கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கதவுகள்!
-எழுத்தாளர் புதிய மாதவி
நிஜப்பெயர் மல்லிகா. இலக்கிய உலகில் புதிய மாதவி. சொந்த ஊர் தாமிரபரணி. நெல்லை மாவட்டம் என்றாலும், மும்பை வாசி. அதுவும் நாலாவது தலைமுறை. தாய்த் தமிழ்நாட்டை விட்டு விலகி இருந்தாலும், இவரது கதைகள் அதிகம் பேசுவது என்னவோ தமிழ் மண்ணின் மைந்தர்களையே. மும்பைக்கு பிழைப்பு தேடி வரும் மனிதர்களை, அங்கு தம் வாழ்வை பிணைத்துக்கொண்ட மனிதர்களின் வலிகளை யதார்த்தமாக பதிய வைப்பவர். வாசிப்பவர்களிடம் அதே வலிகளை கடத்தும் வரிகளுக்குச் சொந்தக்காரர். அவரோடு ஓர் உரையாடல்...
* உறவுகள் எழுத்துக்குத் தடையா? பக்க பலமா? உறவுகள் என்ற சொல்லை குடும்ப உறவுகள் என்று மட்டும் நீங்கள் கருத்தில் கொண்டால் எனக்கு அதனால் தடையும் இல்லை பலமும் இல்லை என்பதுதான் யதார்த்தம். ஏனெனில் மல்லிகா என்ற அவர்களின் உறவை அவர்கள் அறிந்திருக்கும் அளவுக்கு ‘புதிய மாதவி’ என்ற எழுத்தாளரை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அறியவும் விரும்பவில்லையா என்பதும் தெரியவில்லை. என் உறவுகளுக்கு மல்லிகா மட்டுமே போதுமானதாக இருக்கிறது. புதிய மாதவியைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. புதிய மாதவிக்கும் அவர்கள் கவனிக்கவில்லை என்பதைப் பற்றி கவலைப்பட நேரமில்லை!
* எழுத்துலக என்ட்ரி கான்கிரீட் சாலையா? கற்கள் நிறைந்த பாதையா? இது திட்டமிட்டெல்லாம் நடந்ததல்ல. ஒரு மத்திய தர வர்க்கப் பெண் எழுத வரும்போது என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வருமோ, அவை எனக்கும் இருந்தன. கவிதை எழுதும் பெண் குடும்பத்திற்கு லாயக்கற்றவள் என்ற சமூகத்தின் பொதுப்புத்தியை நானும் கடந்து வந்திருக்கிறேன் சில காயங்களுடன். கூடுதலாக இன்னொரு பிரச்னையும் இருந்தது. அதுதான் என் குடும்பத்தின் திராவிட இயக்கப் பின்னணி. நான் இன்னாரின் மகள் என்ற அடையாளம். திராவிட அரசியலை விமர்சிக்கும் போதெல்லாம் தந்தை பெரியார் மட்டும்தான் எனக்கான கவசமாக எப்போதும் இருக்கிறார்.
* மும்பை வாழ்க்கை பலமா? பலவீனமா? பலகீனம் என்று ஒரு காலத்தில் நான் நினைத்ததுண்டு. காரணம், மும்பையின் வாழ்க்கை சூழல். வாசித்தப் புத்தகங்களைப் பற்றியோ ரசித்த கவிதை பற்றியோ பேசுவதற்கோ விவாதிப்பதற்கோ யாருமற்ற வாழ்க்கையில் மூச்சு முட்டிய தருணங்கள் உண்டு. தமிழ் இலக்கிய சூழலில் தமிழ்நாட்டின் மையப்புள்ளியை விட்டு நான் தொலைவில் இருக்கிறேன். வணிகமயமான பத்திரிகைச் சூழலில் சிறு பத்திரிகைகள் மட்டுமே எங்கள் எழுத்துகளுக்கான கதவுகளைத் திறந்திருக்கும் நிலை. சென்னையில் ஒரு பதிப்பகத்தை அணுகுவதும் புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுவது என்பதும் ஒரு தமிழ்நாட்டில் வாழும் எழுத்தாளரைப் போல எனக்கு அவ்வளவு எளிதானதல்ல.
