருநாளைக்கு 4.5 மணிநேரம் இந்த வேலைகளில் செலவிடப்படுகிறது. பெண்கள் செய்யும் இந்த சம்பளமில்லாத வேலை இந்தியாவில் 6 மணிநேரம். ஆண்கள் ஒருமணி நேரத்திற்கும் குறைவாகவே இத்தகைய வேலைகளில் ஈடுபடுகின்றனர். பெண்கள் சுத்தம் செய்வதிலும், சமையல் செய்வதிலும் அதிகநேரம் செலவிடுவதால் சம்பளம் கிடைக்கும் வேலைகளை செய்ய அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.

பெண் குழந்தைகள் வீட்டு வேலைகளையும் செய்வதால் பள்ளியில் பின்தங்கி விடுகிறார்கள். ‘வீட்டுவேலைகளை 5 மணி நேரத்திலிருந்து 3 மணிநேரமாகக் குறைப்பதால் பெண் பணியாளர்களின் உற்பத்தித்திறன் 10 சதவிகிதம் அதிகரிக்கும். பெண்களும் ஆண்களுக்கு சமமாக உழைத்தால் நாட்டின் பொருளாதார உற்பத்தி 12 சதவிகிதம் அதிகரிக்கும்.

வீட்டுவேலைகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம்:

1. சமையல் 2. சுத்தம் செய்தல் 3. வீட்டில் உள்ள குழந்தைகளையும், முதியவர்களையும் பார்த்துக்கொள்வது. இந்த மூன்றில் எதையெல்லாம் ஆண்களும் பங்கு போட்டுக்கொண்டு செய்ய முடியுமோ அப்படி வேலைகளைப் பிரித்துக் கொண்டு செய்வதால் பெண்களின் சக்தி கணிசமாக நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும். கூடவே பெண்களின் ஆரோக்கியம் பற்றியும் அக்கறை அதிகம் வேண்டும். நல்ல குடிநீர் கிடைப்பதற்கு வழி வகுத்தால் பெண்களின் வேலைச்சுமை பாதியாகக் குறையும் என்கிறார் திருமதி கேட்ஸ். பல நாடுகளில் நல்ல தண்ணீரைத் தேடித் போவதே பெண்களின் தலையாய பணியாக இருக்கிறது.

கணவன்-மனைவி இருவரும் தங்களுக்குள் வீட்டு வேலைகளை எப்படிப் பங்கு போட்டுக்கொண்டு செய்யலாம் என்பது பற்றி பேசவேண்டும். உதாரணத்திற்கு டான்சானியா கணவர்களைச் சுட்டிக் காட்டுகிறார் திரு கேட்ஸ். இங்கு ஆண்கள் தண்ணீர் கொண்டுவரும் பணியை ஏற்கிறார்கள். பலமான உடல் அமைப்பு இருப்பதால், கடினமான பணிகளை ஆண்கள் செய்யமுடியும்.

திருமதி கேட்ஸ் போட்ட விதியால் அவரது வீட்டில் ஏதாவது பலன் உண்டா? நிச்சயம் உண்டு. இரவு வேலைகளை எல்லோரும் பங்கு போட்டுக்கொண்டு செய்வதால் சீக்கிரம் வேலைகள் முடிகின்றன. அதுமட்டுமில்லை; இப்போது தனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வரும் வேலையை திரு கேட்ஸ் செய்கிறார். அதைப் பார்த்துவிட்டு ‘அத்தனை பெரிய மனிதரே தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு பள்ளியில் விடும்போது நீங்களும் செய்யலாம்’ என்று மற்ற அம்மாக்கள் தங்கள் கணவர்களை முடுக்கி விடுகிறார்களாம்!

கணவன்- மனைவி இருவரும் தங்களுக்குள் வீட்டு வேலைகளை எப்படிப் பங்கு போட்டுக்கொண்டு செய்யலாம் என்பது பற்றி பேசவேண்டும். உதாரணத்திற்கு டான்சானியா கணவர்களைச் சுட்டிக் காட்டுகிறார் திரு கேட்ஸ். இங்கு ஆண்கள் தண்ணீர் கொண்டுவரும் பணியை ஏற்கிறார்கள்.