பருப்புக் கீரை
பரவலாக எல்லா நாடுகளிலும் காணக்கூடிய கீரை வகைகளில் ஒன்று பருப்புக்கீரை. அகிலம் எங்கும் ஆரோக்கியமான கீரையாக அறியப்பட்ட இதன் மருத்துப் பயன்களை பட்டியல் இடுவதுடன், அதைக் கொண்டு சுவையான 3 ஆரோக்கிய உணவுகளையும் செய்து காட்டியிருக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் நித்யஸ்ரீ
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி, நீண்ட கால நோய்களின் தாக்கத்தைக் குறைக்கக்கூடியது. பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்வது. பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்ற உதவும். அடிக்கடி பருப்புக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடல் சூடு தணியும். மலச்சிக்கல் நீங்கும். குறிப்பாக வயதான காலத்தில் மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கு பருப்புக்கீரை மசியல் போன்று மகத்தான மருந்து வேறில்லை. வெயில் காலத்தில் உண்பதற்கு ஏற்ற கீரை இது. பருப்புக் கீரை மசியலுடன், நீராகாரம் சேர்த்து சாப்பிட்டு வர, வெயில் காலத்தில் ஏற்படுகிற உடல் சூடு, நீர்க்கடுப்பு, வியர்க்குரு, வேனல்கட்டிகள் போன்றவை தவிர்க்கப்படும். அதே போல கிராமங்களில் வெயில் காலத்தில் ஏற்படுகிற அம்மை மற்றும் அக்கி பிரச்னைகளுக்கும் பருப்புக் கீரையை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். பருப்புக்கீரையை நன்கு ஆய்ந்து, சுத்தமாக அலசி, அரைத்து, அக்கி வந்த இடங்களில் மேல்பூச்சாகத் தடவி வந்தால், கொப்புளங்கள் மறைந்து, உடல் குளுமையடையும் என்பது அவர்களது நம்பிக்கை. வயதுக்கேற்ற வளர்ச்சியில்லாமல் மெலிந்து காணப்படுகிற குழந்தைகளுக்கு, பருப்புக்கீரையுடன் குடைமிளகாயும் வெங்காயமும் சேர்த்து சமைத்துக் கொடுக்க, உடல் தேறும். பருப்புக்கீரையுடன் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால், தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் மெலியும். கலோரி குறைவாகக் கொண்டது என்பதால் பருப்புக்கீரையை மட்டுமே கூட முழு உணவு அளவுக்கு எடுத்துப் பசியாறலாம். பருப்புக்கீரையின் விதைகளை அரைத்து இளநீரில் சேர்த்துக் குடித்தால் பேதியும், வயிற்று உபாதைகளும் சரியாகும். பருப்புக்கீரை சாற்றுடன், சம அளவு கரிசலாங்கண்ணிக் கீரை சாறும் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் ஆரோக்கியம் மேம்படும். பருப்புக் கீரையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது மூளையின் செயல் திறனுக்கு மிகவும் ஏற்றது. ADHD பிரச்னை வராமலும் தவிர்க்கக்கூடியது. பருப்புக்கீரையில் அபரிமிதமான அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை நுரையீரல் பாதிப்புகளில் இருந்து காக்கக்கூடியவை. வாய்ப் புற்றுநோயைத் தவிர்க்கக்கூடியவை.
எப்படி சமைப்பது? * பருப்புக் கீரையின் பூக்கள், தண்டு போன்றவையும் உண்ணக்கூடியவையே. பருப்புக் கீரையை குறைந்த தணலில் குறைந்த நேரமே சமைக்க வேண்டும். ஆவியில் வேக வைத்து சமைப்பது அதில் உள்ள சத்துகளை முழுமையாக நமக்குத் தரும். * பருப்புக் கீரையை சாலட்டில் சேர்க்கலாம். பொரியல், கூட்டு உள்ளிட்ட எந்த உணவுடனும் பருப்புக் கீரையையும் சிறிது சேர்த்து சமைக்கலாம். * சூப்பாக செய்து சாப்பிடலாம். கீரையை உபயோகித்துச் செய்கிற அடை, தோசை போன்றவற்றில் சேர்க்கலாம். * கூடிய வரையில் பருப்புக் கீரையை பறித்த உடனே அல்லது வாங்கிய அன்றே சமைத்து விடுவது சிறந்தது. யாருக்குக் கூடாது?