இன்றைய கணினியுகம் சில தடைகளைத் தகர்த்துவிட்டது. அதை என் போன்றவர்கள் மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். இணைய இதழ்கள், சமூக வலைத்தளங்கள் என்று எங்களாலும் பயணிக்க முடிகிறது. தமிழ்நாட்டின் இலக்கியச் சூழலில் நிலவும் குரூப்பிசம், தனிமனித தாக்குதல்கள், தனிமனித துதிகள் இத்தியாதி தாக்கம் எதுவும் எனக்கில்லை. நான் தெளிவாக இருக்கிறேன்.
மும்பையின் வாழ்க்கை எனக்கு பன்முகப் பார்வையைக் கொடுத்திருக்கிறது. HSBC என்ற பன்னாட்டு வங்கியில் 22 ஆண்டுகள் வேலை பார்த்து விருப்ப ஓய்வு எடுத்தவள் நான். ஒரு கார்பரேட் நிறுவனத்தின் அனைத்து முகங்களும் எனக்குத் தெரியும். ஆசியாவின் சேரி என்று நீங்கள் நினைக்கும் தாராவியில் பிறந்து வளர்ந்தவள் நான். மும்பையைப் பற்றி அந்தேரி, மாதுங்கா, செம்பூர் பகுதிகளில் வாழ்ந்துகொண்டு தாராவிக்கு வந்து எட்டிப்பார்த்துவிட்டு அதைப் பதிவு செய்யும் எழுத்துகள் அல்ல என்னுடைய எழுத்துகள். பன்மொழி பேசும் கவிஞர்களுக்கு நடுவில் என் தமிழ்க் கவிதை ஒலிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
களப்போராளியாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் எழுத்தாளர் அர்ஜூன் டாங்க்ளே என் பக்கத்துவீட்டுக்காரராக இருக்கிறார். கவிதா மகாஜன் மட்டுமல்ல... ஊர்மிளா பவாரும் என்னுடன் பயணிக்கிறார்கள். கான்கிரீட் காடுகளில் தொடரும் என் மும்பை வாழ்க்கை எனக்கும் என் எழுத்துகளுக்கும் எழுதுவதற்கான களத்தை விரித்திருக்கிறது. இக்களம் தனித்துவமானது என்பதுதான் பலம் என்று நினைக்கிறேன்.
* உங்கள் படைப்பில் உங்களுக்கு வெளிச்சம் தந்த படைப்பாக நீங்கள் கருதுவது... ஒரு படைப்பாளி தன் படைப்புகளில் இது வெளிச்சம், இது இருட்டு என்று சொல்வாரா? அப்படி சொல்ல முடியுமா? எதை வைத்துக்கொண்டு வெளிச்சத்தையும் இருட்டையும் கணக்கிடுவது? ம்ம்... என் படைப்புகளில் எந்தப் படைப்பு வெளிவந்த பின் நான் அதிகமாகக் கவனிக்கப்பட்டேன் என்று பார்த்தால்... என் இரண்டாவது கவிதை நூல், ‘ஹேராம்’ கவிதை தொகுப்பிற்குப் பின்னர்தான். முழுக்கவும் அரசியல் பின்னணியைக் கொண்ட கவிதைகள். மும்பை குண்டுவெடிப்புக்குப் பின் வெளிவந்தக் கவிதைகள்.
‘ஹேராம்... உன் ஜனனம் ஏன் சாபக்கேடானது? நீ முடிசூட வரும்போதெல்லாம் எங்கள் மனிதநேயம் ஏன் நாடு கடத்தப்படுகிறது...’ இப்படித் தொடங்கும் என் கவிதை. இத்தொகுப்பு வெளிவந்த பின் சற்றொப்ப 30க்கும் மேற்பட்ட விமர்சனங்கள், விவாதங்கள், மிரட்டல்கள் எல்லாமே என் கதவைத் தட்டின.
