கலெக்டராகாவிட்டால் என்ன? பல கலெக்டர்களை உருவாக்க முடியும் !- சுஜாதா ரமேஷ்

ஒவ்வொரு துறையிலும் ஒரு பெண் முதன்முறையாக நுழையும்போது, அதில் உள்ள பல்வேறு பாதகங்களை எதிர்கொள்கிறாள். அதுவே அவளை நல்ல அனுபவசாலியாகவும் ஆக்கிவிடுகிறது. அதன்பின் அத்துறையில் அவள் வழிகாட்டியாகிவிடுவதற்கும் அந்த அனுபவங்களே ஆசானாக்கி விடுகிறது. கலெக்டராக ஆசைப்பட்டு முடியாவிட்டாலும் தான் கற்றுக்கொண்ட பாடத்தினால் ஐ.ஏ.எஸ். அகாடமி ஒன்றை சென்னையில் நடத்தி வருகிறார் சுஜாதா ரமேஷ்.

பலருக்கு உந்துதலாய் இருக்கும் அவர் தன் ஆரம்பகால அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்... ‘‘கல்லூரி படிப்பை முடித்தவுடன், நல்ல வேலையில் அமர்ந்துவிட வேண்டும் என்றே ஒவ்வொருவரும் நினைப்போம். அப்படித்தான் நானும்... சரியான வழிகாட்டுதல் கல்லூரி நாட்களில் கிடைத்திருந்தால் எளிதில் மத்திய அரசுப் பணியை பெற்றிருப்பேன். ஆனால், கல்லூரி முடித்த பின்பே அரசு போட்டித் தேர்வு குறித்து தெரியவந்தது.

இப்போது உள்ளதுபோல் போட்டித் தேர்வுக்கான விழிப்புணர்வு 2002-03 ஆண்டுகளில் இல்லை. எனினும், சேலத்திலிருந்து அரசு நடத்தும் பயிற்சி நிறுவனத்துக்குத் தேர்வாகி சென்னை ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வு பயிற்சிக்காக இடம் பெயர்ந்தேன். முதல் முறை ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும்போது அனுபவமில்லாததாலும், போட்டித் தேர்வுக்கு தேவையான நூல்கள் சேகரிப்பில் நேரங்கள் விரயம் செய்ததாலும், எதைப் படிப்பது என்ற குழப்பத்திலும் என்னுடைய முயற்சி தோல்வியில் முடிந்தது.

2005ல் இரண்டாவது முயற்சியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும்போது முழு முயற்சியுடன் சரியான திட்டமிடல் மற்றும் தீவிர பயிற்சியுடன் படித்ததால், முதல்நிலைத் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி அடைந்து முதன்மைத் தேர்வுக்கு தயாரானேன். முதன்மைத் தேர்வு தமிழில் எழுத முடிவு செய்து அதற்கான தீவிர புத்தகங்கள் மற்றும் தகவல்கள் சேகரிப்பில் 3 மாதங்கள் கடந்துவிட்டது.

அதற்குள் எனக்கு திருமணமும் நடந்து புதிய பொறுப்புகள் சேர்ந்து கொண்டது. சரியான திட்டமிடல் இருந்தும் கூடுதல் பொறுப்புகளை நிர்வகிக்கத் திணறியதால் ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வில் சொற்ப மதிப்பெண்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு தள்ளிப்போனது” என்று கூறும் சுஜாதா, ஆனாலும், மனம் தளராமல் போராடி வென்ற கதையைத் தொடர்கிறார்.

‘‘வாழ்க்கையில் எதையும் வெல்ல இலக்கு முக்கியம், அதோடு நல்ல முயற்சியும் திட்டமிடலும் இருந்தால் இலக்கை அடைவது சாத்தியமாகிவிடும் என்பதை என் அனுபவத்திலிருந்து உணர முடிந்தது. எனக்கு தாமதமாகக் கிடைத்த போட்டித் தேர்வுக்கான விழிப்புணர்வை தற்போது உள்ள மாணவர்களுக்கு கல்லூரி காலங்களிலேயே கொடுப்பதற்கும், சிறந்த திறமை வாய்ந்த அரசுப் பணியாளர்களை உருவாக்குவதற்காகவும் தொடங்கப்பட்டதே இந்த ஐ.ஏ.எஸ். அகாடமி” என்பவர் போட்டித்தேர்வுக்கு தயாராகும் திட்டமிடல்களையும் விளக்குகிறார்...

