கிளியோபாட்ரா இருளும் ஒளியும்



100 பொருட்கள் வாயிலாக பெண்கள் வரலாறு

-மருதன் 

பொருள் 24 இருளில் கிளியோபாட்ரா

பெண் ஆட்சியாளர்கள் பலரைக் கண்டிருக்கிறது பண்டைய எகிப்து. இரண்டாம் கிளியோபாட்ரா அவர் காலத்தில் பிரபலமானவராகவே இருந்திருக்கிறார். எகிப்திய ராணியாகவும் பிறகு சிறிது காலத்துக்கு பிரத்யேக ஆட்சியாளராகவும் திகழ்ந்திருக்கிறார். உள்ளுக்குள் நடைபெற்ற சதி காரணமாக அவர் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கிறது. முறியடித்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார். கொலை முயற்சிகள் அரங்கேறியிருக்கின்றன.

அரண்மனையில் அவ்வப்போது சிக்கல்களும் எதிர்ப்புகளும் முளைத்திருக்கின்றன. அவற்றை எதிர்கொள்வதற்கும் வெற்றிபெறுவதற்கும் தேவையான நுட்பமான அறிவையும் துணிச்சலையும் கிளியோபாட்ரா பெற்றிருந்தார். அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் கப்பல்கள் இயங்கியிருக்கின்றன; வர்த்தகங்கள் நடைபெற்றிருக்கின்றன; மக்கள் ஆளப்பட்டிருக்கிறார்கள்.

மூன்றாம் கிளியோபாட்ரா தன் அம்மாவை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றினார். தன் மாமாவை மணந்துகொண்டு, தன்னுடைய இரு மகன்களை பக்கத்தில் அமர வைத்து எகிப்தை ஆட்சி செய்திருக்கிறார்.  இவரைப் பற்றி மேலதிக விரிவான விவரங்கள் இல்லை. இவர்களுக்குப் பிறகு நாம் நேராக ஏழாம் கிளியோபாட்ராவைத்தான் சந்திக்கிறோம். கிளியோபாட்ரா வம்சத்திலேயே இவர் மட்டும்தான் தனியாகப் பிரகாசிக்கிறார்.

பொயுமு 30 வாக்கில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன ஏழாம் கிளியோபாட்ராவை பற்றி  பல்லாயிரம் பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன; திரைப்படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன; ஷேக்ஸ்பியரின் உணர்ச்சிபூர்வமான பங்களிப்பால் எண்ணற்ற நாடகங்கள் மேடையேற்றப்பட்டுவிட்டன. உலகம் அறிந்த பிரசித்திப் பெற்ற ஆட்சியாளர்கள் என்று பட்டியலிட்டால் பெண்கள் வரிசையில் நிச்சயம் கிளியோபாட்ரா முதலிடங்களில் ஒன்றைப் பிடித்துவிடுவார்.

இவ்வளவு வெளிச்சம் பாய்ச்சப்பட்ட பிறகும் ஏழாம் கிளியோபாட்ராவைச் சுற்றி அடர்த்தியான இருள் இன்னமும் பரவியே கிடக்கிறது. முந்தைய ஆறு கிளியோபாட்ராக்கள் வரலாற்றுத் தகவல்கள் இன்றி இருளில் தள்ளப்பட்டார்கள் என்றால் ஏழாவதும் கடைசியுமான கிளியோபாட்ரா ஏராளமான வரலாற்றுத் தகவல்களுக்கு மத்தியில் இருளில் தள்ளப்பட்டிருக்கிறார்.

கிளியோபாட்ரா பற்றிய பெரும்பாலான பதிவுகளை இரண்டாக வகைப்படுத்தலாம். முதலாவதில் அவருடைய அழகே பிரதானமாக முன்னிறுத்தப்படுகிறது. நல்லவிதமாகவும், கெட்டவிதமாகவும்.  வெகுளித்தனமான, அழகான, அமைதியான ஒரு கவர்ச்சிப் பதுமையாக கிளியோபாட்ரா இதில் வெளிப்படுகிறார். சிலந்தி போல் வலைவிரித்து ஆண்களை ஈர்த்து வீழ்த்தும் மாயக்காரியாகவும் அவர் பார்க்கப்படுகிறார்.