* உங்கள் அரசியல் அறிவு எழுத்திற்கான பலம் என்று உணர்ந்ததுண்டா? நிச்சயமாக. குடும்பத்தின் அரசியல் பின்னணி, வாசிக்க கிடைத்த எண்ணற்ற நூல்கள், சம்பவங்கள், தலைவர்கள், அவர்களின் முகங்கள் என இயக்கத்தின் வரலாற்றில் என் வாழ்க்கையும் கலந்திருக்கிறது. திராவிட இயக்கத்தின் எழுச்சிமிகு நாட்களை ஒரு குழந்தையாக இருந்து நான் அதிசயமாகப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். இந்த இயக்கத்திற்காக தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த எண்ணற்ற தொண்டர்களின் குடும்பங்களை நானறிவேன். அதே இயக்கத்தை இன்று அந்த வட்டத்திலிருந்து வெளியில் நின்று கொண்டு பார்க்கிறேன்.
சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கொண்டாடுகிறேன். இழந்து போனவை எவை? ஏன் இழந்தோம்? எதற்காக இழந்தோம்? யார் காரணம்? இவ்வளவு பெரிய விலையைக் கொடுக்க வேண்டிய காரணம் என்ன? எங்கே எப்போது தவறு நடந்தது? பெரியார் மட்டும் எனக்குப் போதவில்லை. எனக்கு மார்க்ஸ் தேவைப்படுகிறார். அம்பேத்கரின் அறிவாயுதம் ஏந்துகிறேன். மார்க்சியமும் பெரியாரியமும் அம்பேத்கர் என்ற புள்ளியில் சந்திக்கும் போது மட்டுமே இந்தியாவில் உண்மையான சமூக விடுதலை சாத்தியப்படும்.
* எழுத்துத் துறையில் உங்கள் முன்னோடிகள்... நான் தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் அக்காலத்தில் வெளிவந்த 70க்கும் மேற்பட்ட திராவிட இயக்கத்தின் இதழ்களையும் வாசித்தே வளர்ந்தேன். கல்லூரி நாட்களில் மார்க்சியமும் நவீன இலக்கியமும் அறிமுகமாகிறது. மதுரை பல்கலைக் கழகத்தில் முதுகலை இலக்கியத்தில் நவீன இலக்கியத்தை சிறப்புப் பாடமாக எடுத்திருந்தேன். பேராசிரியர் கனகசபாபதி, நடராஜன் (இரட்டையர்), நவநீத கிருஷ்ணன், ஜெயராமன், ராமசாமி, வேங்கடாசலம் என்று அன்று ஒரு பட்டாளமே இருந்தது. பல்கலைக்கழகத்தில் நடக்கும் வியாழ வட்டங்கள் எம் கல்லூரி காலத்தில் மிகவும் பிரபலமானவை. மிகவும் ஆரோக்கியமான ஒரு சூழலில் என் எழுத்துலகத்திற்கு அடித்தளம் அமைந்தது. ஜானகிராமன், ல.சா.ரா., புதுமைப்பித்தன். கு.ப.ரா., நீலபத்மநாபன் என்று எனக்கு நிறைய எழுத்துக் காதலர்கள் இருந்தார்கள் முன்னோடிகளாக...
