உங்களுககான முடிவுகளை நீங்கள் மட்டுமே எடுங்கள்...



பேத்திகளுக்கு ஒரு கடிதம்

18 வயது நவ்யா நவாலி, 4 வயது ஆராத்யா இரண்டு பேரும் யார் தெரியுமா? பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் மற்றும் ஜெயாபச்சனுடைய செல்லப் பேத்திகள். இளவரசிகளாக இருந்தாலும் நம் நாட்டைப் பொறுத்தவரை அவர்களும் பெண்கள்தான். அவர்களும் கலாசார கட்டுப்பாடுகளையும், மற்றவர்களின் விமர்சனங்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

அமிதாப், தன்னுடைய செல்லப் பேத்திகளுக்கு எழுதிய நெஞ்சை நெகிழும் கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். அதுதான் இப்போது வலை வைரல்... முழுவதும் அறிவுரைகளும், வாழ்க்கைப் பாடங்களும் நிரம்பிய அந்தக் கடிதம் அவருடைய பேத்திகள் மட்டுமல்ல, எல்லா பெண்களுமே கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று. அமிதாப்பின் மகள் வயிற்றுப் பேத்தியான நவ்யா நவாலி நந்தா, ஸ்வேதா பச்சன் மற்றும் நிகில் நந்தாவிற்குப் பிறந்தவள். மகன் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய்க்குப் பிறந்தவள் ஆராத்யா பச்சன்.

அவர்களுக்கு அமிதாப் எழுதிய கடிதம் இதுதான்... பாசத்திற்குரிய நவ்யா, ஆராத்யா... ஆராத்யா... உன்னுடைய கொள்ளுப்பாட்டனாரான டாக்டர் ஹரிவான்ஷ் பச்சனுடைய பாரம்பரியத்தையும், நவ்யா... உன்னுடைய கொள்ளுப் பாட்டனாரான ஹெச்.பி. நந்தாவுடைய பாரம்பரியத்தையும் உங்கள் தோள்களில் சுமந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இருவருமே மிகப்பெரிய பாரம்பரிய வழியில் வந்தவர்கள்.

உங்களின் பெயருக்குப் பின்னால் இருக்கும் குடும்பப் பெயர், புகழ், கவுரவம் மற்றும் அங்கீகாரம் எல்லாமும் உங்களின் மூதாதையர் உங்களுக்குக் கொடுத்திருந்தாலும் நீங்கள் இருவரும் பெண்கள். மக்கள் தங்களுடைய கருத்துகளையும் எல்லைகளையும் பெண்களாகிய உங்கள் மேல் திணிக்க முற்படுவர். நீங்கள் எப்படி உடை அணிய வேண்டும், எப்படி நடந்து கொள்வது, எங்கெல்லாம் செல்ல வேண்டும், யாரை நீங்கள் சந்திக்கலாம் என அவர்கள் உங்களுக்கு எல்லை விதிப்பார்கள்.

மக்களுடைய தீர்ப்புகளின் நிழலில் நீங்கள் வாழ முற்படாதீர்கள். உங்கள் அறிவுக்கு எது சரி என்று படுகிறதோ அதன்படி தேர்வு செய்யுங்கள். உங்களின் பாவாடை நீளத்தைக் கொண்டு உங்கள் நடத்தையை தீர்மானிக்கும் வாய்ப்பை அவர்களுக்கு கொடுக்காதீர்கள். நீங்கள் எத்தகையவருடன் பழகவேண்டும் அல்லது யார் உங்களுடன் நட்பு பாராட்ட வேண்டும் என்ற மற்றவர்களின் கருத்துகளுக்கு இடமளிக்காதீர்கள்.

நீங்கள் திருமணம் செய்துகொள்ள நினைத்தால் மட்டுமே செய்து கொள்ளுங்கள். மாறாக, மற்ற எந்தக் காரணங்களுக்காகவும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். மக்கள் கொடூரமான விஷயங்களை பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். எல்லோரும், எல்லோர் சொல்வதையும் கேட்க வேண்டும் என்ற நியதியில்லை. முடிவில் நீங்கள் செய்யும் காரியங்களின் விளைவுகளை நீங்கள்தான் எதிர்கொள்ள வேண்டும் என்பதால், உங்களுக்கான முடிவுகளை மற்றவர்கள் எடுப்பதை அனுமதிக்காதீர்கள்.

நவ்யா... உன் பெயருக்குப் பின்னால் இருக்கும் குடும்பப் பெயரின் பெருமை ஒருபோதும் கஷ்டங்களில் இருந்து  உன்னை காப்பாற்றாது. ஆராத்யா... நீ இதை புரிந்து கொள்ளும் வயதில் நான் உன் அருகில் இல்லாமல் போகலாம்... ஆனால், நான் கூறிய இந்த வார்த்தைகள் அந்த நேரத்திற்கும் பொருத்தமானதாக இருக்கும். பெண்களின் உலகம் கடினமாகத்தான் இருக்கும். உங்களைப் போன்ற பெண்கள் அதை மாற்ற முடியும் என்று நம்புகிறேன்.

மக்கள் வகுத்து வைத்துள்ளதைத் தாண்டி உங்களுக்கு சொந்தமான எல்லைகளை வகுத்துக் கொள்வதும், உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்வதும் அவ்வளவு எளிதான காரியமில்லை. ஆனால், எப்பகுதியில் வாழும் பெண்களுக்கும் உதாரணமாக இந்த எல்லைகளை உங்களால் வரையறுக்க முடியும். என்னைவிட அதிகம் செய்து காட்டுங்கள். அமிதாப்பின் பேத்திகள் என்று சொல்வதைவிட, இந்தக் குழந்தைகளின் தாத்தா அமிதாப் என்று சொல்லும்படி நீங்கள் இருந்தால் அதுவே நீங்கள் எனக்குச் செய்யும் மிகப்பெரும் மரியாதை.

அன்புடன்...
உங்கள் தாத்தா

- உஷா