கிளியோபாட்ரா தன் மேனியழகை எப்படியெல்லாம் பேணினார் என்பது தொடங்கி ஜூலியஸ் சீஸர், மார்க் ஆண்டனி என்னும் இரு பெரும் ரோம ஆளுமைகளை எப்படி தன்வயப்படுத்தினார் என்பதுவரை மட்டுமே இந்த வகை அலசல்கள் இருக்கின்றன. வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய ஆண்டனி கிளியோபாட்ரா நாடகம், கிளியோபாட்ராவை ஒரு மகத்தான காதலராக முன்னிறுத்தியது. ரோமியோவை காதலித்து மடிந்த ஜூலியட் போல் சீஸரையும் பிறகு ஆண்டனியையும் காதலித்த கிளியோபாட்ராவும் துயரமான முடிவையே சந்திக்கிறார். 

அவருடைய பலம் என்பது அவருடைய அழகு அல்லது காதல். சரி, இந்த அழகும் காதலுமாவது நேர்மையாக இந்தப் பதிவுகளில் காணக்கிடைக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. அவரது மரணமும்கூட மிகையும் கற்பனையும் கலந்தே சொல்லப்படுகின்றன. இரண்டாவது வகை பதிவுகள் கிளியோபாட்ராவை வெகுவாக குறைத்து மதிப்பிடுகின்றன. அலட்சியமாக அவரைக் கடந்து செல்வதன் மூலம் வரலாற்றில் அவர் வகித்த பாத்திரத்தை இப்பதிவுகள் இருட்டடிப்பு செய்துவிடுகின்றன.

உதாரணத்துக்கு மார்க் ஆண்டனியின் வரலாற்றை எழுதியுள்ள புகழ்பெற்ற பண்டைய வரலாற்றாசிரியர் புளூடார்க் கிளியோபாட்ரா பற்றி அமைதி காக்கவே விரும்பியிருக்கிறார். நான் பொருட்படுத்தி எழுதக்கூடிய அளவுக்கு அவள் அப்படியொன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லை என்று அவர் நினைத்திருக்கலாம். அல்லது சீஸர், ஆண்டனி அளவுக்கு கிளியோபாட்ரா ஒரு பெரிய ஆளுமை இல்லை என்று மதிப்பிட்டு அலட்சியப்படுத்தியிருக்கலாம்.

இந்த இரு வகை பதிவுகளும் கிளியோபாட்ராவின் ஆளுமையையும் ஆற்றலையும் கருணையின்றி உதாசீனம் செய்கின்றன. அவர் கரங்களில் இருந்த  அதிகாரத்தையும் அதை அவர் எப்படிப் பயன்படுத்தினார் என்பதையும் அவர்கள் ஆராயவில்லை. ஒரு காதலராக அவரை முதன்மைப்படுத்த விரும்பியவர்கள் எவரும் ஓர் அரசியல் தலைவராக அவருடைய வெற்றி, தோல்விகளைப் பரிசீலிக்கவில்லை. எகிப்து, ரோமப் பேரரசு இரண்டையும் கிளியோபாட்ரா எப்படிப் பாதித்தார் என்னும் ஆதாரமான  கேள்வியை இவர்கள் எழுப்பவேயில்லை.

ஜூலியஸ் சீஸர், மார்க் ஆண்டனி, அலெக்சாண்டர், நீரோ, பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்று வெகு சிலரை மட்டுமே இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தபிறகும் நினைவுகூர்கிறோம். இவர்களோடு சேரும் ஒரே அபூர்வமான பெண் கிளியோபாட்ரா என்கிறார் வரலாற்றாசிரியர் ஆட்ரியன் கோல்ட்ஸ்வொர்தி.

கிளியோபாட்ரா ஒரு புத்திசாலி, கற்றறிந்தவர், நுணுக்கமான திறன் பெற்றவர் என்கிறார் ஆட்ரியன். சீஸரையும் ஆண்டனியையும் கதாநாயகர்களாக காட்ட விரும்புவர்கள் கிளியோபாட்ராவை ஒரு வில்லியாக உருமாற்றும் போக்கை இவர் சுட்டிக்காட்டுகிறார். புகழும் வீரமும் மிக்கவர்களாக இருந்தபோதிலும் சீஸரும் ஆண்டனியும் கிளியோபாட்ரா மீது கொண்ட மோகத்தால் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தார்கள் என்றே இந்த வகை வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள்.

