ஆனால், அது ஒரு குறையில்லை!



-விக்னேஸ்வரி சுரேஷ்

அப்படி என்ன ராசியோ தெரியாது, திரும்பிப்பார்க்குமளவு அழகான பெண்கள் தான் எனக்கு தோழியாக வாய்ப்பார்கள், பள்ளிகாலம் முதல் பணியிடம் வரை. அவர்களால் பலவித்தியாசமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சி தான்.

அந்த அனுபவங்களில் முதன்மையானது மற்றும் சுவாரஸ்யமானது எனக்கு கிடைக்கும் திடீர்-குபீர் அண்ணாக்கள். தங்கச்சி’ என்றவாறு அறிமுகமாவார்கள். ``நீ எப்பவும் போற பஸ் போயிருச்சேம்மா, நான் வேண்ணா கொண்டுவிடவா?’’, `யாராவது வம்பு வளர்த்தா என் பேர சொல்லும்மா’ என தானாக வந்து உதவுவார்கள். அப்படி எனக்கு பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் சேர்ந்த அண்ணாக்கள் எல்லோரும் திருமண சீர் செய்திருந்தால், அப்பா என்னை அம்பானிக்கே கட்டி வைத்திருப்பார்.

இந்த ‘அண்ணா’க்களின் அன்பு, என் தோழி அவர்களை திரும்பி பார்க்கும் வரை தான் அல்லது அவர்கள் காதலை மறுக்கும் வரைதான். அதன் பின் இந்த தங்கையை மறந்து, வேறு தங்கையை தேடிக்கொள்வார்கள். ஆயினும் தங்கையாக நீடித்திருக்கும் நாட்கள் விசேஷமானவை. ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் போகப்போக ‘மொச புடிக்கற நாய மூஞ்சப் பாத்தா தெரியாது?’ என்பார்களே, அது போல பலரின் உள்நோக்கத்தை கண்டறிவதில் வித்தகி ஆகிவிட்டேன்.

`ஆமா, நீயும் உன் ஃப்ரெண்டும் சேர்ந்துதான் ட்யூஷன் போவீங்களா?’, `உன் ஃப்ரெண்டுக்கும் பிங்க் கலர் பிடிக்குமா?’ என்று எல்லா கேள்வியையும் அங்கேயே கொண்டு நிறுத்துவார்கள். பிறகு, ஒரு சுபயோக சுபதினத்தில் தபு சங்கரின் கவிதையை பிரதியெடுத்து, ஐ லவ் யூ எழுதி, ஹார்ட்டி ன் வரைந்து என் தோழியிடம் தந்துவிட சொல்லுவார்கள். தபு சங்கர், தோழிக்கு வேண்டுமானால் புதிதாக அண்ணாக்கள் செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள்.

விதவிதமான கற்பனைகளுக்கு உயிர் கொடுத்த நாட்கள் அவை. அதற்காக காதலுக்கே எதிரி என்றெல்லாம் நினைக்க வேண்டாம். மனப்பூர்வமாக ஒருவரை ஒருவர் விரும்பிய நண்பர்களுக்கு உதவிகளும் செய்திருக்கிறேன். அதே நேரம் அழகான தோழியோடு செல்லவேண்டாம், நீ நிறம் மங்கலாய் அல்லது பார்க்க சுமாராய் தெரிவாய் என்றெல்லாம் அறிவுரைகள் கிடைத்தது உண்டுதான். எனினும், சிறு வயது முதலே வெளித்தோற்ற அழகு எனக்கு பிரதானமாகத் தோன்றியதில்லை. என்வரையில் அழகு என்பது `மகிழ்ச்சி’.

யாருடன் இருக்கையில் மகிழ்ச்சியாக உணர்கிறோமோ, அவரே அழகானவர். எந்த காரியம் செய்தால் மகிழ்ச்சி மனதில் நிறைகிறதோ அதுவே அழகானது. நாம் அழகாக தெரிவதும், மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதிலேயே உள்ளது.  வெள்ளிப் பதக்கம் அணிந்து சிந்து சிரிக்கையில், ஐஸ்வர்யா ராயை விட அழகானவராய் தோன்றினார்.

ஆம், ‘புன்னகை’யே உலகின் தலை சிறந்த அழகு சாதனம். தன்னிறைவே சக மனிதர்களை கவர்ந்திழுக்கும் ஆகச்சிறந்த வாசனை திரவியம். தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடர்களில்  வில்லியாக வருபவரும் அழகானவராகவே இருக்கிறார். எனினும் மக்கள் அவர்களை வெறுக்கிறார்கள். அங்கே அழகையும் தாண்டி, மகிழ்ச்சி தராத கதாப்பாத்திரத்தின் குணங்கள் ஈர்ப்பை ஏற்படுத்துவதில்லை.

வெளித்தோற்றம் கருத்தில் கொண்டு ‘அழகி’ என்று அறியப்படும் பல பெண்களின் காதல்வாழ்க்கை தோல்வியில் முடிகிறது. தாங்கள் நேசிக்கப்படுவது வெறும் அழகுக்காக மட்டும் தானோ என்ற மனஉளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். சமூகம், ‘சுமார்’ என்று வகைப்படுத்தும் பெண்கள் தங்கள் மீதான பிறரது பிரியத்தைஎவ்வித கேள்விக்கும் ஆட்படுத்தாமல் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வதையும் பார்க்க முடிகிறது. உறுதியாக சொல்ல முடியும், வெளித்தோற்ற அழகால் சாதிக்க முடியாததை மகிழ்ச்சியால், தன்னிறைவால் சாதிக்க முடியும். மனிதர்களை சம்பாதிப்பது அதில்முதன்மையானது!

கலாட்டா கார்னர்
ஞாயிறு இரவுகளில் ஸ்டேஷனரி ஷாப்களில் கூட்டம் அள்ளுகிறது. ஊரின் எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இம்சையை தான் கொடுக்கிறார்கள் போலும்!

வெள்ளிப்பதக்கம் அணிந்து சிந்து சிரிக்கையில், ஐஸ்வர்யா ராயை விட அழகானவராய் தோன்றினார். ஆம், `புன்னகை’யே உலகின் தலைச்சிறந்த அழகுசாதனம்.

(சிந்திப்போம்!)