பருப்புக் கீரையில் உள்ள ஆக்சாலிக் அமிலம், சிலருக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகக் காரணமாகலாம். எனவே, சிறுநீரகக் கல் மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பருப்புக் கீரையைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. மற்றவர்களும் பருப்புக் கீரை உண்ணும் போது வழக்கத்தைவிட சற்று அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லது.
பருப்புக்கீரை பருப்பு உருண்டைக் குழம்பு
என்னென்ன தேவை?
பருப்புக்கீரை - 1 கப், ஊற வைத்து, அரைத்த கடலைப்பருப்பு - 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, கறிவேப்பிலை, ெகாத்தமல்லி - சிறிது, புளி - எலுமிச்சை அளவு, மிளகாய் தூள் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 15 மி.லி., வெந்தயம் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி - 2, நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் அரைத்த பருப்பு, சுத்தம் செய்து ஆய்ந்த பருப்புக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசையவும். சின்னச் சின்ன உருண்டைகளாக்கி, ஆவியில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம் தாளிக்கவும். கறிவேப்பிலை, சிறிது வெங்காயம் சேர்த்துப் பொன்னிறத்துக்கு வதக்கவும். தக்காளி சேர்க்கவும். கொதித்ததும் புளித் தண்ணீர், மிளகாய் தூள், உப்பு சேர்த்து மேலும் சில நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் ஆவியில் வேக வைத்த உருண்டைகளை மெதுவாகச் சேர்க்கவும். இறக்கும் போது 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, இன்னும் கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
பருப்புக்கீரை பணியாரம்
என்னென்ன தேவை?
பருப்புக்கீரை - 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப, பணியார மாவு - 2 கப், எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் சூடாக்கி, பச்சை மிளகாய், வெங்காயம், பருப்புக் கீரை சேர்த்து வதக்கவும். இதை பணியார மாவில் கலக்கவும். உப்பு சேர்க்கவும். பணியாரக் கல்லில் சிறிது சிறிதாக விட்டு, லேசாக எண்ணெய் விட்டு இரு புறங்களும் வெந்ததும் எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.
பருப்புக்கீரை புலாவ்
என்னென்ன தேவை?
பருப்புக்கீரை - 1 கப், பாஸ்மதி அரிசி - 1 கப், சோம்பு - அரை டீஸ்பூன், நெய் - 15 மி.லி., திராட்சை - 3, தேங்காய்ப் பால் - 2 கப், உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
குக்கர் பாத்திரத்தில் நெய்யை சூடாக்கவும். அதில் சோம்பு, திராட்சை, பருப்புக்கீரை சேர்த்து வதக்கவும். பிறகு அரிசி சேர்த்து லேசாக வதக்கி, தேங்காய்ப்பால் விட்டு, உப்பு சேர்த்து 2 விசில் வைத்து இறக்கவும். ஏதேனும் ஒரு காய்கறி கிரேவியுடன் சூடாகப் பரிமாறவும்.
வயதுக்கேற்ற வளர்ச்சியில்லாமல் மெலிந்து காணப்படுகிற குழந்தைகளுக்கு, பருப்புக்கீரை உடன் குடைமிளகாயும் வெங்காயமும் சேர்த்து சமைத்துக் கொடுக்க, உடல் தேறும்.
என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)
ஆற்றல் - 27 கிலோ கலோரிகள் ஈரப்பதம் - 90 கிராம் புரதம் - 2 கிராம் கொழுப்பு - 1 கிராம் தாதுச்சத்து - 2 கிராம் நார்ச்சத்து - 1 கிராம் கார்போஹைட்ரேட் - 3 கிராம் கால்சியம் - 111 மி.கி. பாஸ்பரஸ் - 45 மி.கி. இரும்புச்சத்து - 15 மி.கி.
எழுத்து வடிவம்: ஆர்.கெளசல்யா படங்கள்: ஆர்.கோபால்
|