இந்த இருவருமே கிளியோபாட்ராமீது காதல் கொண்டது உண்மைதான் என்றாலும் அதற்கு அவருடைய அதிகார பலமோ அறிவுத்திறனோ செல்வமோ அழகோ  காரணமாக இருந்திருக்கலாம் என்று இவர்கள் கருதுவதில்லை. வஞ்சகம், சூழ்ச்சி, சூது ஆகியவற்றைப் பயன்படுத்தியே இந்த இருவரையும் கிளியோபாட்ரா வீழ்த்தினார் என்று இவர்கள் நம்ப விரும்புகிறார்கள். கிளியோபாட்ரா தவறுகளே இழைக்காத ஓர் ஆட்சியாளர் இல்லை.

குற்றங்களே செய்யாதவரல்ல அவர். இருந்தும் சீஸரையும் ஆண்டனியையும் இந்த ஆய்வாளர்கள் ஒரு மாதிரியாகவும் கிளியோபாட்ராவை வேறொரு மாதிரியாகவும் அணுகுவது ஏன்? சீஸரின் நிறை, குறைகளை ஆராய்வதைப் போல் கிளியோபாட்ராவின் நிறை, குறைகளை ஏன் இவர்களால் ஆராய முடியவில்லை? சீஸரின் ஆட்சித்திறன் பற்றிப் பேசும் அளவுக்கு கிளியோபாட்ராவின் ஆட்சித்திறன் (அல்லது திறமையின்மை) ஏன் விவாதிக்கப்படவில்லை? கிளியோபாட்ராவின் தலைமைப் பண்புகள் ஏன் குறிப்பிடப்படவில்லை? நிர்வாகவியல் பாடங்களாக ஏன் அவை வலம் வருவதில்லை? கிளியோபாட்ரா தன் அழகைக் கொண்டு ஜெயித்தவர் என்று இவர்கள் தீர்ப்பெழுதத் துடிப்பதேன்?

கிளியோபாட்ரா அவர் காலத்து மக்களால் எப்படிப் பார்க்கப்பட்டார்? அவர் நேசிக்கப்பட்டாரா வெறுக்கப்பட்டாரா? அவர்மீது எத்தகைய அரசியல் விமர்சனங்கள் வைக்கப்பட்டன? எகிப்தில் பிறக்காதவர் என்றபோதும் அவர் வம்சத்திலேயே எகிப்து மொழியைக் கற்ற முதல் பெண் அவரே என்கிறார்கள். இப்படி வேறென்ன திறமைகள் அவரிடம் இருந்திருக்கின்றன? அவருடைய உல்லாசமான, படோடோபமான வாழ்க்கைமுறை விவரிக்கப்படும் அளவுக்கு அவருடைய அரசியல் வெளிப்படாதது ஏன்?

கிளியோபாட்ரா உருவம் பொதித்த நாணயங்கள் இப்போதும் காணக்கிடைக்கின்றன. அவர் காலத்தில் அவர் அனுமதியுடன் வெளிவந்தவை இவை. முழு உருவச் சிலைகளும் மார்பளவு சிலைகளும் இருக்கின்றன. இவற்றைப் பார்க்கும்போது உறுதியாகத் தெரியவரும் உண்மை, பெரும்பாலான பதிவுகள் உறுதிப்படுத்துவதைப் போல் கிளியோபாட்ரா ஒரு பேரழகி இல்லை என்பதுதான். இருந்தும், ஏன் மீண்டும் மீண்டும் அவர் ஒரு பேரழகியாக மட்டுமே நம் நினைவுகளில் தங்கியிருக்கிறார்? திரைப்படங்களிலும் நாடகங்களிலும் புதினங்களிலும் மட்டுமல்ல வரலாற்று ஏடுகளிலும்கூட அவர் அழகே ஏன் அவருடைய அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறது?

கிளியோபாட்ராவை அதிகபட்ச ரசனையுடனும் கற்பனை ஆற்றலுடனும் பதிவு செய்தவர்கள் அனைவரும் ஆண்களே என்பது தற்செயலானது மட்டும்தானா? அல்லது மேலே உள்ள அனைத்து வினாக்களுக்குமான விடையை நாம் இப்போது கண்டடைந்துவிட்டோமா?

