கைகளுக்கும் கால்களுக்குமான அழகு சாதனங்கள்!



வேனிட்டி பாக்ஸ்

ஒருவரின் கைகள் மற்றும் கால்களின் அழகை வைத்தே அவர்களது கேரக்டரை கணித்துவிடலாம். அவர்களது ஆரோக்கியத்தையும் ஓரளவு சொல்லிவிட முடியும். ஆனால், நாள் முழுக்க வேலை செய்கிற கைகளையும் கால்களையும் பலரும் கொஞ்சமும் லட்சியமே செய்வதில்லை என்பதுதான் உண்மை. கூந்தலுக்கு ஆயில் மசாஜ், முகத்துக்கு ஃபேஷியல் மாதிரியான சிகிச்சைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்வார்கள்.

கைகளுக்கு மெனிக்யூரோ, கால்களுக்கு பெடிக்யூரோ செய்து கொள்ள யோசிப்பார்கள். உடலின் வேறெந்தப் பகுதிகளை விடவும் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய கை, கால்களுக்கான பராமரிப்பு பற்றியும் அவற்றுக்கான அழகு சாதனங்கள் பற்றியும் அவற்றைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் பற்றியும் விளக்குகிறார் அழகுக் கலை நிபுணர் உஷா.

நீங்கள் என்னதான் பேரழகியாக இருந்தாலும் உங்கள் கை, கால்களின் வறட்சியும் வெடிப்பும் உங்கள் ஆளுமையைப் பாதிக்கும். ஹாலிவுட் நடிகை ஷரன் ஸ்டோன், அவரது அழகிய கால்களுக்காகவே அதிகம் அறியப்பட்டவர். அவர் அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்காவது கை, கால்களைப் பராமரித்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை.

கைகளிலும் கால்களிலும் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்னைகள்...

வறட்சிக்குத்தான் இதில் முதலிடம். அதிகம் உழைக்கிற இந்தப் பகுதிகள், அதிகம் அலட்சியப்படுத்தப்படுவதன் காரணமாகவே இந்த வறட்சி ஏற்படுகிறது. அடுத்தது வெடிப்பு. இது மிகவும் தர்மசங்கடமானது மட்டுமின்றி, வயதான தோற்றத்தையும் தரக்கூடியது. இது தவிர சிலருக்கு கை மற்றும் கால்களின் சருமத்தில் வெள்ளையான படிவமும், சுருக்கங்களும்கூடத் தோன்றுவதுண்டு. இவை அத்தனைக்கும் ஒரே வழி, கை, கால்களுக்கான Hand and Foot கிரீம் அல்லது லோஷன் உபயோகிப்பது  மட்டுமே.

அவற்றைத் தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்.

