மக்களுககாக அறிவியல் வளர்க்கிறார்!
சிறந்த இளைஞர் விருது - மாஷா நசீம்
சாதனைகளுக்காக மகுடம் சூடப் பெறுகிறவர்களுக்கு மத்தியில் சாதனையாளர்களை உருவாக்கியதற்காக பாராட்டுகளை பெற்றுள்ளார் மாஷா நசீம். முதலமைச்சரின் சிறந்த இளைஞருக்கான விருது (பெண்கள் பிரிவு) பெற்றுள்ளார். நாகர்கோவிலில் பகுதியில் ‘மாஷா இன்னோவேஷன் சென்டர்’ அமைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு நம்பிக்கையின் வாசலாக வலம் வருகிறார். பள்ளிகளில் அறிவியல் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி, குட்டி விஞ்ஞானிகளை கண்டறிவது, பள்ளிகளில் தன்னம்பிக்கை பேச்சாளராக களம் இறங்கி, சாதிக்க துடிக்கும் மாணவர்களின் கரம் பற்றிக் கொள்வது என மாணவர்கள் மத்தியில் மாஷா இப்போ லேடி கலாம்!
தனது கண்டுபிடிப்புகளுக்காக தேசிய அளவில் விருதுகளை வென்றவர் மாஷா. இரண்டு முறை அப்துல் கலாம் விருது வென்றுள்ளார். மக்களின் வாழ்வை எளிமைப்படுத்துவதற்கான கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளார். இதுவரை இவரது இன்னோவேஷன் சென்டரில் பயிற்சி பெற்ற 6 மாணவர்கள் தேசிய அளவில் விருதுகளை அள்ளியுள்ளனர். நாகர்கோவிலை சேர்ந்த காஜா நசீமுதீன், சுமையாபேகம் ஆகியோரின் மகள் மாஷா... எம்.டெக். பவர் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பு.
‘‘வீட்டுக்குள் திருடர்கள் வந்தால் அடிப்பதற்கான அலாரம் உருவாக்கினேன். எனது 9 வயதில் உருவான அதுவே முதல் படைப்பு. நெருப்பே இல்லாமல் அரக்கு சீல் வைப்பது, ஹைடெக் டிரெயின் டாய்லெட், ஏர்போர்ட்டில் பயன்படுத்துவதற்கான மெக்கானிக்கல் போர்ட்டர் ஆகிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினேன். 2009ல் எனது கண்டுபிடிப்புகளுக்கான முதல் அப்துல்கலாம் விருது கிடைத்தது. எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் இரண்டிலும் ஆர்வம். டான்ஸ், பாட்டு, ஓவியம் கற்றுக் கொண்டாலும் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதே மிகவும் பிடித்திருந்தது.
சென்னை எஸ்.எஸ்.எம். கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்தேன். அடுத்து பவர் எலெக்ட்ரானிக்சில் எம்.டெக். சேர்ந்தேன். கல்லூரி காலத்தில் நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன் மூலம் இக்னைட் அவார்டு பற்றி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளிகளில் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஐடியாவுடன் இருக்கும் பல மாணவர்களுக்கும் அதை புராடக்டாக உருவாக்க வசதியும் வழிகாட்டுதலும் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.
இவர்களுக்கு உதவும் எண்ணத்துடன் நாகர்கோவிலில் மாஷா இன்னோவேஷன் சென்டர் அமைத்தேன். இதற்காக என் பாட்டி சஃபியா ரூ.1 லட்சம் ெகாடுத்து உதவினார். இங்கு மாணவர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான எக்யூப்மென்ட் இருக்கும். www.mashanazeem.in என்ற இணையதளம் தொடங்கினேன். இதில் மாணவர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர். அறிவியல் கண்டுபிடிப்புகள், போட்டிகள் குறித்தும் அறிந்து கொள்கின்றனர்.
கண்டுபிடிப்பை உருவாக்குவதற்கு மாணவர்கள் முதலில் ஒரு பிரச்னையை கண்டுபிடிக்க வேண்டும். அந்த பிரச்னையோடு தனது ஐடியாவை இணைக்க வேண்டும். மாணவர் கண்டுபிடிக்கும் பொருள் இந்த சமூகத்துக்கு உதவ வேண்டும். அது மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும். அறிவியல் கண்டுபிடிப்பின் நோக்கமே மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு எளிய தீர்வுகளை அளிப்பதுதானே? இதை நோக்கியே மாணவர்களையும் அழைத்துச் செல்கிறேன். இன்னோவேஷன் சென்டரில் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 6 பேர் தேசிய விருது பெற்றது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது.
மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த இதுவரை 100க்கும் அதிக பள்ளிகளில் தன்னம்பிக்கை பேச்சாளராக பங்கேற்றுள்ளேன். சிங்கப்பூர், துபாய், சார்ஜா ஆகிய நாடுகளில் உள்ள பள்ளிகளுக்கும் தன்னம்பிக்கை பேச்சாளராகச் சென்று வந்தேன். விரும்பும் பள்ளிகளில் 10 நாட்கள் வரை அறிவியல் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி சின்னச் சின்ன ஐடியாக்கள் கண்டுபிடிப்புகளாக வடிவம் பெற பயிற்சி அளிக்கிறேன். தேசிய அளவில் விருதுகள் வாங்கியிருந்தாலும் எனது மாநிலத்திலேயே விருது கிடைப்பதை மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன்.
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நான் பெற்ற விருதுகளே கல்லூரிப் படிப்பைத் தொடரவும் உதவின. இலவசமாக எம்.டெக். படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் சமுதாயத்தில் இருக்கும் வழக்கமான எதிர்ப்புகள் தொடக்கத்தில் எனக்கும் இருந்தது. அப்பா அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் என் ஆர்வத்துக்கு மதிப்பளித்தார்.
அந்த நம்பிக்கையே எனக்கு இவ்வளவு பெருமைகளைத் தந்துள்ளது. அரசின் உதவி கிடைத்தால் இன்னோவேஷன் சென்டர்களை அரசுப் பள்ளிகளில் உருவாக்கலாம். இதையே அறிவியல் பயிற்சிகள் அளிப்பதற்கான பிசினஸ் மாடலாக உருவாக்கும் எண்ணமும் உள்ளது. தொடர்ந்து மாணவர்களோடு பயணிப்பதும் புதிய விஞ்ஞானிகளை உருவாக்குவதும்தான் என் பணி. அப்துல் கலாமின் விதைகளில் ஒன்றே நான்...’’ என்று பெருமிதப்படுகிறார் இந்த லேடி கலாம்!
அறிவியல் கண்டுபிடிப்பின் நோக்கமே மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு எளிய தீர்வுகளை அளிப்பதுதானே? இதை நோக்கியே மாணவர்களையும் அழைத்துச் செல்கிறேன்...
|