பொருள் 25 : ஒளியில் கிளியோபாட்ரா

தன் தந்தை தாலமி ஆலிடெஸுடன் இணைந்து ஆட்சியில் அமர்ந்தபோது கிளியோபாட்ராவுக்கு 14 வயது. தந்தையின் மரணத்துக்குப் பிறகு தனது சகோதரன் 13ம் தாலமியை மணந்து கொண்டு அவனுடன் இணைந்து ஆட்சி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு கிளியோபாட்ரா தள்ளப்பட்டார். பெண்தானே, சுலபமாக ஒதுக்கி வைத்துவிட்டு தானே முழுமையாக ஆட்சியை நடத்தலாம் என்று ஏங்கிவந்த தாலமிக்கு கிளியோபாட்ராவின் உறுதி வேதனையை ஏற்படுத்தியது.

இவள் ஒத்துவரமாட்டாள் என்று நினைத்த தாலமி கிளியோபாட்ரா மீது போர் தொடுத்தான். இன்னொரு பக்கம், எகிப்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வந்தது. பசியில் தப்பிப் பிழைத்தவர்களை வெள்ளம் சாகடித்தது. உள்ளும் புறமும் வெடித்த இக்கட்டுகளை எதிர்கொள்ள ஜூலியஸ் சீஸர், மார்க் ஆண்டனி இருவருடைய ஆதரவையும் அரவணைப்பையும் கிளியோபாட்ரா பெறவேண்டியிருந்தது.

கிளியோபாட்ரா 22 ஆண்டுகள் எகிப்தை ஆட்சி செய்தார். இறக்கும் போது அவர் வயது 39. உச்சகட்ட அதிகாரத்தில் இருந்தபோது கிளியோபாட்ராவின் அரசாங்கம் மத்தியத்தரைக்கடல் பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. எகிப்தை ஆண்ட கடைசி வலிமையான ஆட்சியாளர் இவர்தான். ‘கிளியோபாட்ராவைப் பற்றி பலவிதமான கதைகள் உலாவுவதில் ஆச்சரியமே இல்லை; அவருடைய காலத்திலேயே வேறுபட்ட விமர்சனங்களையும் அவதூறுகளையும் கிளியோபாட்ரா எதிர்கொண்டிருக்கிறார்’ என்கிறார் ஸ்டேசி ஷிஃப்.

கிளியோபாட்ராவை வரலாற்றுத் தரவுகளுடன் விரிவாக ஆராய்ந்து நூலொன்றை எழுதி புலிட்ஸர் விருதும் பெற்றிருக்கிறார் இவர். ஒரு பெண் ஆட்சியாளராக இருப்பது அப்போதைய எகிப்தில் இயல்பானதுதான் என்றபோதும் மற்ற பெண் ஆட்சியாளர்களை மட்டுமல்ல ஆண் ஆட்சியாளர்களையும் மறக்கச்செய்யும் அளவுக்கு தனித்துவம் பெற்றவராக கிளியோபாட்ரா திகழ்ந்தார்.  உலகிலேயே அவர் அளவுக்குப் பிரபலமான இன்னொரு தலைவர் அவர் காலத்தில் இருந்ததில்லை என்கிறார் ஸ்டேசி.

கிளியோபாட்ராவின் வம்சத்தை ஆராயும் ஸ்டேசி, அவருடைய மூதாதையர்களில் பலர் கொலைகாரர்களாக இருந்ததைக் கண்டறிகிறார். வன்முறையும் படுகொலையும் அவர்களுக்கு இயல்பாகவே கைவந்தது. அதிலும் செல்வாக்குமிக்க, பணக்கார குடும்பங்கள் தங்களுடைய அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளவும் செல்வத்தைப் பாதுகாக்கவும் மேலதிக செல்வம் ஈட்டவும் வன்முறையை அவ்வப்போது துணைக்கு அழைத்துக்கொண்டன. கிளியோபாட்ராவும் இதற்கு விதிவிலக்கல்ல என்றபோதும் அவருடைய ஒட்டுமொத்த அணுகுமுறை சீரானதாக இருந்தது என்கிறார் ஸ்டேசி.

பத்து தலைமுறைகளாக கிளியோபாட்ரா குடும்பத்தினர் பாரோக்களாக வலம் வந்தனர். கிளியோபாட்ராவின் கரங்களில் ஆட்சி அதிகாரம் வந்து சேர்ந்தபோது, எகிப்து தனது பழம்பெருமைகளை இழந்துகொண்டிருந்தது. ரோமப் பேரரசு தன் கிளைகளை எகிப்துக்கு மிக அருகில் படரவிட்டபடி பலம்பெற்றுக்கொண்டிருந்தது. ஆக்கிரமித்துக்கொள் அல்லது அழித்துவிடு என்பதே சீஸரின் அதிகாரபூர்வமான கொள்கையாக இருந்தது. இந்த இரண்டிலிருந்தும் தப்பவேண்டுமானால் ரோமை நெருங்கி சென்று அதன் ஆதரவைத் திரட்டியாகவேண்டும்.

