உங்களை நீங்களே கொல்லலாமா?



மனமே நீ மாறிவிடு

அந்த புள்ளி விவரம் ரத்தத்தை உறைய வைக்கிறது. தேசிய குற்றவியல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்... இந்திய அளவில் கடந்த 2014ம் ஆண்டில் நடந்த தற்கொலைகளில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதுவும் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம். படிப்பறிவு குறைவாகவும், விழிப்புணர்வு அவ்வளவாக இல்லாத காலத்திலும் பிரச்னைகளை வலிமையான மனதோடு எதிர் கொண்டு வென்ற பெண்களுக்கு என்னாச்சு?

படித்து, பதவிகள் வகித்து, பல துறைகளிலும் முதலிடத்தை தக்க வைத்து உயர்ந்து வரும் இவர்களது மன பலத்தை சிதற வைக்கும் விஷயம் எது? இப்படி தற்கொலை செய்து கொள்ளும் ெபண்களிலும் அதிகம் படித்து உயர் பதவியில் உள்ளவர்களே முன்னணியில் உள்ளனர். கல்வியும், தான் வகிக்கும் பதவியும் பெண்ணுக்கு தன்னம்பிக்கை தர முடியவில்லை என்றால் இன்றைய பெண்களின் தேவைதான் என்ன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் காய்ந்த மண்ணில் காணப்படும் வெப்பப் பிளவுகளாய் மனதில் விரிகிறது.

ஒரு பிரச்னைக்கான காரணத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதற்கான தீர்வை ஒரு போதும் அடைய முடியாது. என்னென்ன காரணங்களுக்காக பெண்கள் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். சொல்கிறார் மனநல மருத்துவர் மீனாட்சி, ‘‘ஒருவரது மன உணர்ச்சியின் உச்சகட்டமே தற்கொலைக்கான தீவிரத்தை உருவாக்குகிறது. ஒரு பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்காக எடுக்கும் முடிவுதான் தற்கொலையில் முடிகிறது.

இந்திய அளவில் மிகப்பெரிய பிரச்னையாக தற்ெகாலை உருவெடுத்து வருகிறது. அதில் சென்னை முதலிடத்தில் உள்ளது. பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. பிரச்னைக்கான தீர்வு காண்பதில் உள்ள அறியாைம தற்கொலை முடிவுக்கான எண்ணங்களை மனதில் உருவாக்குகிறது. இத்துடன் சமூகம் சார்ந்த பல காரணங்களும் அந்த தற்ெகாலை எண்ணத்தை ஊக்குவிக்கிறது.

சமீபத்தில் எட்டு வயது குழந்தை அம்மா அடித்ததற்காக அரளி விதையை சாப்பிட்டது. அரளி விதை சாப்பிட்டால் இறந்து விடுவோம் என்று அந்த குழந்தைக்கு தெரியாது. ஆனால், தொலைக்காட்சித் தொடரில் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண் செய்தது அந்த குழந்தையின் மனதில் பதிந்து விட்டது. நாமும் அது போல் செய்யலாமே என்று முயற்சித்துள்ளது. வளர் இளம் பருவத்தில் உள்ளவர்கள் தேர்வில் தோல்வி, காதல் தோல்வி போன்ற காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது.
 
திருமணத்துக்குப் பின்னர் கணவன்-மனைவி உறவில் ஏற்படும் சண்டைகள், நிதிப் பிரச்னை, தொழிலில் நஷ்டம் போன்ற பிரச்னைகளோடு தன்னம்பிக்கை குறைவாக உள்ள பெண்கள் தற்கொலையை பிரச்னைக்கான தீர்வாக கையில் எடுக்கின்றனர். மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்னை உள்ளவர்கள் இது போன்ற முடிவுகளுக்கு எளிதில் தள்ளப்படுகின்றனர்.

