ஸ்டார் தோழி



ஒரு தோழி பல முகம்

- ராதாபாலு

நான்
நல்ல எண்ணம், திடமனம், எதற்கும் கலங்காமல் வருவதை ஏற்கும் மனப்பக்குவம், கடவுள் தியானம், சிரித்த முகம், இனிய பேச்சு, இளமையான சிந்தனை... ஒரு மனுஷிக்கு இதற்கு மேல் என்ன வேண்டும்? இதுதான் நான்!

தாயாக...
இந்தி போராட்ட நேரம் பள்ளிப் படிப்பு. இந்தியில் வா, போவுக்கு கூட என்ன சொல்வது என்று தெரியாது. என் கணவர் உதவியுடன் இந்தி கற்றுக்கொண்டேன். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாறுதல். பிள்ளைகள் படிப்பு, வீட்டுப் பொறுப்பு என்று இறக்கை கட்டி ஓடியநாட்கள் அவை. அடிக்கடி பள்ளி மாறினாலும், எல்லாவற்றிலும் முதலாவதாக வந்து, எல்லா போட்டி களிலும் பங்கு பெற்று பரிசுகளையும் பெறத் தவறியதில்லை

என் பிள்ளைகள்...
என் இரண்டு பிள்ளைகளும் பொறியியலில் முனைவர் பட்டமும், முதுகலைப் பட்டமும்பெற்று ஜெர்மனி யிலும், சிங்கப்பூரிலும் பணி புரிகின்றனர். ஒரே மகள் மருத்துவர்.

கற்றுக்கொண்டதும் பெற்றுக் கொண்டதும்...
வங்கி அதிகாரியான என் கணவரின் இட மாறுதல்களால் பல மாநிலங்களில், பல ஊர்களில் வாசம். அதனால் கிடைத்த அனுபவங்கள் பல. குழந்தைகள் திருமணம், அவர்களின் பிள்ளைப் பேறு என்று கடமைகள் அனைத்தும் முடிந்த நிலையில் என் கணவரிடம் என் தனிக் குடித்தன ஆசையை சொன்னேன்! அவர் ஓகே சொல்லிவிட திருச்சியில் தற்போது வாசம். அழகான திருச்சியில், காலை எழுந்ததும் மூன்றாம் மாடியிலுள்ள என் வீட்டின் சமையலறை ஜன்னல் வழியே மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரைப் பார்த்து ஒரு வணக்கம் சொல்லிவிட்டே என் வேலைகளை ஆரம்பிப்பேன்.  மாடியிலிருந்து ஸ்ரீரங்க கோபுர தரிசனம்.

புத்தகங்கள்
ஆன்மிக புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். ராஜாஜியின் சக்கரவர்த்தி திருமகனும், வியாசர் விருந்தும் பலமுறை படித்திருக்கிறேன். கல்கியின் தியாகபூமி என்னால் மறக்க முடியாத என் மனதைத் தொட்ட நாவல். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், லக்ஷ்மி, சிவசங்கரி, பாலகுமாரன், கண்ணதாசன், அனுராதா ரமணன், வாஸந்தி, சாண்டில்யன், தேவிபாலா, ராஜேஷ்குமார் என்று அத்தனை பேரின் கதைகளையும் படிக்கப் பிடிக்கும்.

குடும்பம்
18 வயதில் திருமணம். கணவர் வங்கி ஊழியர். எட்டே மாதங்களில் அதிகாரியாகப் பணி உயர்வுடன் என் கணவருக்கு வடக்கே மதுராவுக்கு மாற்றலாக, கண்ணில் கண்ணீருடன் அம்மா,  அப்பாவைப் பிரிந்து சென்றேன். அன்பான ,கோபம் என்றால் என்னவென்றே தெரியாத பாசமான கணவர். அன்று முதல் இன்றுவரை நாற்பது வருடங்களாக என் மனம் கோணாமல் நடந்து கொள்ளும் மஹானுபவர்! எல்லா வேலைகளிலும் எனக்கு உதவும் கரங்கள் கொண்டவர்! குழந்தைகளிடம் அளவு கடந்த பாசம்! கண்ணன் பிறந்த மதுராவிலும், காதல் சின்னம் காட்சி தரும் ஆக்ராவிலும் 6 வருட வாசம்.

நான் எழுத்தாளர் மணியனின் பயணக் கட்டுரைகளைப் படித்து பாரீஸுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் போக முடியுமா என்று கனவு கண்டவள்! கணவரின் பணி ஓய்வுக்குப் பின், ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பாரீஸ், லண்டன், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா என்று பல நாடுகள் சுற்றிப் பார்த்தாச்சு! ஆல்ப்ஸ் மலையில் ஆசை தீர நடந்தும், தேம்ஸ் நதியில் படகிலும், அங்கோர்வாட் ஆலயமும் பார்த்து பிரமித்தேன்! இன்னமும் என் பயணங்கள் தொடர்கின்றன! பெண், பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து அழகான பேரக் குழந்தைகள்! விடுமுறை நாட்களில் என் வீடு பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகள் வருகையால் கூச்சலும், கும்மாளமுமாக இருக்கும்!

