உண்ணும் முறையே உங்கள் ஆளுமையைத் தீர்மானிக்கிறது!
மேனர்ஸ்
-நமீதா ஜெயின்
கையால் சாப்பிடும் கலாசாரம் நம் இந்திய உணவுகளுக்கு வேண்டுமானால் பொருந்தும். மேற்கத்திய கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்துள்ள நம்மால் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள், முக்கிய நபர்கள் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடனான விருந்துகளில் உணவருந்த நேரும்போது சற்றுத் திணறித்தான் போகிறோம். சிறு வயதிலேயே வெளிநாடுகள் செல்லும் சாதனை மாணவர்கள் மேற்கத்திய உணவுகளை சாப்பிடும் வேளைகளில் சந்திக்கும் சங்கடங்கள் ஏராளம். நாம் உண்ணும்முறை, நம் ஆளுமையை அடையாளம் காட்டுவது.
பிரபல ஃபிட்னஸ் நிபுணரும், கிஷ்கோவின் நிர்வாக இயக்குனருமான நமீதா ஜெயின் `டைனிங் எடிக்யூட்’ (Dining Etiquette) என்ற அனிமேஷன் வீடியோ படத்தை அறிமுகப்படுத்த சென்னை வந்திருந்தார். பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் இவர்தான் ஃபிட்னஸ் ட்ரெயினர். “குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ்பிள்ளைகளுக்கு சாப்பிடும் வழிமுறைகளைக் கற்பிப்பதற்கான ஃபன்வே என்கிற இந்த அனிமேஷன் படம் பிரபல பிராண்டான கிஷ்கோவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் சமூக முனைப்பு. ஆரம்பக் கல்வி பயிலும் நிலையிலேயே மாணவர்களுக்கு உணவு விதிமுறைகளை கற்றுத்தரும்போது அவர்கள் மனதில் அவை ஆழமாக பதியும்” என்கிறார் நமீதா ஜெயின்.
“இந்திய உணவுகளை கைகளால் சாப்பிடுவது ஆரோக்கியமான பழக்கமாக இருப்பினும், எல்லா நேரங்களிலுமே நாம் இந்திய உணவுகளை மட்டும் சாப்பிடுவதில்லை. வேலை சார்ந்தோ, கலாசார நிகழ்வுகள் சார்ந்தோ மேற்கத்திய உணவுகளை சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் இந்தியாவின் ஒவ்வொரு இளைஞரும், குழந்தையும் சாப்பிடுவதில் ஒரு முறையான ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது விஷயம் இல்லை.
சாப்பிடும் முறையால்தான் நீங்கள் அடையாளம் காணப்படுகிறீர்கள்” என்பதை வலியுறுத்தினார். மேஜை கலாசாரத்தில், கைக்குட்டையை கையாள்வதில் தொடங்கி, சாப்பிட பயன்படுத்தும் பொருட்களை எந்தெந்த இடங்களில் வைக்க வேண்டும், சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், உட்காரும் முறை, பேரரிடம் பேசும் முறை, சாப்பிட்டு முடித்தவுடன் பிளேட்டை எப்படி வைப்பது? போன்ற எல்லாவற்றையும் குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த அனிமேஷன் படம் பள்ளிகளில் மட்டுமின்றி வீடுகளிலும் கட்டாயம் காண்பிக்க வேண்டிய ஒன்று. குழந்தைகளுக்கு மட்டுமல்ல.... பெரியவர்களுக்கும்தான்!
நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது விஷயம் இல்லை. சாப்பிடும் முறையால்தான் நீங்கள் அடையாளம் காணப்படுகிறீர்கள்.
- உஷா படம்: ஆர்.கோபால்
|