* வலிந்து திணிக்காமல், தேவைப்பட்ட போது காமத்தை எழுதும் போதும் இந்த சமூகத்தைப் பற்றிய ஓர் அச்சம் பெண்களுக்கு வரத்தானே செய்கிறது? உங்களுக்கு இப்படிப்பட்ட சூழ்நிலை வந்ததுண்டா? அந்த நேரங்களை எப்படி கடக்கிறீர்கள்? பெரியாரியக்க பின்னணியில் வந்ததாலோ என்னவோ எனக்கு இம்மாதிரி எல்லாம் அச்சம் எதுவும் கிடையாது. நான் எழுதுவதெல்லாம் என் அனுபவமாக மட்டுமே இருக்க முடியும் என்று நினைப்பவர்களைப் பார்த்து எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. அந்த நேரங்களை கடந்து வருவது என்பதெல்லாம் சாத்தியமில்லை. அதிலும் குறிப்பாக ஒரு பெண்ணுக்கு. Sometimes I feel its traveling with me always like a parallel line...
* சிறுகதைத் தொகுப்பு என்பது பல கதைகளின் தொகுப்பாக இருக்கும். பல கதைகளை ஒன்றிணைக்கும் ஒரு நூல் போல தனியறையை மையமிட்ட உங்களின் ‘தனியறை’ என்ற அந்த கதைத் தொகுப்பு எனும் சிறந்த யோசனை உதிக்க எதாவது பின்னணி இருக்கிறதா? மனித வாழ்க்கையில் இடம் என்பதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. மும்பை போன்ற பெருநகரத்தில் அது என் வாழ்க்கையில் ஓர் அங்கம்.
என் வாழ்க்கையை என் மனிதர்களின் கதைகளை என்னால்தான் எழுத முடியும். நானும் ஏற்கனவே உங்களிடம் சொல்லியதைப் போல தாராவியில் பிறந்து வளர்ந்து, அதன் ஒவ்வொரு அனுபவங்களையும் சுமந்து கொண்டுஇருப்பவள். தனியறை ஒரு சிறந்த ஐடியா என்பது மொத்தம் 26 கதைகளை எழுதி அதன் பின் தனியறை என்ற தலைப்பில் மருதா புத்தகம் வெளியிட்ட பின்னர்தான் விஸ்வரூபம் எடுத்தது.
இது ஒரு சிறந்த ஐடியா, மிகச்சிறந்த யோசனை, எப்படி இதைத் தீர்மானித்தீர்கள் என்றெல்லாம் ஒவ்வொருவரும் இன்றுவரை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நான் அப்படி எல்லாம் ஒரு திட்டமிடலுடன் அக்கதைகளை எழுதவில்லை. அப்போது மும்பையில் தமிழ் போஸ்ட் என்ற வார இதழ் வெளிவந்துக் கொண்டிருந்தது. இதழாசிரியர் நண்பர் ராஜாவாயிஸ் இரண்டரைப் பக்கங்கள் எனக்கு ஒதுக்கினார். முதல் கதை தனியறை வெளிவந்த பின், அடுத்த கதை தனியறை 2 என்று அனுப்பினேன்.
வார இதழ் என்பதால் ஒரு கதை வெளிவந்தவுடன் அடுத்த கதை... அடுத்த கதை என்று ஒவ்வொரு தனியறையும் தன் கதவுகளைத் திறந்தது. எல்லா கதைகளும் கதைகளின் மையக்கருவும் கதைப் பாத்திரங்களைவிடவும் நிஜமானவை. ஒருவகையில் அந்த ஒவ்வொரு அறையும் மும்பை வாழ்க்கையின் ஒவ்வொரு நாட்கள். அதில் நான் எழுதியிருப்பது ஒரு சிறு துளிதான்.
* அந்தக்கால பெண் படைப்பாளிகள் பெரும்பாலும் உரைநடை எழுது பவர்களாகவும், இந்தக்கால பெண் படைப்பாளிகள் அதிகம் கவிதை எழுதுபவர்களாகவும் இருக்க காரணம்? அவசர உலகம். குடும்பச்சுமையுடன் வேலை பார்க்கும் மன அழுத்தத்தில் கூர்மையடையும் மொழி. இவற்றுடன் நவீன கவிதைக்கான இடமும் வளர்ச்சியும். பொதுவாக என்னையே எடுத்துக்கொண்டால், என் கவிதைகள் இம்மாநகரத்தின் ஜனநெரிசலான பயணத்தில் நின்றுகொண்டே பயணிக்கும் போது எழுதியவை. கவிதையை இப்படி எழுதி விட முடியும். உரைநடை எழுதுவது இம்மாதிரி சூழலில் சாத்தியமா?