* கைகளுக்கான கிரீம்கள் பாரபன் ஃப்ரீயாக (paraben free) இருப்பது சிறந்தது. இந்த கிரீம்கள் சீக்கிரமே கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவே அவற்றில் பாரபன் சேர்க்கிறார்கள். பாரபனுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கும் தொடர்பிருப்பதாக நீண்ட கால ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருப்பதால், கூடியவரையில் அதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.
* கை, கால்களுக்கான கிரீம்களில் முக்கியமான சேர்க்கை ஷியா பட்டர் (Shea Butter). இது சருமத்தின் சுருக்கங்களையும் வறட்சியையும் நீக்கி, மென்மையாக வைக்கக்கூடியது. ஷியா பட்டர் கலந்துள்ள கிரீம்களை உபயோகிப்பது கை, கால்களின் அழகு மற்றும் ஆரோக்கியத்துக்கு நல்லது.
* கை, கால்களுக்கான கிரீம்கள் எப்போதும் சருமத்தை  மிருதுவாக வைக்க வேண்டுமே தவிர, எண்ணெய் பசையுடன் வைத்திருக்கக்கூடாது. எனவே சருமத்தின் உள்ளே ஊடுருவக்கூடிய வகையில் Deep Moisturiser  உள்ள கிரீம்கள் சரியான சாய்ஸ்.
* ஆன்ட்டி பாக்டீரியல் தன்மை கொண்ட கிரீம்கள் கை, கால்களின் சருமத்தின் துர்நாற்றம் நீக்கும். அதே போல ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி (Anti Inflammatory) தன்மை கொண்டவை. கை, கால்களின் களைப்பு மற்றும் வலிகளை நீக்கும். இவை இரண்டும் இருக்கும்படியான கிரீம் அல்லது லோஷன்களை தேர்வு செய்யலாம்.
* சிலருக்கு கால்களில் மட்டுமின்றி, கைகளிலும் வெடிப்புகள் இருக்கும். இவர்கள் வேப்பிலை மற்றும் அதன் எண்ணெய் கலந்த கிரீம்களை தேர்வு செய்யலாம். ஆங்கிலத்தில் karanja  என அழைக்கப்படுகிற புங்கை எண்ணெய் கலந்த கிரீம்களும் வறண்ட சருமத்தை சரி செய்து, வெடிப்புகளைக் குறைக்கும். சென்சிட்டிவான சருமம் கொண்டவர்களுக்கும் இவை இரண்டும் ஏற்றவை.
* சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் பெப்பர்மின்ட் கலந்த கிரீம் மற்றும் லோஷனை உபயோகிக்கலாம்.  இது சருமத்துக்கு ஒருவித
குளிர்ச்சியைக் கொடுப்பதுடன், களைப்பையும் நீக்கிப் புத்துணர்வுடன் வைக்கும்.
* ரொம்பவும் அடர்த்தியானதும், பிசுபிசுப்பானதுமான கிரீம்களை தவிர்க்கவும். அவற்றை உபயோகிக்கும் போது வழக்கத்தை விட கை, கால்களில் அதிக வியர்வை சுரக்கும். பாக்டீரியாக்களின் பெருக்கமும் கூடும்.
* கால்களுக்கான கிரீம்களில் டீ ட்ரீ ஆயில் மற்றும் யூகலிப்டஸ் ஆயில் கலந்திருப்பது சிறப்பு. இவை இரண்டுமே ஆன்ட்டி பாக்டீரியல் தன்மை கொண்டவை.  அதீத பாக்டீரியா பெருக்கம் இருக்கும்போதுதான் பாதங்களில் ஒருவித கெட்ட வாடை உருவாகிறது.  அதை இந்த இரண்டும் தவிர்க்கும்.
* லாவண்டர் போன்ற அரோமா ஆயில் கலந்த கிரீம்களை உபயோகிப்பது கை, கால்களை வாசனையுடனும் வைக்கும்.
* அலர்ஜி வரலாம் என பயப்படுகிறவர்கள்  Hypoallergenic கிரீம்களை தேடி வாங்கி உபயோகிக்கலாம். இவை எரிச்சலைத் தவிர்க்கும்.
* கை, கால்களுக்கான கிரீம்தானே என்கிற அலட்சியம் இல்லாமல் அவற்றிலும் SPF அதாவது வெயிலில் இருந்து பாதுகாக்கும் தன்மை இருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும்.

வீட்டிலேயே செய்யக்கூடிய கைகளுக்கான கிரீம்...

தேங்காய் எண்ணெய் - கால் கப்,
ஷியா பட்டர் - 1/8 கப்,
கோகோ பட்டர் - 1/8 கப்,
கற்றாழை ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
ஸ்வீட் ஆல்மண்ட் அல்லது ஜோஜோபா ஆயில் - 1 டீஸ்பூன்,
ஆரஞ்சு ஆயில் - 5 துளிகள்.

ஷியா பட்டர், தேங்காய் எண்ணெய், கோகோ பட்டர் மூன்றையும் குறைந்த தணலில் சூடாக்கவும். உருகியதும் அடுப்பிலிருந்து இறக்கவும். மற்ற பொருட்களை சேர்த்து கலந்து உபயோகிக்கவும்.

‘‘பாரபனுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கும்  தொடர்பிருப்பதாக நீண்ட கால ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருப்பதால், கூடியவரையில் அதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.’’

கால்களுக்கான கிரீம்...

ஆர்கானிக் தேன் - 1 கப்,
கொழுப்பு நீக்கப்படாத பால் - 1 டேபிள்ஸ்பூன்,
ஒரு முழு ஆரஞ்சுப் பழத்தின் சாறு.
    
தேனை லேசாக சூடாக்கவும். அதில் பால் மற்றும் ஆரஞ்சு சாறு சேர்க்கவும். கால்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்து, இறந்த செல்களை அகற்றி விட்டு, இந்தக் கலவை கொண்டு மசாஜ் செய்யவும். இந்தக் கலவையை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும். உபயோகிக்கிற போது வெந்நீர் உள்ள பாத்திரத்தில் சிறிது நேரம் வைத்திருந்து இளக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கை, கால்களின் அழகைப் பாதுகாக்க வீட்டிலும் பார்லரிலும் செய்யக்கூடிய சிகிச்சைகள், எளிய குறிப்புகள் அடுத்த இதழிலும் தொடரும்...

- வி.லஷ்மி