“2009ல் தொடங்கப்பட்ட எங்களுடைய ஐ.ஏ.எஸ். அகாடமியிலிருந்து ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கும் வங்கிப் பணிகளுக்கும் தேர்வாகி உள்ளனர். சிறந்த முயற்சி, தெளிவான பயிற்சி, உறுதியான இலக்கு இருந்தால் ஐ.ஏ.எஸ். படிப்பதற்கு அடிப்படையாக 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களை படித்து குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், நடப்பு நிகழ்வுகளில் இருந்து சமூகம், பொருளாதாரம், அரசியல் அமைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை எடுத்து அதற்கான பின்னணிகள் குறித்து, குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.

2017ல் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் 2016 ஜூன் மாதத்திலிருந்து இந்திய அரசின் பொருளாதார கொள்கைகள், சமூக கொள்கைகள், வெளிநாட்டு உறவுகள், முக்கிய துறை சார்ந்த திட்டங்கள், அதன் செயல்பாடுகள் மற்றும் மருத்துவக் கண்டுபிடிப்புகள் போன்றவற்றை பாடவாரியாகவோ அல்லது நிகழ்வு வாரியாகவோ தெளிவாக பின்னணியுடன் குறிப்பெடுத்து படிப்பது போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற்கு உதவும்.

போட்டித் தேர்வுக்கு பயிற்சி எடுக்கும்போது, 3 விதமான பயிற்சிகள் மிகவும் முக்கியம். தரவுகளைச் சேகரிக்க வேண்டும், சேகரித்த தரவுகளை பாடவாரியாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது பிரித்த தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு தரவுகளை ஆய்வு செய்வதன் மூலம் தேர்வில் கேட்கப்படும் எல்லாவிதமான கேள்விகளுக்கும் சிறப்பாக பதில் அளிக்க முடியும். தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் போட்டித் தேர்வுக்கான அனைத்து தகவல்களும் சேகரிப்பதற்கு எளிதானதாக இருந்தபோதிலும், தேவையானவற்றை அனுபவமிக்கவரிடம் ஆலோசனை பெற்று சேகரித்து போட்டித் தேர்வுக்கு பயிற்சியைத் தொடங்குவது சிறந்ததாகும்.

18 வயது நிரம்பியவர்களாக நீங்கள் இருந்தால் உங்கள் இலக்குகளைத் தேர்ந்தெடுங்கள். அதற்கு காலவரை இருக்கட்டும். பொதுவாக அரசுப் பணி, தனியார் பணி, பொதுப் பணி மற்றும் சுயதொழில் இந்த 4 வகை துறையில் ஏதாவது ஒன்றில் முக்கியமாக அரசுப் பணிக்கான சிறந்த இலக்குடன் கூடிய தெளிவான பயிற்சி இருந்தால் நீங்கள் வெற்றிபெறுவது உறுதி. இதில் எந்தப் பாதையில் பயணிப்பது என்பதும் அல்லாமல் புதிதாக ஒரு பாதையை தேர்ந்தெடுத்துக்கொள்ள விரும்புவதும் உங்கள் விருப்பம்.’’ முத்தாய்ப்பாக முடிக்கிறார் சுஜாதா.

போட்டித் தேர்வுக்கு பயிற்சி எடுக்கும்போது, 3 விதமான பயிற்சிகள் மிகவும் முக்கியம். தரவுகளைச் சேகரிக்க வேண்டும், சேகரித்த தரவுகளை பாட வாரியாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது பிரித்த தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

- தோ.திருத்துவராஜ்