கிளியோபாட்ராவின் தந்தை செய்தது அதைத்தான். மிகப் பெரும் தொகையொன்றைச் செலுத்தி,  ரோமின் நண்பன் என்னும் பத்திரத்தை வாங்கிவைத்துக்கொண்டார் அவர். ஆனால், அது மட்டுமே எகிப்தைக் காப்பாற்றி விடாது என்பதை கிளியோபாட்ரா விரைவில் உணர்ந்துகொண்டார். வெளியில் ரோமின் அபாயம் என்றால் உள்ளுக்குள் பல கிளர்ச்சிகள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. இரண்டையும் சமாளிக்க ரோமானிய உலகின் கடவுளாக கருதப்பட்ட சீஸரின் ஆதரவைப் பெறவேண்டிய அவசியத்தை 21 வயது கிளியோபாட்ரா உணர்ந்தார். சீஸருக்குப் பிறகு மார்க் ஆண்டனியை அவர் நாடவேண்டியிருந்தது.

ஒன்று ரோமின் ஆதரவைப் பெறவேண்டும் அல்லது ரோமின் அடிமை நாடாக மாறவேண்டும். ஒரு பொறுப்பான ஆட்சியாளராக கிளியோபாட்ரா இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார். கிளியோ பாட்ராவின் முக்கியத்துவத்தைத் துல்லியமாக உணர்த்த ஒரு வரலாற்று உண்மையையும் அவர் பகிர்ந்துகொள்கிறார். ‘கிளியோபாட்ராவின் மரணத்துக்குப் பிறகு எகிப்து ரோமப் பேரரசின் ஒரு பகுதியாக மாறிப்போனது. கிளியோபாட்ரா தனியொருவராகத் தடுத்து நிறுத்தியதால்தான் அவர் காலத்தில் இந்த ஆக்கிரமிப்பு நடைபெறவில்லை.

இறுதியில், ஆக்கிரமிப்பையும் ஆதிக்கத்தையும் உதறித் தள்ளி சுதந்திரம் பெற எகிப்து 20ம் நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது.’ அதிகாரமும் பெண்களும் ஒன்றிணையும் முக்கியமான காலகட்டத்தில் கிளியோபாட்ரா வாழ்ந்திருக்கிறார் என்கிறார் ஸ்டேசி ஷிஃப். அதனால்தான் அவரைச் சுற்றி பலவிதமான புரட்டுகளும் பொய்களும் கற்பனைகளும் கதைகளும் பின்னப்பட்டிருக்கின்றன. கிளியோபாட்ரா மட்டுமல்ல, பல பெண்கள் மீது இத்தகைய சிலந்திவலைகளை உலகம் பின்னி வைத்திருக்கிறது. அவற்றை அகற்றினால்தான் உண்மையைத் தரிசிக்கமுடியும். வரலாற்றில் மறைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, உயர்த்திப் பிடிக்கப்பட்டவர்களுக்கும்கூட ஒளி தேவைப்படுகிறது.

ஜூலியஸ் சீஸர், மார்க் ஆண்டனி, அலெக்சாண்டர், நீரோ, பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்று வெகு சிலரை மட்டுமே இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தபிறகும் நினைவுகூர்கிறோம். இவர்களோடு சேரும் ஒரே அபூர்வமான பெண் கிளியோபாட்ரா என்கிறார் வரலாற்றாசிரியர் ஆட்ரியன் கோல்ட்ஸ்வொர்தி.

ஒரு பெண் ஆட்சியாளராக இருப்பது அப்போதைய எகிப்தில் இயல்பானது தான் என்றபோதும் மற்ற பெண் ஆட்சியாளர்களை மட்டுமல்ல ஆண் ஆட்சியாளர்களையும் மறக்கச்செய்யும் அளவுக்கு தனித்துவம் பெற்றவராக கிளியோபாட்ரா திகழ்ந்தார்.

(வரலாறு புதிதாகும்!)