* படிப்பு, வேலை என பெண்கள் முன்னேற்றம் ஒரு புறமிருக்க பெண்களுக்கு எதிரான வன்முறையும் அதிகரித்து வருவதன் காரணம் என்ன? நம் பண்பாட்டு அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையே. இன்றைய பெண்ணின் படிப்பு, வேலை, வேலை நிமித்தம் இடம் பெயர்தல்... இவை அனைத்தும் ஆணின் இறுக்கமான வளையத்தைவிட்டு வெளியில் வந்துவிட்டதற்கான புற அடையாளங்கள். நம் பண்பாட்டு அரசியலோ பெண்ணின் இடம்பெயர்தலை, அவளால் தனித்து வாழ முடியும் என்பதை இன்னும் செரித்துக்கொள்ள முடியாமல் அஜீரணத்தில் அவதிப்படுகிறது. அதன் விளைவு. முன்னைவிட கேவலமாக மிருக பலத்துடன் பெண் தாக்கப்படுகிறாள். நம் கல்வி, நம் இலக்கியம், நம் ஊடகம் இவை எல்லாம் பெண்ணை சக மனுஷியாக சித்தரிக்க வேண்டும்.
* பெண்களின் வெளி உலகம்..? மூடிய கதவுகள் திறந்திருக்கின்றன. நாம் திறக்காத கதவுகள் இன்னும் இருக்கின்றன. அவற்றில் சில கதவுகளைத் திறக்க வேண்டிய அவசியமில்லை. அவை உடைக்கப்பட வேண்டியவை. இத்துடன் புதிது புதிதாக புறக்கண்ணுக்குத் தெரியாத கதவுகள், கண்ணாடிக்கதவுகள் கட்டி எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுதான் இப்போது கவலை அளிக்கிறது. ஏனெனில், இக்கண்ணாடிக்கதவுகளை உடைக்கும் போது நம் கைகளில் காயம் ஏற்படும். காயப்பட வேண்டும் என்பதற்காகவே எழுப்பப்பட்டிருக்கும் கண்ணாடிக்கதவுகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆபத்தானவை.
* தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப்போக்கு எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்? எழுதாமல் பல நாட்கள் நான்இருந்ததுண்டு. புத்தகம் வாசிக்காமல் என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. எப்போதும் புதுவரவுகளையும் மாற்றங்களையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். என்ன... புத்தகம் வெளிவந்தவுடன் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு உடனடியாக வாங்கி வாசிக்கும் வாய்ப்புண்டு. மும்பையில் அத்துணை வாய்ப்புகள் இல்லை. விதிவிலக்காக சிலர் புத்தகங்களை இணையத்தில் வாங்க முடியும். எழுத்துக்கும் எழுத்தாளருக்கும் அரசியல் இருக்கலாம். இருக்க வேண்டும்.
ஆனால், அரசியல் லாபங்களுக்காக எழுதுவதும் அங்கீகாரங்களுக்காக தன் எழுத்தை ஊனமாக்கி பிச்சைப்பாத்திரத்துடன் அலைய விடுவதும் கேவலம். அகல உழுவதை விட ஆழ உழுவதே நல்லது என்பார்கள். அது வயலுக்கு மட்டுமல்ல... இலக்கிய வளர்ச்சிக்கும் பொருந்தும். எழுத வருபவர்களின் வாசிப்பு அனுபவம் எனக்கு வருத்தம் அளிக்கிறது.