கணவனைப் பிரிந்து தனித்து வாழும் பெண்கள், பொருளாதாரப் பிரச்னை மற்றும் உளவியல் சிக்கல்கள், திருமணம் ஆகி பல ஆண்டுகள் கடந்தும் திருவிழாக்காலங்களில் மனைவியிடம் தாய் வீட்டு சீதனம் கேட்டு வார்த்தைகளால் கொல்லும் கணவர்களின் நடவடிக்கை, சொத்து தகராறு, கணவன்-மனைவிக்கு இடையில் உருவாகும் சந்தேகம். தனித்து வாழ வேண்டிய சூழலில் உணர்வு ரீதியான உறவுகளின் தொடர்பின்றி தனித்து விடப்படுவதால் ஏற்படும் பயம், கணவனின் குடிப்பழக்கத்தால் பெண்கள் சந்திக்கும் தொடர் பிரச்னைகள்... இப்படி சாதாரணப் பெண்கள் தங்களது குடும்ப வாழ்வில் சந்திக்கும் நெருக்கடியில் இருந்து விடுபட தற்கொைல ஆயுதத்தால் தன்னையே கொல்லும் அளவுக்கு துணிகின்றனர்.

அதிகம் படித்து உயர் பதவிகளில் உள்ள டாக்டர், காவல் துறையில் வேலை பார்க்கும் பெண்கள், சினிமா நடிகை என பலராலும் பாராட்டப்படும் துறையில் வேலை பார்ப்பவர்களும் தற்கொலை முடிவை எடுப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவர்கள் மற்றும் காவல் துறையில் உள்ளவர்களுக்கு தற்கொலைக்கான ஆயுதங்கள் அவர்களிடமே உள்ளது. இவர்கள் தங்களது மன நெருக்கடிகளை பகிர்ந்து கொள்ளாமல் இது போன்ற முடிவுகளை எடுக்கின்றனர்.

கேன்சர் கண்டறியப்பட்ட பின்னர் அதற்கான மருத்துவ சிகிச்சைகள் குறித்து சொல்லும் போது நோயின் தொடர் விளைவுகளை மனதில் ெகாண்டு தற்கொலை முடிவுகளுக்கு செல்பவர்களை பார்க்க முடிகிறது. ஒரு சிலர் கேன்சர் சிகிச்சையின் போது முடி கொட்டுதல், உடல் இளைத்தல் மற்றும் வலி காரணமாக தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் இருக்கும் போது இது போன்ற முடிவுகளை தவிர்க்கலாம்.

தற்கொலை செய்து ெகாள்பவர்கள் பிரச்னைகளை சந்திக்கும் போது தற்கொலை எண்ணத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்றனர். ஆனால், அதனை மற்றவர்கள் பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. யாராவது தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்தினால் அவர்களது பிரச்னையை காதுகொடுத்துக் கேட்டு எளிய தீர்வுக்கு வழி சொல்வது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். பிரச்னைகளுக்கு தற்கொலை மட்டுமே தீர்வு அல்ல என்பதை உணர்த்தும் விதமாக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தற்கொலைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் எளிதில் கிடைக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வதும் அவசியம்.

இதற்காக வேலூர் பகுதியில் இரண்டு கிராமங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக் ெகால்லி மருந்துகளை ஓர் ஊரில் ஒரு நபரின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்து விட்டனர். வயலுக்கு தேவைப்படும் போது வாங்கி பயன்படுத்தினர். இன்னொரு ஊரில் பூச்சிக் கொல்லி மருந்துகள் கட்டுப்பாடு இன்றி கிடைத்தது.

பூச்சிக் கொல்லி மருந்துகள் ஒருவரது கட்டுப்பாட்டில் இருந்த ஊரில் தற்கொலை குறிப்பிட்ட காலத்தில் குறைந்தது. மது பயன்பாட்டை கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் முயற்சிகள் எடுக்க வேண்டும். நம் நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப மன நல மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இன்றைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் பல ேநாய்களுக்கு மன நெருக்கடியே முதல் காரணமாக உள்ளது. இது போன்ற நெருக்கடியைத் தவிர்க்க தேசிய மனித உரிமை ஆணையம் பொது மருத்துவம் படிப்பவர்களும் மன
நலத்துக்கான ஒரு பாடப்பிரிவை படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

