ப்ரியங்களுடன்...
‘சிஸ்டர்ஸ் ஸ்பெஷல்’ கிளாசிக், அருமையிலும் அருமை... இதுவரை வராத ஒன்று, குங்குமம் தோழியும்- வாசகர்களும் போல, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அக்காள் தங்கைகள் உள்ள அனைவரும் அவசியம் பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷம். - வெ.லட்சுமிநாராயணன், வடலூர், சங்கீதா என்.ஸ்ரீதர், பெங்களூரு, வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18 மற்றும் வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம்.
சந்தோஷமாக வாழ சண்டை போடணுமா? அதற்கான 20 டிப்ஸ்கள் வேறா? நல்ல ஆசாமிகள் நீங்கள்! பார்த்தா ஒண்ணுமே புரியல, பார்க்கப் பார்க்கத்தான் பிடித்தது. - மயிலை கோபி, சென்னை - 83.
பெண்கள் மனது வைத்தால், எதையும் சாதிக்கலாம் என்ற இமயம் தொட்ட எவரெஸ்ட் இரட்டையர்களான மாலிக் சகோதரிகளது அனுபவபூர்வமான உண்மை குறித்த தகவல்களும், அரிய புகைப்படங்களின் அணிவகுப்பும் அருமை. துவண்டு போயிருக்கும் பெண்களை புத்துணர்வு மிக்கவர்களாக ஆகக்கூடிய வகையில் அமைந்திருந்தது. - வி.கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.
‘கபாலி’ ராதிகா ஆப்தே பற்றிய செய்திகள் வியக்க வைத்தன. சூப்பர் ஸ்டாரின் வெற்றியில் பங்குபெற்ற ஆப்தேக்கு ஒரு சூப்பர் வாழ்த்து! - தி.பார்வதி, திருச்சி-7.
மோட்டுவளைச் சிந்தனை பகுதியில் வெளியான ஒவ்வொரு நொடியிலும், வாழ்க்கையில் எதையும் ரசித்துச் செய்தால் ‘மனம் பூக்குவியலாக மணக்கும்’ என்பதை சொல்லியது அருமை. - வரலஷ்மி முத்துசாமி, கிழக்கு முகப்பேர்.
‘ஒரு பெண்ணின் கதை’ படக்கதை அருமை. மாமியாரின் கொடுமை மெய் நடுங்கச் செய்தது. - ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.
சிறிய வீடே ஆனாலும் தோட்டம் வைத்து வாழ்ந்திடும் வாழ்க்கையின் சிறப்பு குறித்த கட்டுரை அனைத்து வாசகர்களுக்கும் பயன் அளித்திடும் அற்புதமான கட்டுரையாகும். - ப.மூர்த்தி, பெங்களூர்.
‘இந்தியப் பெண்களுக்கு ஐந்து ஆலோசனைகள்’ ஆக்கபூர்வமானது. பெண் குலத்திற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் அரிய யோசனை என்றால் மிகையாகாது. - கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
‘செலரி’ என்றாலே அலறி ஓடும் என் போன்றோருக்கு இந்த இதழில் வந்துள்ள ரெசிபிகளை செய்து கொடுக்க, அவர்கள் மெய் உருகி சாப்பிட, நான் பெருகி விழுந்தேன் மகிழ்ச்சி வெள்ளத்தில். - சுகந்தாராம், சென்னை - 59.
உடன்பிறப்புகள் என்றால் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தால்தான் என்றில்லை. எனக்கு திருமணம் ஆனவுடன் என்னுடைய மைத்துனர்கள் என்னை சகோதரியாக ஏற்றுக்கொண்டு என்னிடம் அன்பைப் பொழிந்தனர். அவர்களின் சுக, துக்கங்களில் நானும் ஒரு சகோதரி போல பங்கு கொண்டேன். சிஸ்டர்ஸ் ஸ்பெஷல் சூப்பர்! - சாந்தி பாலசுப்ரமணியன், அண்ணாநகர், சென்னை.
‘பலன்தரும் பாசிடிவ் சிந்தனை’ சுஜாதாவின் படிப்பு மற்றும் எல்லாப் பெண்ணுக்கும் வானம் வசப்படும் என்ற உற்சாக டானிக். சத்தியமான வரிகள். படித்துவிட்டு, வாரே! வாவ், என்று ஆச்சரியப்பட்டேன். பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன். - ராஜிகுருசாமி, ஆதம்பாக்கம், சென்னை.
‘ஷேரிங்’ அருமையான விஷயங்களை எடுத்துரைத்தது. ஊடகங்கள், திரைப்படங்கள் இவற்றைப் பார்த்து இளைய தலைமுறையினர் சூடு போட்டுக் கொள்ள வேண்டாம் என்பதே பலரது கருத்து. - எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
பாதுகாப்பின்மை என்ற பெயரில் பெண்களை கூண்டுக் கிளிகளாக்கிவிடும் என்ற கருத்துக்கு மாற்றுப் பொருளாக இருந்தது ஜென்னியின் ‘உலகம் பிறந்தது நமக்காக’ பகுதி. - வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவிச்சந்திரன், நாகர்கோவில்.
|