அடுத்த இலக்கு..? மும்பை வாழ்க்கையைப் பற்றி இன்னும் எழுத வேண்டியது நிறைய இருக்கிறது. நான்கு தலைமுறையாக மும்பை தமிழர்களின் வாழ்க்கை உடன் அவர்களின் ஆரம்ப காலம் முதல் பயணித்த ஒரு குடும்பத்தின் கதையும் என்னிடம் இருக்கிறது. அக்கதையுடன் மும்பை தமிழர்களின் அரசியலும் இயக்க வரலாறும் கலந்திருக்கிறது. தமிழர் பேரவை ஆரம்பித்த நீங்கள் அனைவரும் கமலஹாசனின் நாயகனாக மட்டுமே அறிந்திருக்கும் பெரியப்பா வரதாபாய் இருக்கிறார். இஸ்லாமிய சகோதரர்கள் இருக்கிறார்கள்.
அம்பேத்கர் முகம் காட்டுகிறார். பெரியாரும் ஜின்னாவும் வருகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து காவல் துறையின் கண்களில் படாமல் இருக்க எங்கள் சால் வீடுகளில் வாழ்ந்த கம்யூனிஸ்ட் தோழர்கள் இருக்கிறார்கள். எப்போதும் புகை வந்து கொண்டிருந்த காட்டன் மில்கள் மூடப்பட்டு வீதியில் அனாதையாக அலைய விடப்பட்ட பல்லாயிரம் குடும்பங்களின் கதைகள் இருக்கின்றன. வருடா வருடம் என்னை அலைக்கழிக்கும் கண்பதிபப்பா மோரியா வேறு இருக்கிறார். எனக்கு எழுத வேண்டியது இன்னும் அதிகமாக இருக்கிறது.
* ‘குங்குமம் தோழி’களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது... தோழியருக்கு... எப்போதும் உங்கள் சுயமிழக்காதீர்கள். ஆணுக்கு தந்தையாகவும் குடும்பத்தலைவனாகவும் தன் சுயமிழக்காமல் வாழ்வது சாத்தியப்படுகிறது என்றால், நிச்சயம் அது ஒரு பெண்ணுக்கும் சாத்தியப்படும். உங்களில் ஒருத்தியாகவே நானும் இருக்கிறேன். மீண்டும் சந்திப்போம்!
‘ஐந்திணை’, ‘பெண் வழிபாடு’, ‘மின்சார வண்டி கள்’ உள்பட பல நூல்களை எழுதியவர். ‘பெண் வழிபாடு’ சிறுகதை நூலுக்காக 2014க்கான ஜெயந்தன் இலக்கிய விருது பெற்றார். இவரது நிழல்களைத் தேடி’ கவிதைத் தொகுப்புக்கு கவிஞர் சிற்பி இலக்கிய விருது கிடைத்துள்ளது.
மனித வாழ்க்கையில் இடம் என்பதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. மும்பை போன்ற பெருநகரத்தில் அது என் வாழ்க்கையில் ஓர் அங்கம். என் வாழ்க்கையை என் மனிதர்களின் கதைகளை என்னால்தான் எழுத முடியும்.
இன்றைய பெண்ணின் படிப்பு, வேலை, வேலை நிமித்தம் இடம் பெயர்தல்... இவை அனைத்தும் ஆணின் இறுக்கமான வளையத்தை விட்டு வெளியில் வந்துவிட்டதற்கான புற அடையாளங்கள். நம் பண்பாட்டு அரசியலோ பெண்ணின் இடம் பெயர்தலை, அவளால் தனித்து வாழ முடியும் என்பதை இன்னும் செரித்துக்கொள்ள முடியாமல் அஜீரணத்தில் அவதிப்படுகிறது.
எப்போதும் உங்கள் சுயம்இழக்காதீர்கள். ஆணுக்கு தந்தையாகவும் குடும்பத்தலைவ னாகவும் தன் சுயமிழக்காமல் வாழ்வது சாத்தியப்படுகிறது என்றால், நிச்சயம் அது ஒரு பெண்ணுக்கும் சாத்தியப்படும்.
தொகுப்பு: ஸ்ரீதேவி மோகன்
|