மனம் சார்ந்த அடிப்படைப் பிரச்னைகளுக்கு பொது மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினால் தற்கொலை உள்ளிட்ட பல உளவியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என வலியுறுத்தியுள்ளது. மக்களின் தேவை அடிப்படையில் இது போன்ற விஷயங்களை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும். தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் உடனடியாக தங்களது பிரச்னையை நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்வதற்கான ெஹல்ப் லைன் உருவாக்கப்பட வேண்டும். மனநல பிரச்னைகளுக்கான மனநல மருத்துவரை அணுகினால் நம்மை பைத்தியம் என்று இந்த சமூகம் சொல்லும் என்ற தவறான எண்ணத்தில் இருந்து வெளியில் வர வேண்டும். மன நல பிரச்னைகளின் துவக்கத்திலேயே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதன் மூலம் பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

நமக்கு தெரிந்த நண்பர்கள் அல்லது உறவினர்கள் குழப்பத்தில் இருக்கும் பட்சத்தில் அவர்களை பேச வைத்து மனதில் உள்ளதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் தங்களது உளவியல் சிக்கல்களை பகிர்ந்து கொள்ள நட்பான சூழலை உருவாக்க வேண்டும். குழந்தைகள் படிப்பில் நாட்டம் குைறயும் போது அவர்களை அணுகி பிரச்னைகளுக்கு தீர்வு காண கற்றுத்தர வேண்டும். குழந்தை வளர்ப்பில் சிறு வயதில் இருந்தே பிரச்னைகளுக்கு தானாக தீர்வு காணும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
வளரும் காலத்தில் மனதைப் பகிர்ந்து கொள்ள நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வது இனிய வாழ்க்கைச் சூழலுக்கு வழி வகுக்கும்.

பிரச்னைகளே இல்லாத வாழ்க்கை என்பது யாருக்குமே இல்லை. சின்னச் சின்ன பிரச்னைகள் வரும் போது அதற்கான தீர்வு காண்பது, பெரிய பிரச்னைகளை அறிவார்த்த முறையில் எளிய தீர்வுக்கு நகர்த்துவது என்று வாழ்க்கை முறையை எளிதாக மாற்றிக் கொள்வதன் மூலமே தற்கொலை வரை போகாமல் தீர்வு காண வழிவகுக்கும்.

தற்ெகாலை செய்து கொள்ள வேண்டும் என்று ேதான்றினால் கூட ஒரு நாள் முடிவைத் தள்ளிப் போட்டு யோசிக்கலாம். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மனம் விட்டுப் பேசலாம். உயிரின் மதிப்பைப் புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பதில் ஆர்வம் கொள்ள வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழக் கற்றுக் ெகாண்டவர்களால் தற்கொலை செய்து கொள்ள முடியாது.

பெண் என்றாலே யாரையாவது சார்ந்து வாழ்ந்தாக வேண்டும் என்ற எண்ணத்தை எந்தச் சூழலிலும் மனதில் விதைப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் இருந்தே தனக்கான பிரச்னைகளுக்கு எளிய தீர்வு காண்பதற்கான உத்திகளை ெபண் குழந்தைகள் கற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். பல்வேறு பிரச்னைகளுக்கு இடையிலும் மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொடுக்க வேண்டும். பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கான ஒரு விஷயத்தை தனக்கென வைத்திருக்க வேண்டும்.

அவ்வப்போது பிடித்த பொழுதுபோக்கில் தனது மனதை கரைத்துக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் ஒரே விஷயத்தில் தேங்கி விடாமல் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். தனது திறமையை மேம்படுத்திக் கொண்டு எப்பொழு தும் புதிய சிந்தனைக்கான ஊற்றுக் கண்கள் மனதில் திறந்திருக்க வேண்டும். தன்னை ஃப்ெரஷ்ஷாக சிறு குழந்தைகளுக்கான குதூகலத்துடன் உணரும் பெண்களால் எந்தப் பிரச்னை வந்தாலும் சமாளிக்க முடியும். பிரச்னைகளை சிரித்துக் கொண்டே சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்வதே தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட உதவியாக இருக்கும்’’ என்கிறார் மீனாட்சி.

தற்கொலை செய்து ெகாள்பவர்கள் பிரச்னைகளை சந்திக்கும்போது தற்கொலை எண்ணத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்றனர். ஆனால், அதனை மற்றவர்கள் பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.

தற்ெகாலை செய்து கொள்ள வேண்டும் என்று ேதான்றினால் கூட ஒரு நாள் முடிவைத் தள்ளிப் போட்டு யோசிக்கலாம்.

- ஸ்ரீதேவி