பொழுதுபோக்கு
நான் ஒரு எழுத்தாளர். ஆலய தரிசனக் கட்டுரைகள் நான் அதிகம் எழுதுவேன்.எந்த ஊருக்கு, எந்த நாட்டுக்கு சென்றாலும், அங்குள்ள ஆலயங்களைப் பற்றி இணையதளம் மூலம் அறிந்து கொண்டு அவற்றை தரிசித்து ஆன்மிக இதழ்களுக்கு எழுதுவேன். அது தவிர, சமையல் குறிப்புகள், சிறுகதை, பயண அனுபவங்கள் என்று நான் எழுதிய முன்னூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் பல தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளன. radhabaloo.blogspot.comல் என் எழுத்துக்களை வாசிக்கலாம்!

நேர நிர்வாகம்
இருபத்து நான்கு மணி நேரம் போதாது எனக்கு! என் வீட்டில் வேலைக்கு ஆள் இல்லை. விடியகாலை எழுந்து, வாசலில் கோலம் போட்டு, வீட்டைப் பெருக்கி, துடைத்து (மாப்பில் அல்ல... கையால்) சமைத்தபின் ஒரு மணி நேரம் கணவருடன் இணைந்து பூஜை. பிறகு சாப்பிட்டு புத்தகங்கள் படிப்பதும், கட்டுரைகள் எழுதுவதுமாக மதியம் ஆகிவிடும். அரைப்பதற்கு மிக்சி, கிரைண்டர் உபயோகிப்பதில்லை நான். அம்மியும், கல்லுரலும்தான் என் இயந்திரங்கள்!

நான் தொலைக்காட்சி தொடர் பார்க்கும் நேரம் துணிகளை இஸ்திரி செய்து விடுவேன்! மாலை அரை மணி நேரம் வாக்கிங். பின் இரவு சமையல்...அவ்வப்போது வாட்ஸப்பில் அரட்டை... இரவு ஆன்லைன் விளையாட்டு என்று நேரம்  பறந்துவிடும்! பொன்னான நேரத்தை வீணடிக்காமல் நம் வேலைகளை செய்து கொள்வதுதானே நேர நிர்வாகம்!

சமையல்
சிறுதானியங்களால் செய்யும் பொங்கல், உப்புமா, இட்லி, தோசை எனது இப்போதைய ஸ்பெஷல். பாரம்பரிய வித்தியாசமான என் சமையல்களை அறுசுவைக் களஞ்சியம் (arusuvaikkalanjiyam.blogspot.com )என்ற பிளாக்கில் காணலாம்.

பணி
அலுவலகம் சென்று வேலை பார்க்க எனக்கு மிகவும் ஆசை. அந்த ஆசை நிறைவேறவில்லை! இன்றும் வேலைக்கு போகும் பெண்களைக் காணும்போது அந்த ஏக்கம் என் கண்களில் எட்டிப் பார்ப்பதுண்டு!

கடந்து வந்த பாதை
கலக்கங்கள், சறுக்கல்கள், வருத்தங்கள் இருந்தாலும் போனதை நினைத்து நான் வருந்துவதில்லை. ‘இன்று புதிதாய் பிறந்தோம்’ என்று ஒவ்வொரு நாளையும் புத்துணர்வோடு எதிர் கொள்வேன். நம் கையில் இருக்கும் இந்த நாளை நல்லபடி வாழ்ந்தால் கண்டிப்பாக வாழ்க்கை நம் வசமே!

பிடித்த பெண்கள்
என் மூத்த மருமகள் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவள். ஆனால், அவள் மரியாதையுடன் பழகும் விதமும், அனைவரிடமும் அன்பு காட்டுவதும், என் மகன், குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதிலும் அவளைப் போல யாரும் இருக்க முடியாது, அவ்வளவு பொறுமை. இரண்டாம் மருமகளோ விட்டுக் கொடுத்து நடப்பது, தவறுகளை பெரிதுபடுத்தாமல் இருப்பது, வெளியாரையும் உறவுமுறை சொல்லி அழைப்பது, நல்ல விஷயங்களைத் தயங்காமல் பாராட்டுவது என்று பல சிறப்பான குணங்களைக் கொண்டவள். மகளை விட மேலான மருமகள்கள்!

வாழ்க்கை...
‘ஆசை அன்பு இழைகளினாலே நேசம் என்னும் தறியினிலே நெசவு நெய்தது வாழ்க்கை.வாழ்க்கை வாழ்வதற்கே...’

என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழ்பவள் நான். சோகத்தையும், சண்டைகளையும் கூட உடனே மறந்து விடுவேன். கையில் கிடைத்திருக்கும் இந்த இனிய நாளை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். தீய எண்ணங்களை நீக்கி, அடுத்தவர் மனதை நோகடிக்காமல், நல்லவற்றையே செய்து வாழ வரம் கொடு இறைவா என்பதே என் தினசரி பிரார்த்தனை.

விரிவாகப் படிக்க...  kungumamthozhi.wordpress.com